டொனால்டு ட்ரம்ப் கேள்வி
வாசிங்டன், ஏப். 25- அமெரிக் காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவராக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உள்ளார். அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. இதன்மூலம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் எலான் மஸ்க்கிற்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட் டத்தில் குதித்துள்ளனர்.
மறுபுறம், பிற நாடுகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த நிதியுதவியையும் அத்துறை ரத்து செய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட 21 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.182 கோடி) நிதியுதவியை, அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (DOGE) ரத்து செய்தது.
இதுதொடா்பாக அந்தத் துறை, ’பல நாடுகளுக்குப் பல் வேறு பணிகளுக்காக அமெரிக்க மக்களின் வரிப்பணம் செலவிடப்பட இருந்த நிலையில், அந்தச் செலவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செலவுகளில் இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு, இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கத் திட்டமிட்ட 21 மில்லியன் டாலா் நிதியுதவியும் அடங்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக – காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மோதல் நிலவியது. ”இந்திய தேர்தல் களில் அமெரிக்காவுக்கு என்ன வேலை” என கேள்வி எழுப்பிய பாஜக, இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை குற்றஞ்சாட்டியது. இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது.
இந்த நிலையில், ”இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்களை (ரூபாய் மதிப்பில் 1.82 லட்சம் கோடி) வழங்க வேண்டும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், “இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அவர்களிடம் அதிக எண்ணிக்கையில் பணம் உள்ளது. அமெரிக்காவை பொறுத்த வரையில் உலக நாடுகளில் அதிகம் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியா வும் ஒன்றாக விளங்குகிறது.
இந்தியப் பொருளாதாரமும் குறிப்பிடத்தகுந்த அளவிலேயே உள்ளது. அங்கு நமக்கான வரி அதிகம் உள்ளதால், நாம் அங்கு செல்வது அரிதானது. பிரதமர் நரேந்திர மோடி மீது நான் மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். ஆனால், வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க நாம் ஏன் 21 மில்லியன் டாலரை வழங்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.