புதுடில்லி, ஏப்.18 வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. முன்னொரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே, தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தனர். தற்போது இந்த நிலை மாறி உள்ளது. ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கனடாவுக்கு சென்று கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 2.78 லட்சத்தில் இருந்து 1.89 லட்சமாக குறைந்துள்ளது. அதேபோல் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளது. பிரிட்டன் சென்று படிப்போரின் எண்ணிக்கை 1.2 லட்சத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைந்துவிட்டது.
இதற்கு காரணம் கல்வி பயில அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள்தான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் விசா நிராகரிப்புகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மாணவர் விசாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருநாடகாவில் அரசின் ஒப்பந்தப் பணிகளுக்கு
சிறுபான்மையினருக்கு
4 சதவீத இடஒதுக்கீடு மசோதா
குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கருநாடக ஆளுநர்
பெங்களூரு, ஏப்.18 கருநாடகாவில் அரசின் ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்.
சட்ட திருத்த மசோதா
கருநாடகாவில் அரசின் ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா மாநில சட்டப்பேரவையில் கடந்த மாதம் நிறைவேறியது. இதன் மூலம் மத சிறுபான்மையினருக்கு 2 பி பிரிவில் ரூ.2 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
பாஜக எம்.எல்.ஏ.க்களின் கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் ஒப்புதலுக்கு காங்கிரஸ் அரசு அனுப்பி வைத்தது. இதனை பரிசீலித்த ஆளுநர், இந்த திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு நேற்று (17.4.2025) அனுப்பினார்.
இதுகுறித்து முர்முவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் எழுதியுள்ள கடிதத்தில், “இந்த சட்டத்திருத்த மசோதா இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது. பிரிவு 2-ல் பல ஜாதிகள் இருப்பினும், முஸ்லிம்களுக்காக தனியாக 2 பி பிரிவு உருவாக்கப்பட்டு, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மதத்தின் அடிப்படையில் கருத முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. இது சட்ட சிக்கலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் அறிவுரை வழங்கினர்.
இந்த திருத்த மசோதா அரசலமைப்பு சட்ட சிக்கல்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமா என சந்தேகம் எழுந்துள்ளது. சட்ட சிக்கல்கள் நிறைந்த இந்த மசோதாவை பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிக்கலாமா என வழிகாட்ட வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.