புதுடில்லி, மே 5 இந்திய அளவில் நடைபெறும் ஆணவப் படுகொலைகளைக் குறித்தும், அவற்றின் மீதான நடவடிக்கைகள், ஆணவப் படுகொலைகளைத் தடுக்கவும், அதில் பாதிக்கப்பட வாய்ப்பிருப்போரைக் காக்கவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் தலைநகர் டில்லியில் கடந்த 26 ஆம் தேதி கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கலந்துகொண்டு கருத்துரையாற்றினார்.
ரூபாந்தர் – ஆசிப் இக்பால்
‘தானக் ஆஃப் ஹியூமானிட்டி’ என்னும் லாப நோக்கற்ற நிறுவனம், 2004 ஆம் ஆண்டு முதல் மதமறுப்பு, ஜாதி மறுப்புத் திருமண இணையரின் பாதுகாப்புக்காக நடத்தப்பட்டு வருகிறது. குடும்பத்தினரால் ஆணவப் படுகொலைகளுக்கும், தாக்குதல்களுக்கும் ஆளாகும் நிலையை எதிர்கொள்ளும் பணிகளைத் தொடர்ந்து செய்து வரும் இவ் வமைப்பு, இதற்கான வழக்குகள், சட்ட வாய்ப்புகள், பாதிக்கப்பட்டோரின் நலன், அவர்க ளுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இக் கருத்தையொட்டி களத்தில் செயல்படும் அமைப்புகளுடனான கலந்துரையாடலும், ஆணவக் கொலைத் தாக்குதலை எதிர்கொண்டோர், தப்பித்தோர் ஆகியோரின் அனுபவப் பகிர்வும் கடந்த ஏப்ரல் 26 அன்று புதுடில்லி, லோதி சாலையில் உள்ள இண்டெக்ரேட்டட் சோசியல் இனிஷி யேட்டிவ்ஸ் கட்டடத்தில் நடைபெற்றது.
‘மனிதத்தின் வானவில்’ என்று பொருள்படும் ‘தானக் ஆப் ஹியுமானிட்டி’ அமைப்பின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான ஆசிப் இக்பால் வரவேற்று, 5-ஆம் முறையாக நடைபெறும் ரூபாந்தர் என்ற கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து பங்கேற்றிருப்போரைக் குறித்தும், குறிப்பாக தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணத்தை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டி வரும் பெரியார் இயக்கம் குறித்தும் சிறிய அறிமுகத்தையும் அவர் வழங்கினார்.
மனித உரிமைச் செயல்பாட்டாளர்
வழக்குரைஞர் விருந்தா கிரோவர் உரை
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற மூத்த வழக்குரைஞரும், மனித உரிமை, மகளிர் உரிமைச் செயல்பாட்டாளருமான விருந்தா கிரோவர் பங்கேற்று உரையாற்றினார்.
ஆணவக் கொலைகளைக் (Honour killings) குறித்த முக்கியமான பல பிரச்சினைகளைக் கவனத்திற்குக் கொண்டுவந்தார். கும்பல் கொலைகளைக் குறித்த புதிய இந்திய தண்டனைச் சட்டத்தின் (BNS) பிரிவு 103(2)ன் கீழ் உள்ள சட்ட அம்சங்களைப் பற்றி விவாதித்த அவர், ஆணவக் கொலைகளைப் புதிய சட்டம் கணக்கில் கொள்ளவில்லை என்பதையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய வழக்குரைஞர் விருந்தா கிரோ வர் ஆங்கிலத்தில் “கவுரவக் கொலை” (Honour Killing) எனும் சொல்லை மீளாய்வு செய்ய வேண்டியிருக்கிறது. ஏனெனில், இது ஒரு கொடூரமான கொலைக்குக் “கவுரவம்” என்ற தவறான விளக்கம் அளிக்கிறது. அதற்குப் பதிலாக, உண்மையைச் சரியாகக் காட்டக்கூடிய புதிய சொற்றொடர் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இது திட்டமிட்டு செய்யப்படும் ஒரு கொலை என்பதைத் தெளிவாகவே குறிப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், குறிப்பிட்ட சில வழக்குகளைக் குறிப்பிட்டு, இந்தப் பிரச்சினையைச் சுற்றியுள்ள சட்ட மற்றும் சமூகச் சவால்களை எதிர்கொள்வது பற்றிய தன்னுடைய கருத்து களை வழங்கினார். வட மாநிலங்களில் புழக்கத்தில் இருக்கும் காப் பஞ்சாயத்துகளை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார்.
