பண மோசடி புகார் நீட் தேர்வு பயிற்சி மய்யம் மீது காவல்துறை வழக்கு

viduthalai
2 Min Read

சென்னை, மே 4-  நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பிரபல தனியார் பயிற்சி மய்யம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீட் தேர்வு பயிற்சி மய்யம்

டில்லியை தலைமையிடமாகக் கொண்டு ‘ஃபிட்ஜி’ என்ற பெயரில் பிரபல தனியார் பயிற்சி மய்யம் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் 41 நகரங்களில் 73 இடங்களில் இந்த பயிற்சி மய்யத்தின் கிளைகள் உள்ளன.

சென்னையில் 5 இடங்களிலும், கோவையில் ஒரு இடத்திலும் இதன் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம், ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

மேலும், சில தனியார் பள்ளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு நுழைவு தேர்வுக்கு தயாராகும் மாணவர் களுக்கு வகுப்பறைகள் மூலம் பயிற்சி அளித்து வருகிறது.

நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு ‘பேக்கேஜ்’ அடிப்படையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கட்டணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த நிறுவனம் திடீரென நிதி நெருக்கடியில் சிக்கி, முறையாக ஊதியம் வழங்காதால் ஆசிரியர்கள் பலர் பணியில் இருந்து விலகி விட்டனர்.

பண மோசடி

இதனால் இந்த நிறுவனம் டில்லியில் பல கிளைகளை கடந்த ஜனவரி மாதம் மூடியது. பணத்தை இழந்ததால் மாணவர்களும், பெற்றோரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள், இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அதன் தலைவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில், பண மோசடிக்கான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த நிறுவனத்துடன் மேற்கொண்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தனியார் பள்ளிகள் ரத்து செய்துவிட்டன. இதனால் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்த மய்யத்தில், தனியார் பள்ளி மூலமாக சேர்ந்த 140 மாணவர்களிடம் ரூ.4 கோடி வரை வசூலிக்கப்பட்ட நிலையில், பயிற்சியும் அளிக்காமல், பணத்தையும் திரும்ப ஒப்படைக்கப்படாமல் இருந்துள்ளனர்.

வழக்கு

இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இந்த பயிற்சி மய்யத்தின் கீழ்ப்பாக்கம் கிளை மீதும், இந்த நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா தலைவர் மற்றும் இயக்குநர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் பணத்தை இழந்த மாணவர்கள் புகார் அளிக்கலாம் என்று காவல் துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தனியார் பள்ளிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *