உனக்குமா ஓர் இயக்கம்? – அதைக்
கலைக்க என்ன தயக்கம்?
இனக் குறையை நீக்கப் பெரியார்
இயக்கம் நாட்டில் இருக்கையிலே
உனக்குமா ஓர் இயக்கம்?
தமிழ்நா டென்று பேர்வை என்றார்
வரலா றில்லை என்றான்
நமை இகழ்ந்தான் நாக்கறுக்க
நம்பெரியார் இயக்கம் இருக்க
உனக்குமா ஓர் இயக்கம்?
காங்கிரசுக் காரா உனக்குத்
தமிழன் என்று பேரா?
தீங்கிழைக்கும் தில்லி காலைச்
சேருவது உன் சீரா?
உனக்குமா ஓர் இயக்கம்?
தனியுடைமை பழித்தாய் – இது
வரைக்கும் என்ன கிழித்தாய்?
இனிய தமிழை அழிக்கும் தில்லியை
ஏத்தி வாலைக் குழைத்தாய்
உனக்குமா ஓர் இயக்கம்?
பார்ப்பானுக்குப் பிள்ளை நீ
தமிழர் நலத்தில் நொள்ளை
பார்ப்பான் கொள்ளை தனில் அசைக்க
முடியுமா ஓர் எள்ளை?
உனக்குமா ஓர் இயக்கம்?
செட்டுத் தமிழர் நெல்லை – சேர்த்தான்
மலையாளத்தின் எல்லை
கொட்டம் அடிக்கும் ஆட்சித் தொல்லை
குறைக்க உன்னால் ஆவ தில்லை
உனக்குமா ஓர் இயக்கம்?
தமிழரசி கூலி – இங்கே
உனக்கு மென்ன சோலி?
தமிழ் ஒழிப்பானோடு கூடி
தமிழைச் செய்தாய் கேலி!
உனக்குமா ஓர் இயக்கம்?
தமிழ் பெருமை துணித்தான் – இந்தி
தமிழகத்தில் திணித்தான்
நமை இகழ்ந்தான் நாக்கறுக்க
நம் பெரியார் இயக்கம் இருக்க
உனக்குமா ஓர் இயக்கம்?
நாம் தமிழர் தானா – இல்லை
நல்ல தலைக்குப் பேனா
ஏந்திய கை இட்ட கையை
ஒடிப்பதுவே கொள்கை ஆனால்
உனக்குமா ஓர் இயக்கம்?
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
(‘குயில்’ 03.03.1959)