போக்குவரத்து காவல்துறை தகவல்
சென்னை, ஏப்.30- சென்னையில் தொழில் நுட்பங்கள் உதவியுடன் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் சாலைவிபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளது என்று போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை போக்குவரத்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விபத்துகளை குறைப்பதற்கும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பல்வேறு போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வல்லுநர்களுடன் ஒருங்கிணைந்து, விபத்துகளை குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து முறையான பயிற்சிகள் போக்குவரத்து காவலருக்கு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு
விழிப்புணர்வு பிரசாரங்களுடன் கூடுதலாக சென்னை பெருநகரம் முழுவதும் சோதனைகள் மற்றும் ஏ.என்.பி.ஆர். கேமராக்கள், ‘2டி’வேகரேடார் அமைப்பு மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் போன்ற தொழில்நுட்பங்கள் உதவியுடன் வேகமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கசவம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை பதிவு செய்து போக்குவரத்து அமலாக்க உத்தியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சாலை நிலவரங்கள், அறிவிப்பு பலகைகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் போன்றவற்றை மேம்படுத்தியதன் மூலம் விபத்து ஏற்படக்கூடிய இடங்களை எளிதில் அடையாளம் கண்டறிய உதவுகிறது.
இந்த கூட்டு முயற்சிகள் மூலம் சென்னை பெருநகரில் கடந்த ஆண்டைவிட சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாக குறைத்துள்ளன. 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 25-4-2025 நிலவரப்படி 2025ஆம் ஆண்டில் சாலை விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 25-4-2024 வரை 173 உயிரிழப்புகள் நடந்துள்ளது. இந்தாண்டு இதுவரை 149 உயிரிழப்புகள் நடந்துள்ளது.
விபத்துகளை குறைப்பதற்கும், சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முன்னுரிமை வழங்கி, சென்னை போக்குவரத்து காவலரின் பணி தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.