* காலக்கெடு நிர்ணயித்து, சட்டப்படியான தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்!
*குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர் இதுபற்றிக் குறை சொல்வது சரியா?
நியாயம் வழங்கிய நீதிபதிகள்மீது சீறிப் பாயலாமா?
உலகம் யாரைப் பார்த்து சிரிக்கும்? சட்டத்திற்குத்தான் வெளிச்சம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
ஒரு மாநில அரசின் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால வரையறையின்றி நிறுத்தி வைக்கும் ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால வரையறை செய்து, தனக்குள்ள சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் வழங்கிய அரிய தீர்ப்பைக் குடியரசு துணைத் தலைவராக உள்ள ஒருவர் குறை கூறுவது, எந்த வகையில் அரசமைப்புச் சட்டப்படி ஏற்கத்தக்கது என்றும், இந்த நிலையைக் கண்டு உலகம் கைகொட்டி சிரிக்கும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
காலவரையறையின்றி, சற்றும் நேர்மைற்ற முறையில், பல ஆண்டுகளாக தனது ஒப்புதலுக்கு (Assent) தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை கிடப்பில் போட்டவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை ஜனநாய கத்தைப் பாதுகாக்க – மக்கள் மன்றத்தால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசின் சட்டங்களை நிறைவேற்றவிடாமல், முட்டுக்கட்டை போட்ட தமிழ்நாடு ஆளுநர்
ஆர்.என்.ரவியின் அரசியல் அடாவடித்தனத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தக்க வகையில் சட்டப் பரிகாரம் (Legal Remedy) வேண்டி, தமிழ்நாடு தி.மு.க. அரசு போட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தின் அமர்வு –ஜஸ்டிஸ் திரு.J.B.பர்திவாலா, ஜஸ்டிஸ் திரு.R.மகாதேவன் அமர்வு கொடுத்த தீர்ப்பு 8.4.2025 அன்று, இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே தலைசிறந்த எடுத்துக்காட்டான (Land Mark Judge ment) தீர்ப்பு என்று நாட்டில் உள்ள அனைத்து முக்கிய ஏடுகளும், சட்ட நிபுணர்களும் பாராட்டுகின்றனர்.
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகத்திலும் அளவிட முடியாத தாமதம்!
ஓர் எடுத்துக்காட்டு. ஜெயலலிதா அவர்கள் பெயரில் மீனவப் பல்கலைக் கழகத்தை நாகையில் அமைக்க முந்தைய அ.தி.மு.க. அரசு சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி, ஆளுநர் ரவி (2021 இல் வந்தவர்) க்கு அனுப்பப்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகளாக அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது; இரண்டாவது முறை தி.மு.க. சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பியும், அத்தனை மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர். குடியரசுத் தலைவரிடத்திலும் பலப்பல மாதங்களாகத் தேக்கப்பட்டுக் கிடந்த நிலை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் மாண்பை, ஏற்காத ஒரு நிலை என்பதை, உச்சநீதிமன்றம் தனது விரிவான அரசமைப்புச் சட்டப்பூர்வ தீர்ப்பின்மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஆளுநர் ரவிக்குப் பல வாய்ப்புகளைத் தந்தது உச்சநீதிமன்றம்
அத்துடன், தமிழ்நாட்டில் ஆளுநர் ரவியின் நேர்மையற்ற (Bonafides) இச்செயல் ஏற்கத்தக்கதன்று என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, இதற்கு பல வேண்டுகோள், வாய்ப்புகளை உச்சநீதிமன்றம் தந்தும், ஆளுநர் அவற்றை மதித்து நடந்து கொள்ள வில்லை. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு உரிய சட்டப் பரிகாரம் தரவேண்டியது அவசர, அவசியமாகிறது என்பதாலும், முழுமையான நீதி (Complete Justice) தரவேண்டியது அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள தீர்வு நெறி என்பதாலும்,
அரசமைப்புச் சட்ட 142 விதியின்படி இந்த வரலாற்றுத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இரண்டாவது முறையும் சட்டப்பேரவையில் அப்படியே நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுகள் பத்தும், 18.11.2023 முதலே அமுலுக்கு வந்ததாகவே (இத்தீர்ப்பின்மூலம்) கருதப்படவேண்டும் என்ற அதிரடித் தீர்ப்பின் மூலமாக முழு நியாயம் (Complete Justice) கிடைத்தி ருக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முன்மாதிரி உண்டே!
