மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தல்
சென்னை, ஏப். 24 – தமிழ்நாட்டில், மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது தேவையானதும், அவசியமானதும் ஆகும் என்றும், அதற்கு அரசமைப்புச் சட்டமே வழிகாட்டியிருக்கிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்து வர் நா.எழிலன், “தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை தடுப்பு சட்டம் கொண்டு வரப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “நமக்கென்று ஒரு கொள்கை இருக்க லாம். அதை மக்கள் மீது திணிக்க இயலாது. மூட நம்பிக்கையை சட்டம் போட்டு தடுக்க முடியாது” என்று பதில் அளித்தார்.
இதற்குப் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களும், உறுப்பினர் பொருத்தமில்லாத கேள்வியை எழுப்பியதாகவும், அதற்கு அமைச்சர் சரியான விளக்கத்தை அளித்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
இதனைக் குறிப்பிட்டு, தமது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள பெ. சண்முகம்,
“அமைச்சரின் பதிலும், சபாநாய கரின் கருத்தும் மூட நம்பிக்கையை பரப்பி வருபவர்களுக்கு ஊக்க மளிப்பதாக அமைந்துவிடும்” என்று எச்சரித்துள்ளார்.
“மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கை என்பது வேறு. அறிவி யலுக்கும், பகுத்தறிவுக்கும் பொருந்தாத மூட நம்பிக்கை என்பது வேறு. “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என வள்ளலாரே பாடியுள்ளார்” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பெ. சண்முகம், “மக்களிடம் பரப்படும் மூட நம்பிக்கைகளால் பொருட்செலவு, உயிர்ப்பலி உள்பட பல்வேறு பிரச்சி னைகள் எழுகின்றன. கருநாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது” என்று கூறியுள்ளார்.
“எனவே, சமூக சீர்திருத்தக் கருத்துகள் வலுவாக வேரூன்றியுள்ள தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன?
இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளைப் போலவே, 11 அடிப்படைக் கடமை களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ளது. இதன்படி, ‘‘அறிவியல் மனப்பான்மை, கேள்விகேட்கும் திறன் ஆகியவற்றை வளர்ப்ப தும், சீர்திருத்தம் மற்றும், மனித நேயத்தைப் பரப்புவதும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை’’ என அரசமைப்புச் சட்டத்தின் 51-A(h) பிரிவு வலியுறுத்துகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி: ‘தீக்கதிர்’, 24.4.2025