காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து
புதுடில்லி, ஏப்.24 காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 சுற்றுலாப் பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற நிலையில், தீவிரவாதத்தை வேரறுக்கும் பணியில் ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
‘எக்ஸ்‘ பக்கத்தில்
இதுகுறித்து தனது ‘எக்ஸ்‘ பக்கத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள பதிவில்,
“பஹல்காமில் நடந்த இழிவான கொலை தாக்குதல் குறித்து, நேற்று (23.4.2025) பின்னிரவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸின் மூத்த தலைவருடன் பேசினேன். இந்தக் கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது. பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். துன்பங்களுக்கு மத்தியில் ஒற்றுமையுடன் செயல்படுவது காலத்தின் தேவையாகும். இந்த எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த மற்றும் உறுதியான பதிலடி கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்த வேண்டும்
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஒன்றிய அரசு அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாநிலத்தின் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.