சுற்றிலும் ஹிந்துக் கோயில்கள்; திராவிடர் இயக்கக் கொள்கைகளை உரத்துப் பேசிய தமிழர் தலைவர்!
விருதுநகர், ஜூலை 2 கோயில்கள் சூழ்ந்த மொழிப்போர் வீரர் தியாகி சங்கரலிங்கனார் திடலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தேசபந்து மைதானம், மாரியம்மன் கோயில் மைதானம் என்று அழைக்கப்பட்டு, தமிழ்நாட் டுக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்க வேண்டும் என்று உண்ணாநிலை இருந்து போராடி காலமான சங்கரலிங்கனார் நினைவாக தற்போது மொழிப்போர் தியாகி வீரர் சங்கரலிங் கனார் திடல் என்று பெயர் பெற்றுள்ள மைதானத் தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு; பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆம் ஆண்டு; வைக்கம் போராட்ட நூற்றாண்டு என்று மூன்று நூற்றாண்டுகளை சிறப்பிக்கும் வண்ணம் 1.7.2023, அன்று மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரையிலும் முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி உள்ளிட்ட அனைக்கட்சிகளின் உள் ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றிச் சிறப்பித்தனர்.
கோயில்கள் சூழ்ந்த
விருதுநகர் மேடை!
நேற்று நடைபெற்ற முப்பெரும் விழா மேடை இயல்பான ஒரு முரண் சிறப்பைப் பெற்றிருந்தது. அதாவது, மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடலுக்கு எதிரில் சிறீ மாரியம்மன் கோயிலும், மேடைக்கு பின்புறம் சிறீ பார்வதி அம்மன் கோயிலும், வலப்புறமாக முருகன் கோயிலுமாக முப்புறமும் கோயில்கள் சூழ்ந்திருந்தன. இப்படி ‘பக்தி மணம் கமழும்’ பகுதியின் இடப்புறமான வடக்கு ரத வீதியில் காமராசர் பெயரில் ஒரு மருத்துவமனையும் அமைந்துள்ளது. அதோடு மக்கள் பரபரப்பாக இயங்கும் கடை வீதியும் தேவை கருதி அமைந்துள்ளதால், நாற்காலிகளில் அமர்ந்துள்ள மக்களைத் தவிர, ஏராளமானோர் போகவும், வரவுமாக அந்தப் பகுதி எங்கும் மக்கள் நடமாட்டம் மிகுந்திருந்தது. ஆகவே ஒலிபெருக்கியின் ஓசை ஏராளமான மக்களை எட்டிக்கொண்டிருந்தது. கூடுதல் சிறப்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் பேசும் போது, மேலாடையின்றி காவி வேட்டியும், நெற்றியில் நீறும் அணிந்த ஒருவர், விறுவிறுவென்று மேடைக்கு முன்னால் வந்து நின்று பவ்வியமாக, தமிழர் தலைவருக்கு இரு கை கூப்பி ஒரு வணக்கம் வைத்தார்! ஆசிரியரும், அணிச்சையாக அந்த பக்தருக்கு இரு கை கூப்பி வணக்கம் வைத்தார். அந்த பக்தர் மிகுந்த மனநிறைவுடன் மீண்டும் தனது நாற்காலிக்குச் சென்று அமர்ந்து தமிழர் தலைவர் பேசுவதைக் கேட்க ஆயத்தமானார். இப்படி கோயில்கள் சூழ்ந்திருந்த அந்த சங்கரலிங்கரனார் திடலில் தான், நூற்றாண்டு காலமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கின்ற திராவிடர் இயக்கத்தின் கொள்கைகள் சங்கநாதமிடப்பட்டது. ஆனாலும், எந்தவித மான சட்ட ஒழுங்குக்கும் ஊறு நேராவண்ணம் கூட்டம் அமைதியாக நடந்து முடிந்து, ‘திராவிட மாடலுக்கு’ கட்டியம் கூறியது குறிப்பிடத்தக்கது!
வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தோர்!
இப்படிப்பட்ட சிறப்பு பெற்ற முப்பெரும் விழாவை, தலைமைக் கழக அமைப்பாளர் இல. திருப்பதி தொடங்கி வைத்து உரையாற்றினார். விருதுநகர் மாவட்டத் தலைவர் நல்லதம்பி தலைமையேற்று உரையாற்ற, மாவட்டச் செய லாளர் ஆதவன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கிராமப் பிரச்சார மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் அறிமுக உரையாற்றினார். கழகத்தின் பொரு ளாளர் வீ.குமரேசன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் லிங்கம், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் முத்துக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.செல்வம் ஆகியோர் முப்பெரும் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.
ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா?
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பொதுக்குழு உறுப்பினர் வானவில் மணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ஆனந்தம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம், இராஜபாளையம் மாவட்டத் தலைவர் சிவக்குமார், மாவட்டச் செயலாளர் கோவிந்தன், சாத்தூர் நகர்மன்றத் துணைத்தலைவரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான அசோக், மாவட்டக் காப்பாளர் தங்கசாமி, ம.தி.மு.க. நகரச் செயலாளர் தங்கசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் முருகன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ராஜேஷ், ம.தி.மு.க. நகரச் செயலாளர் ராமர், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சிவகாசி கணேசன், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் எரிமலை, மாவட்டச் செயலாளர் முத்துக்கருப்பன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தொலைக்காட்சிப் புகழ் திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்கள், ”மந்திரமா? தந்திரமா?” என்ற தலைப்பில், நாட்டில் சாமியார்கள் மக்களை எப்படி மந்திரம் என்ற பெயரில் ஏமாற்றுகின்றனர் என்ற அயோக்கியத்தனத்தை செயல் விளக்கத்தில் அம்பலப்படுத்தினார்.
