நாகப்பட்டினம், ஏப்.16- தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது ஒன்றிய பாஜ அரசு. பாஜவுடன் கூட்டணி வைத்து எடப்பாடி பழனிசாமி எட்டப்பன் ஆகிவிட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
நாகப்பட்டினத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 30ஆவது தேசிய மாநாடு 15ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. மாநாடு பணிகளை 14.4.2025 அன்று பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி:
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே பாஜவுடன் எக்காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, கூட்டணி வைக்கப் போவதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி, மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி வந்தனர்.
ஆனால் திடீரென பாஜவுடன் கூட்டணியால் தான் மக்களுக்கு எதையும் செய்ய முடியும். அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் அதை எதிர்கொள்வோம் என எடப்பாடி கூறுகிறார். எடப்பாடி நிர்பந்தம் காரணமாகவே பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்த காரணத்தால் எடப்பாடி பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளனர். பாஜவுடன் கூட்டணி வைத்த சரத்பவர் கட்சி, சிவசேனா கட்சியின் நிலை என்ன ஆனது. பாஜ தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை நயவஞ்சமாக அழித்துவிடும்.
தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஒன்றிய அரசை தமிழ்நாட்டு மக்களே எதிர்க்கின்றனர். பாஜவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டை காட்டிக்கொடுத்த எட்டப்பன் ஆகிவிட்டார் எடப்பாடி.
ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் நிருபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலிதாவின் ஊழல் குறித்து அண்ணாமலை பேசினார். இன்று கூட்டணி வைத்துள்ள காரணத்தால் அதிமுகவினர் ஊழல் செய்யவில்லை என பேசுவார்களா-? அதிமுக போன்ற கரை படிந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, ஊழல் பற்றி பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகுதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ஈசிஆர்- ஒஎம்ஆர் இடையே ரூ.16 கோடியில் 3 முக்கிய பாலங்கள் மாநகராட்சி திட்டம்
சென்னை, ஏப். 16- சென்னை ஈசிஆர் -ஓஎம்ஆர் இடையே ஏற்கெனவே உள்ள 3 பழைய பாலங்களை இடித்து விட்டு ரூ.16 கோடியில் புதிய பாலங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
சென்னையிலிருந்து புதுச்சேரி செல்ல கிழக்கு கடற்கரை சாலை (ECR), பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஆகியவைமுக்கிய சாலைகளாக உள்ளன. இதனி டையே பக்கிங்ஹாம் கால்வாய் செல்கிறது.
இவ்விரு சாலைகளிலும் ஏராளமான அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அய்டி நிறுவனங்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. இதனால் இவ்விரு சாலைகளும் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தவையாக உள்ளன.
இச்சாலைகளின் குறுக்கே போதிய பாலங்கள் இல்லாததால், ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு பல கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
ஏற்கெனவே உள்ள பாலங்கள் பழுதடைந்துள்ள நிலையில், பழுதடைந்த 3 பாலங்களை இடித்து விட்டு புதிய பாலங்களை அமைக்க மாநகராட்சி நட வடிக்கை எடுத்து வருகிறது. இப்பணிகளுக்கு ஒப்பந்தமும் கோரியுள்ளது.
ரூ.16 கோடியில் 3 பாலங்கள்
இதன்படி, பெருங்குடி மண்டலம், 181ஆவது வார்டு. பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர்- ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் வெங்கடேசபுரம் இளங்கோநகர் பகுதியில் ஏற்கெ னவே உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி ரூ.5.65 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், பெருங்குடி மண்டலம், 182 மற்றும் 183ஆவது வார்டுகளில், பாலவாக்கம் பகுதியில் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர் – ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் காமராஜர் சாலை – வீரமணி சாலையில் ஏற்கெனவே உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி ரூ.5.62 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
சோழிங்கநல்லூர் மண்டலம், 192, மற்றும் 193ஆவது வார்டுகளில், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர் -ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் துரைப் பாக்கம் பாண்டியன் தெரு-அண்ணாநகர் பகுதியில் ஏற்கெனவே உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி ரூ.5.60 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த 3 பாலங்களும் மொத்தம் ரூ.16.87 கோடியில் புதிதாக அமைக்கப்பட உள்ளன.