தமிழ்நாட்டில் பெரியார் இயக்கத்தால் அறிமுகப்ப டுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணமும், அதற்கான சட்ட அங்கீகாரமும் இத் திசையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் செயல்பாடுகள் என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டைப் பின்பற்றி இந்தியா முழுமைக்கும் இந்தச் சூழலை உருவாக்க வேண்டியிருப்பதைக் கோடிட்டுக் காட்டினார். சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கங்களும் ஆற்றியிருக்கும் பணிகளை நேரில் காண விரும்புவதாகவும் தெரிவித்தார். மனித உரிமை, பெண்ணுரிமை சார்ந்த பல முக்கிய வழக்குகளை முன்னெடுத்து வாதாடிய மூத்த வழக்குரைஞர் விருந்தா கிரோவரின் உரையும், அதில் அவர் தமிழ்நாட்டுக்குத் தந்த முக்கியத்துவமும் வந்திருந்தோர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அவரது உரையைத் தொடர்ந்து, தானக் அமைப்பின் செயல்பாடுகளை முன்வைத்தும், இந்தியா முழுவதும் நடை பெறும் ஆணவக் கொலைகளைப் பற்றியும் படக்காட்சி காட்டப்பட்டது. இந்திய அளவில் உத்தரப்பிரதேசத்தில் அதிக ஆணவக் கொலைகள் நடப்பதை புள்ளிவிவரங்கள் மூலம் எடுத்துக்காட்டினர்.
பாதிக்கப்பட்டோர் அனுபவங்கள்
ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018-ஆம் ஆண்டு டில்லியில் அங்கித் சக்சேனா என்பவர் மதமறுப்புக் காதலுக்காக ஆணவக் கொலை செய்யப்பட்டார். அவரது வழக்கு நெடுங்காலம் நடந்துவந்தது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் குற்றவாளிகளுக்கு அது குறித்து குரலெழுப்பிய அவரது தாயார் கமலேஷ் சக்சேனா, தனக்கு இன்னும் சரியான நீதி கிடைத்ததாகத் தான் ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மற்றொருவர், அரியானாவில் கடந்த ஆண்டு (நவம்பர் 2024) ஆணவக் கொலையில் கணவர் ராஜ் பாபுவை இழந்த ரின்க்கி. இவர் தான் பிறந்த குடும்பத்தாரின் கொலை முயற்சிகள் இன்றும் தொடர்வதாகத் தெரிவித்தார். மறைந்த தன் கணவர் குடும்பத்தினருடன் தற்போது வசித்துவரும் ரின்க்கி, ஆணவக் கொலைகளுக்கெதிரான நடவடிக்கைகளின் அவசியத்தை அழுத்தமாக உணர்த்தினார். வட மாநிலங்களில் சட்டமும், அதைச் செயல்படுத்துவோரும் இப் பிரச்சினையில் இன்னும் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பதையே இவர்களின் கருத்துகள் உணர்த்துகின்றன.
மகாராட்டிரா அந்தஷ்ரத்தா
நிர்மூலன் சமிதி
அதனைத் தொடர்ந்து, நரேந்திர தபோல்கரால் நிறுவப்பட்ட மகாராட்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் சார்பில் நிகழ்வில் பங்கேற்றிருந்த சங்கர் கான்சே, அவ் வமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பட்டியலிட்டார். ஆணவத் தாக்குதல் ஆபத்துள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான மய்யங்கள் அமைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
ராஜஸ்தான் விசாகா
ராஜஸ்தானில் செயல்படும் விஷாகா அமைப்பின் சார்பில் உமா பலிவால், மற்றொரு உண்மைச் சம்பவத்தை முன்னிறுத்திக் கருத்துரைத்தார். காட்சிப் பதிவாகவே ‘‘தான் கொல்லப்படலாம்’’ என்பதைப் பதிவு செய்து, தனது உடன் பணியாளர் உமா பலிவாலுக்கு அனுப்பிவிட்டு, கொல்லப்பட்ட கதையையும், அதன் வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றிருப்பதையும் எடுத்துக் கூறினார்.