இதற்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டைச் சார்ந்த பேரறிவாளன் விடுதலையில், ஆளுநர், குடியரசுத் தலைவராலும், ஆளுநராலும் காலதாமதம் செய்யப்பட்டு, தனி மனித உரிமை – சுதந்திரம் பாதிக்கப்பட்டதால், உச்சநீதிமன்றமே அவரை விடுதலை செய்து தக்க சட்டப் பரிகாரத்தைத் தந்துள்ளதையும், பஞ்சாப் மாநில வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பையும் இப்போது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதோடு ஆளுநருக்கு ஒரு மாதமும், குடியரசுத் தலைவருக்கு மூன்று மாதங்களும் என்று கால வரையறையை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. மசோதாக்களை நீண்ட காலம் அசாதாரணமாக தேக்கி வைக்கக்கூடாது என்பதற்காக அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பைக் கண்டு ஆளும் கட்சியைச் சேர்ந்த குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவையின் தலைவருமான ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது எவ்வகையில் சரியானது?
அவரது பொறுப்புக்கு ஏற்றதுதானா?
குடியரசுத் துணைத் தலைவர்
கூறியது சரியானதுதானா?
1. ‘‘ஆகா, என்ன ஜனாதிபதிக்கே காலக் கெடுவா?’’ என்று கொந்தளித்து, நியாயம் தவறிப் பேசியி ருக்கிறார்.
2. ‘‘ஜனநாயகத்திற்கு எதிரான ஏவுகணையாக அரசமைப்புச் சட்டப் பிரிவு 142 அய் பயன்படுத்தி யுள்ளது உச்சநீதிமன்றம்’’ என்கிறார்!
3.‘‘டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்தில் கட்டுக்கட்டாய் ரூபாய் நோட்டுகள் எரிந்த செய்தி, ஒரு வாரமாக யாருக்கும் தெரியாது; ஒரு பத்திரிகை வெளியிட்ட பிறகே தெரிந்தது’’ என்று தீர்ப்புக்குச் சம்பந்தமில்லாத செய்தியைக் கூறுகிறார்.
இன்றுவரை எஃப்.அய்.ஆர். (FIR) கூடத் தாக்கல் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட நீதிபதியை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள் என்று ஒட்டுமொத்த நீதித்துறைமீதும் குற்றம் சுமத்தியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர்
குடியரசுத் துணைத் தலைவருக்கு
நமது பதில்!
இதற்கு நம்முடைய பதில்கள்!
1. அரசமைப்புச் சட்டப் பிரிவு (Article) 142 என்பது அரசமைப்புச் சட்டப்படி உள்ள பரிகார விதி மட்டுமல்ல; வேறு எந்தப் பிரிவிலும் இல்லாத கூறு 142 இல் Complete Justice என்பதை இவரோ, எவரோ – வழங்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் உள்ளதுதான்! இந்த நிலையில், அதனைக் குறை கூறுவது நியாயமா?
அதுதானே உண்மையான ஜனநாயகக் காப்பு ஆகும்!
2. காலதாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியல்லவா?
குடியரசுத் தலைவராகட்டும்; ஆளுநராகட்டும் எவரானாலும் இந்திய அரசமைப்புச் சட்ட விதி களுக்கும் மேம்பட்டவர்களா?
அவர்களது நிர்வாகக் கடமையைத்தானே செய்துள்ளனர். ‘முழு நீதி’ கிடைக்க இப்படி காலக்கெடு வகுக்கப்பட்டிருக்கிறது. இது எப்படித் தவறாகும்?
மக்கள் விளங்கிக்கொள்ள சில செய்திகள்:
(அ) குடியரசுத் தலைவருக்குப் பதவிப் பிர மாணத்தை யார் செய்து வைக்கிறார்கள் – அரசமைப்புச் சட்டப்படி?
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிதானே!