பார்ப்பனர்களைத் தெறிக்கவிட்ட
தவத்திரு குன்றக்குடி அடிகளார்!
இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையில், காமராஜரின் அருமை பெருமைகளை குறிப்பிட வந்து, அதையொட்டி தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்ன ஒரு அரிய கருத்தை எடுத்து வைத்தார். அதாவது, ’குலக்கல்வி திட்டப்படி அரைநாள் படிப்பு, அரைநாள் அப்பன் தொழில் செய்வது’ என்பதைச் சொல்லிவிட்டு, ‘குயவன் பிள்ளை குயவுத் தொழில் கற்றுக்கொள்ள வேண்டும், சவரம் செய்கிறவன் பிள்ளை சவரத்தொழில் செய்ய வேண்டும், தூய்மை செய்கிறவன் பிள்ளை அந்தத் தொழிலைச் செய்ய வேண்டும்’ என்றெல்லாம் பட்டியலைச் சொல்லிவிட்டு, வேறு யாரும் சிந்திக்காத; சொல்லாத ஒன்றான, “மற்றவர்களெல்லாம் அவரவர் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்றால், பார்ப்பான் அவன் குலத்தொழிலான பிச்சைதானே எடுக்க வேண்டும். அதென்ன அவன் மட்டும் படிப்பது?” என்று, அதிகம் புழக்கத்தில் இல்லாத ஒரு அதிரடிக் கேள்விக் கனையை விடுத்ததை ஆசிரியர் தனது உரையில் தொடுத்தார். அத்துடன் காமராசர் தான் இந்தியாவின் இரண்டு பிரதமர் களைக் கொடுத்தவர் என்ற வரலாற்றுத் தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
மனுசங்களைப் பாருங்க!
மைல் கல்லுகளை பார்க்காதீங்க!
பார்ப்பன இதழான ஆனந்த விகடன், ”காரணம் பெரியார்! காரியம் காமராசர்!” என்று எழுதிய அளவுக்கு ஆட்சியும், காட்சியும் திராவிடர் இயக்கத்தின் பாதையில் செல்வதைக் கண்டு நிலைகுலைந்து போயிருந்த ராஜாஜி, தரம் தாழ்ந்து, ‘கருப்புக்காக்காயை கல்லெடுத்து அடியுங்கள்’ என்று காமராசரை விமர்சித்ததை சுட்டிக்காட்டி விட்டு, ’மோடியின் நிலைமையும் இன்று அதுதான்’ என்று நடப்பையும் தொட்டுக்கொண்டார். கணக்கு வழக்கில் லாமல் பள்ளிக்கூடங்களை திறக்க முயன்ற காமராசருக்கு அதிகாரிகள் 5 கி.மீ. க்குள் மற்றொரு பள்ளிக்கூடம் கட்ட சட்டத்தில் இடமில்லை என்று, முட்டுக்கட்டை போட்ட போது, “மனுசங்களைப் பாருங்க, மைல் கல்லுகளை பார்க்காதீங்க” என்று காமராசர் சொன்னதையும், ’எப்படி கட்டுவது என்று கேட்கத்தான் உங்களை கூப்பிட்டேனே தவிர, கட்டக்கூடாது என்று சொல்வதற்கல்ல’ என்று சொல்லியதையும் எடுத்துரைத்தார்.
அதற்குப் பிறகு நூற்றாண்டு விழா காணும் முத்தமிழ் அறிஞர் கல்விக்காக செய்த அரும் பெரும் சாதனைகளை அடுக்கினார். அதன் காரணமாக இன்று தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சியை நன்றி உணர்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். தொடர்ந்து கலைஞருக்கும், காமராசருக்குமான சில உரையாடல்களை, சில சம்பவங்கள் மூலம் சுட்டிக்காட்டிப் பேசினார். முன்னதாக பள்ளி மாணவர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர் களுக்கும் ஆசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்தார்.
ஆளுநர் குழந்தைப் பருவத்திலிருந்தே சட்டவிரோதமாக இருக்கிறார்!
தொடர்ந்து, வைக்கம் தெருக்களில் மக்கள் நுழையத் தடை இருந்ததை பெரியார் சென்று போராடி தகர்த்ததையும், அதற்கு காந்தியே முட்டுக்கட்டை போட்டதையும், அதற்கு பெரியார், ‘அந்தத் தெருவில் நாய் போகலாம், பன்றி போகலாம், ஆறறிவு கொண்ட மனிதன் போகக்கூடாதா?’ என்று கடிதம் எழுதியதையும், அதற்கு காந்தியிடமிருந்து பதில் வரவில்லை என்ற வரலாற்றுத் தகவலையும் பகிர்ந்து கொண்டார். சர்.பிட்டி தியாகராயர் மதிய உணவில் தொடங்கி, காமராசர் மதிய உணவு வரை சொல்லிவிட்டு, ‘திராவிடர் இயக்கத்தின் அடித்தளம் அசைக்க முடியாதது!’ என்றார் அழுத்தம் திருத்தமாக! இதெல்லாம் தெரியாமல், ’ஆளுநர் தானே கக்கியதை தானே விழுங்குகிறார்’ என்று ஆணைக்குத் தடுப்பாணை கொடுத்ததை மிகக் கடுமையாக கண்டித்தார். மேலும், ‘தானே குழந்தைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, குழந்தைப் பருவத்திலிருந்தே சட்டவிரோதமாக இருந்திருக்கிறார்’ என்று குற்றம் சாட்டினார். இறுதியில், “உன் தகுதியும் தெரியும், உனக்குச் சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் தெரியும், போ’ என்று காமராசர் கூறியதை நினைவூட்டி தனது உரையை நிறைவு செய்தார். பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.