திராவிடர் கழகத்
துணைப் பொதுச்செயலாளர் உரை
பின்னர் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை பெரியார் திடலைத் தலைமையிடமாகக் கொண்டியங்கிவரும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில் உரையாற்றினார். சுயமரியாதைத் திருமணத்தின் வரலாறு, சட்டம், நடைமுறைகள் பற்றியும், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் பண்பாட்டுப் புரட்சியாகத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம் ஜாதி ஒழிப்பு, மத மறுப்பு, துணையை இழந்தோர் மறுமணம் ஆகியவை பெரும் எண்ணிக்கையில் நடை பெற்றதையும், ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெருமளவில் நடைபெறுவதற்கு சுயமரியாதைத் திருமணச் சட்டம் வாய்ப்பை ஏற்படுத்தியதையும் எடுத்துரைத்தார்.
கவுரவக் கொலை அல்ல;
ஆணவக் கொலை
முன்பு பேசிய விருந்தா கிரோவர் சொன்னதை நினைவுகூர்ந்த பிரின்சு என்னாரெசு பெரியார், தமிழில் ‘கவுரவக் கொலை’ என்ற சொல் ஒழிக்கப்பட்டு, அது கவுரவமோ, பெருமையோ அல்ல; ஜாதி ஆணவம் என்பதைச் சுட்டும்வகையில் ‘ஆணவக் கொலை’ என்று பெயர் புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அதற்கு பிற மாநிலத்தவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன என்றாலும், அவற்றைத் தடுக்கவும், முற்றிலும் அந்தக் கேட்டை ஒழிக்கவும் தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகளையும், பிரச்சாரங்களையும் சுட்டிக்காட்டினார்.
‘‘கருஞ்சட்டைத் தோழர் இல்லங்களே பாதுகாப்பு மய்யங்கள்!’’
ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்குக் கழகத் தோழர்களின் வீடுகளே பாதுகாப்பிடங்களாகத் திகழ்கின்றன என்ற வகையில், தந்தை பெரியார் காலந்தொட்டு, பல்லா யிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர் வீடுகள் எல்லாம் ஜாதி மறுப்பாளர்களுக்கான பாதுகாப்பு மய்யங்களே என்று தெரிவித்ததும், கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தருமபுரியில் திராவிடர் கழகத் தலைவர் 2012 ஆம் ஆண்டு நடத்திய மாநாட்டையும், ஜாதியப் பார்வை நிறைந்துள்ள இடங்களிலெல்லாம் ஜாதிமறுப்புத் திருமணத் திருவிழா “மன்றல்” என்ற பெயரில் நடத்தி, ஜாதி எதிர்ப்பு நடவடிக்கைகளை உறுதியாக முன்னெடுப்பதையும், இன்னும் நெடுந்தூரம் நாம் செல்ல வேண்டியிருப்பதையும் எடுத்துரைத்தார். பின்னர், சுயமரியாதைத் திருமண நடை முறைகள், சட்டம், இயக்கச் செயல்பாடுகள், இந்தியா முழு மையும் அதை விரிவுபடுத்துதல், மதமறுப்புத் திருமணங்கள் தொடர்பான பல கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
திராவிட மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளையகுமார் தனது கருத்தாக, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டம் வருவது ஒருபுறம் என்றால், மக்களிடம் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம், பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று பதிவு செய்தார், அதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற மற்றவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தானக் அமைப்பின் துணைத் தலைவர் ஸ்வேதா வர்மா, டில்லி பல்கலைக்கழக மாணவர் தீபன் சக்கரவர்த்தி, பஞ்சாபைச் சேர்ந்த விவேக் துவிவேதி, வழக்குரைஞர் சலோனி, சமாரத் அறக்கட்டளை ஹேமந்த் மோகன்பிரியா உள்ளிட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் செயல்படும் விதத்தைப் பார்வையிடவும் பெருவிருப்பம் தெரிவித்தனர். தானக் அமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்குக் கழக வெளியீடுகள் வழங்கப்பட்டன. நிகழ்வு முடிந்த பின்னும் உரையாடல் தொடர்ந்தது.