(ஆ) குடியரசுத் தலைவருக்குச் சட்டப் பிரச்சினை யில் சந்தேகம் – குழப்பம் ஏற்பட்டால், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுப்படி அறிவுரை கேட்க உச்சநீதிமன்ற நீதிபதிகளைத்தானே நாடுகிறார்?
(இ) குடியரசுத் தலைவரின் மாண்பை இத்தீர்ப்பு இது குறைக்கவில்லை; அவரது கடமையை – ஜனநாயக நாட்டில் சரிவர நிறைவேற்றத்தக்க ஒரு வழிமுறை ஏற்பாடுதானே இந்தக் காலக்கெடு.
மாநிலங்களவையில் ஒரே வரியில் 153 உறுப்பினர்களை குடியரசுத் துணைத் தலைவர் நீக்கியது சரியானதுதானா?
மீண்டும் வற்புறுத்திச் சொல்கிறோம், குடியரசுத் தலைவரின் செயல்பாட்டில் உள்ள சட்டத்தின் ஓட்டைகளை இத்தீர்ப்பு ஒழுங்குபடுத்துகிறதே தவிர, தவறாக எதையும் கூறவில்லை என்பதே சரியான கண்ணோட்டமாக இருக்க முடியும்.
அடுத்து, மாநிலங்களவைத் தலைவராக இருந்து ஒரே வரியில் 153 உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கி வைத்த அவரது செயல் நியாயப்படி, ஜனநாயகப்படி உண்மை ஜனநாயக விதிகளின்படி ஏற்று நியாயப்படுத்த முடியுமா?
இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள விலக்கு (ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும்) தனிப்பட்ட பதவியைக் கருதியே தவிர, அவரது செயல்பாடுகள் சட்டப் பரிகாரத்திற்கு அப்பாற்பட்டவை என்று அல்ல.
நாடாளுமன்றம் நிறைவேற்றிடும் சட்டத்தைச் செல்லுமா? செல்லாதா? என்று பரிசீலித்து, அதனை செல்லாது என்று கூறும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
உச்சநீதிமன்றத்திற்குத்தானே!
குடியரசுத் தலைவர் ஒப்புதல் (Assent) தந்து விட்டார்; அதனை ஆராயவோ, விமர்சனம் செய்யவோ கூடாது என்றா அரசமைப்புச் சட்டம் கூறுகிறது?
உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் நடந்த ஒரு நிகழ்வா இதற்குத் தக்க பதில்?
என்னே விசித்திர வாதம்!
சந்தேகத்திற்குரிய அந்த நீதிபதிமீது நடவடிக்கையை (FIR) காவல்துறைதான் எடுத்திருக்க வேண்டும்.
டில்லி ஆட்சி நிர்வாகம், காவல்துறை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின்கீழ்தானே உள்ளது?
இதுவரை டில்லியை நிர்வகிக்கும் ஒன்றிய உள்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
Impeachment என்பதை நாடாளுமன்றத்தில் தன்னிடம் உள்ள எம்.பி.,க்கள்மூலம் ஆளும் கட்சியான பி.ஜே.பி. அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணிதானே எடுத்திருக்கவேண்டும்?
இந்த நீதிபதிகள் தவறு செய்தால், ஒழுக்கக்கேடாக நடந்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருந்தும், ஏன் ஆளும் பி.ஜே.பி.யோ, எம்.பி.,க்களோ, டில்லி காவல்துறையோ, நிர்வாகத் துறையோ நடத்த முன்வரவில்லை.
நீதிபதிகள் ‘‘முழு நியாயம்’’ (Complete Justice) 142–இன்படி வழங்கியதற்காக இப்படி சீறிப் பாய்வது எவ்வகையில் அரசமைப்புச் சட்டப்படி ஏற்கத்தக்கது?
உலகம் யாரைப் பார்த்துக் கைகொட்டி சிரிக்கும்?
நடுநிலையாளர்கள் சிந்திப்பார்களாக!
இவர்கள் ‘ஜனநாயகம்’ இப்படி முட்டுச் சந்துக்குள் மாட்டியிருப்பது ஒன்றிய அரசுக்குப் பெருமையா?
உலகம் யாரைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும்? அந்த அரசமைப்புச் சட்டத்திற்குத்தான் வெளிச்சம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.4.2025