புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடு அரசு, தமிழ் வார விழா என்று தமிழ் நாடு முழுவதும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கவிதை போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி என்று நடத்தப்பட்டு பாவலர் அவர்களின் தமிழ் பற்றை, அவரின் சிந்தனைகளை மாணவர்கள் மற்றும் அனைவரும் உணர வேண்டும் என்ற அடிப்படையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது.
இதை குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சமூகநீதி காத்த சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, உச்சிமோந்து, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறோம் என்கிறார். மேலும், திராவிடர் இயக்க ஆட்சி வரலாற்றில் இது ஓர் இணையற்ற புதிய பொன்னேடு. உலகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்களின் பெருவிருப்பத்தைச் சிறப்பாக நிறை வேற்ற விதி 110–இன்கீழ் அறிவித்த நமது இணையற்ற முதலமைச்சரைப் பாராட்டி, வரவேற்று, நன்றி செலுத்தி வாழ்த்துவார்கள் என்பது திண்ணம். இந்த அறிவிப்பு செய்த நாள் வரலாற்று சாதனை நாள் என்கிறார்.
அதே போன்று தமிழ் நாடு முழுவதும் வணிக வளாகங்களின் பெயர் பலகைகள் தமிழ் மொழி முதன்மையாக இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பித்தது. தமிழுக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பாராட்டப்பட வேண்டியவை.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு முன்னெடுப்பு செய்து வரும் இத்தகைய சூழ்நிலையில், சமீபகாலமாக தமிழ் திரைப்படத்துறை சார்ந்தவர்கள் இதை எதையும் கவனத்தில் கொள்வதாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கும் தமிழ் மொழி படத்திற்கு தமிழில் பெயர் வைக்காமல் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பெயர்களை வைத்துக் கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு நாடு அரசு பல்வேறு வகையில் தமிழ் மொழி காக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தமிழ் திரையுலகை சார்ந்த பெரும்பாலோர் இதை உணர்ந்ததாக தெரியவில்லை.அவர்கள் நோக்கம் எல்லாம் வருமானம். இலாப நோக்கம். அப்படி ஆங்கிலத்தில் பெயர் வைத்து வெளி வந்த படங்கள் வெற்றிப் பெற்றதா? என்றால் அதுவும் கிடையாது.அது வும் அவர்கள் மொழியில் சொல்வதென் றால் “அட்டர் பிளாப்” படங்கள்.
சமீபத்தில் வெளிவந்த, வெளி வரப் போகும் திரைப்படங்களின் பெயர்கள் ஒரு சில..
Beast, Goat ,Jailor, Thug life, lover, Gangers, Retro, Black, Boat, Millor, Brother, Bison,Sir, Blue Star, lndian, Dragon, Good bad ugly, Kingstan, Train, Test, LGM, Partner, DD Returns, Takkar, The Road, Flight club, Lucky man, Good Night, Parking, Raid இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களுக்கு இவர்கள் வைக்கும் பெயர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உள்ளது.( தமிழில் பெயர் வைத்து தமிழ்ப் பண்பாட்டிற்கு சம்பந்தமில்லாத படங்கள் எடுப்பது தனிக் கதை) ஒவ்வொரு தமிழ்ப் படத்திற்கான பொருளையும் அகராதியில் தேட வேண்டியதாக உள்ளது.
மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் மானியமும் , வரிவிலக்கு சலுகையும் வழங்கப்பட்டது. பிறகு வந்த ஆட்சியில் அது நீக்கப்பட்டது. தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப் படங்களுக்கு மானியம், வரிச்சலுகை கொடுத்தால் தான் தமிழில் பெயர் வைப்பார்கள் போலிருக்கிறது.
ஆசிரியர் அவர்கள் எந்த விழாவிற்கு, கூட்டத்திற்கு சென்றாலும் அங்கே இருக்கும் குழந்தைகளிடம் அவர்களின் பெயரை கேட்பார். தமிழில் பெயர்கள் இல்லாத பொழுது,அவர்கள் பெற்றோரிடம் தமிழில் பெயர் வைக்க வலியுறுத்துவார். இது தமிழர்கள் மொழி உணர்வோடு வாழ வேண்டும் என்ற அக்கறை. தமிழ் மொழி அழிந்தால் தமிழ் இனம் அழியும். நம் மொழியை காக்க தமிழ் குழந்தைகளின் பெயர் வைப்பதிலிருந்து அக்கறை இருக்க வேண்டும் என்ற வேட்கையின் வெளிப்பாடு. இந்த அக்கறை தமிழ்த் திரைப்படத்துறை சார்ந்தவர்களுக்கும் வர வேண்டாமா? திரைப்படங்களும் கருவில் சுமந்து வெளிவரும் குழந்தை போன்றது தானே!
தமிழ் நாட்டில் தமிழர்களால் எடுக்கப்பட்டு தமிழ் மக்கள் பார்க்கும் படத்திற்கு தமிழில் பெயர் இல்லை.
தமிழ் மொழிக்காக தந்தை பெரியாரோடு இயக்கம் கண்டு இணைந்து செயலாற்றிய புரட்சிக் கவிஞர் அவர்களின் 135ஆவது பிறந்த நாள் கொண்டாடும் நிலையிலும் இத்தகைய சூழல் உள்ளது.
பிறரிடம் எதற்காகவும் கையேந்தக்கூடாது..
பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்தி கொள்கிறான் என்கிறார் புரட்சிக் கவிஞர்.
இவை தமிழ் மொழிக்கும் பொருந்தும்.நம் தமிழ் மொழியில் இல்லாத சொற்களாக பிற மொழில் உள்ளது.மொழி பற்றுமின்மையும், அலட்சியமும் தான் இத்தகைய நிலைக்கு காரணம். தமிழில் இருக்கும் புதிய புதிய சொற்களை கண்டுபிடித்து திரைப்பட துறையினர் தான் அறிமுகப்படுத்த வேண்டும்.மற்ற துறையை விட திரைப்படத் துறை அதிக சக்தி வாய்ந்தது, மக்களிடம் விரைவில் சென்றடையக்கூடியது. தமிழ் மொழியை வளர்க்க நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.தமிழ் திரைப்படத் துறையினரின் இத்தகைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.தமிழ்நாடு அரசும் இதன் மீது கடும் நடவடிக்கையும், கண்காணிப்பும் தேவை.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதை வரிகள்
‘‘தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்.
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்.
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்.
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்’’ என்கிறார்.
தமிழ்நாடு அரசின் உணர்வை உணர்ந்து தமிழ் திரைப்படத் துறை செந்தமிழ் (மான) உணர்ச்சி கொள்ளுமா?
– பெ. கலைவாணன்
திருப்பத்தூர்