பனாஜி, மே 3 வடக்கு கோவாவில் உள்ள ஷிர்காவ் கிராமத்தில் அமைந்துள்ள லைராய் தேவி கோவில் விழாவில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கிப் பெண்கள் இருவர் உட்பட, ஏழு பக்தர்கள் பரி தாபமாக உயிரிழந்தனர். இந்த துயர நிகழ்வில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கூட்ட நெரிசல்
இந்த சம்பவம் மே 2 2025 அன்றிரவு விழாவின் முக்கிய நிகழ்வின் போது நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவி லின் நுழைவு வாயில் அருகே திரண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. மக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு முன்னேற முயன்றதாலும், பலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததாலும் நெரிசல் அதிக மானதாக தெரிவித்தனர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்டதும், அங்கிருந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும், கோவில் நிர்வாகத்தினரும் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். உட னடியாக காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவ மனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காயம டைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கோர நிகழ்வு தொடர்பாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்குத் தேவை யான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.
பலி எண்ணிக்கை அதிகரிக்கும்
ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இத்தகைய விழாக்க ளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்ப டுத்துவதற்கான உரிய பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. கும்பமேளாவின் போது புதுடில்லியில் இருந்து அலகாபாத் செல்ல முயன்ற போது, புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் மரணமடைந்த நிலையில், மீண்டும் கோவாவில் கோவில் விழாவின் போது நடந்த கூட்ட நெரிசலில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்; மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.