இன்று மட்டுமல்ல, எப்போதும் தேவையானவர் அண்ணல் அம்பேத்கர்!

Viduthalai
3 Min Read

ஹிந்துத்துவ சக்திகளின் பிடியில் உள்ள அரசியல் கட்சியின் ஆட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சூழலில் மதவெறி, ஜாதிய வன்முறை, சமூகப் பாகுபாடு ஆகியவை புதிய வடிவங்களில் தலைதூக்கி உள்ளன.

இத்தகைய பின்னடைவான சூழலில், அண்ணல் அம்பேத்காரின் சிந்தனைகளும், கொள்கைகளும் மிகுந்த பொருத்தமுடையவையாகவும் அவசியமானவையாகவும் உள்ளன. சமத்துவம், நீதி, அறிவியல் பகுத்தறிவு ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு, மதவெறி மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடியவர் அண்ணல் அம்பேத்கர்.

மதவெறி என்பது இன்று வெறும் மதங்களுக்கு இடையேயான மோதலாக மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், மற்றும் சமூக ஊடகங்களால் தூண்டப்படும் ஒரு சிக்கலான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மத அடிப்படையில் மக்களைப் பிரித்து, புரிதலின்மையையும், வெறுப்பையும் வளர்க்கும் செயல்கள், சமூகத்தின் ஒற்றுமையைச் சிதைக்கின்றன – பகைமையையும் தூண்டுகின்றன!

மேலும், ஜாதி மற்றும் மத அடையாளங்களைப் பயன்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் ஹிந்துத்துவ சக்திகளின் முயற்சிகள், இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

அம்பேத்கர் மதத்தை ஒரு தனிநபருக்கான ஒன்றாக கருதினாலும், அது சமூக அநீதிக்கு ஒரு கருவியாக மாறுவதை கடுமையாக எதிர்த்தார். அவர், மதத்தின் பெயரால் நிகழும் ஜாதீய ஒடுக்குமுறைகளையும், மூடநம் பிக்கைகளையும் விமர்சித்தார். அவரது “மதமாற்றம்” முடிவு, மதவெறியையும் ஜாதிய ஒடுக்குமுறையையும் எதிர்க்கும் ஒரு அரசியல் செயலாகவே கருதப்படுகிறது. அவர் தேர்ந்தெடுத்த பவுத்தம், அறிவியல், பகுத்தறிவு, மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது, இது மதவெறிக்கு எதிரான ஒரு மாற்று வழியை வழங்கியது.

அம்பேத்காரின் மய்யக் கொள்கைகளில் ஒன்று, “சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்” ஆகியவை. இவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகவும் உள்ளன. மதவெறி பெரும்பாலும் மக்களைப் பிரித்து, ஒரு குழுவை மற்றொரு குழுவுக்கு எதிராகத் தூண்டுவதன் மூலம் வளர்கிறது. இதற்கு மாறாக, அம்பேத்கரின் சமத்துவக் கொள்கை, எந்த மதமும், ஜாதியும், பாலினமும் ஒருவரை உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ ஆக்க முடியாது என்று வலியுறுத்துகிறது.

இன்று, மதவெறியால் தூண்டப்படும் வன்முறை களையும் பாகுபாடுகளையும் எதிர்கொள்ள, அவரது இந்தக் கொள்கையை மீண்டும் பரவலாக்க வேண்டியது அவசியம். தந்தை பெரியாரும், அம்பேத்கரும் இப்பிரச் சினையில் நேர்க்கோட்டில் பயணிக்கின்றனர்.

மதவெறியின் வேர், பெரும்பாலும் மூடநம்பிக்கை களிலும், பகுத்தறிவற்ற நம்பிக்கைகளிலும் உள்ளது. அம்பேத்கர், மக்களை அறிவியல் பகுத்தறிவின் அடிப்படையில் சிந்திக்கத் தூண்டினார். “ஒரு மதம் உங்களை அறிவியலுக்கு எதிராகச் செல்லத் தூண்டினால், அந்த மதத்தை நோக்கிக் கேள்வி கேளுங்கள்” என்று கூறினார்

இன்றைய சூழலில், மதவெறி மற்றும் வதந்திகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதைத் தடுக்க, அம்பேத்கரின் பகுத்தறிவு அணுகுமுறை ஒரு சக்திவாய்ந்த கருவியாக உள்ளது. மதவெறி சமூக ஒற்றுமைக்கு ஆபத்தான ஆயுதமாக உள்ளது; அம்பேத்கரின் சகோதரத் துவக் கொள்கை, அனைவரையும் ஒரே மனித குலமாக இணைக்கிறது. இதை மக்களிடையே பரப்புவது, மத வெறிக்கு எதிரான ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்றார்.

அம்பேத்கர் கல்வியை ஒரு மாற்றத்திற்கான கருவி யாகக் கருதினார். இன்று, மதவெறியை எதிர்கொள்ள, இளைஞர்களுக்கு தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகி யோரின் சிந்தனைகளைக் கற்பிப்பது அவசியம்.

அம்பேத்கர் இந்திய அரசமைப்பை வடிவமைத்தவர். மதவெறி மற்றும் வன்முறைகளுக்கு எதிராக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவது, அவரது பார்வையை நிறைவேற்றுவதாகும்.

இன்றைய மதவெறிச் சூழலில், அம்பேத்கரின் சிந்தனைகள்  வெளிச்சத்தைப் போல வழிகாட்டுகின்றன. அவரது சமத்துவம், பகுத்தறிவு, மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை, மதவெறியை வேரறுக்கவும், சமூக நல்லிணக்கத்தை வளர்க்கவும் உதவும். அம்பேத்கரின் கனவு ஒரு நீதியான, சமத்துவமான இந்தியாவை நோக் கியது. இன்று, அவரது கொள்கைகளை மக்களிடையே பரப்புவது மட்டுமல்லாமல், அவற்றை வாழ்வில் செயல்படுத்துவதும் மிக முக்கியம். அம்பேத்கர் இன்று மட்டுமல்ல, எப்போதும் தேவையான ஒரு சிந்தனையாளர்.

அதனால்தான் தந்தை பெரியார் அம்பேத்கரைப் பெரிதும் நேசித்தார். இரு தலைவர்களும் பலமுறை சந்தித்து உறவாடினர்.

அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளும் சித்தாந் தமும் ஹிந்துத்துவாவிற்கு எதிரானதாக இருப்பதால், உறவாடிக் கெடுக்கும் வேலையில் பிஜேபி உள்ளிட்ட சங்பரிவார்கள் இறங்கியுள்ளன.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

புத்தரையே மகாவி்ஷ்ணுவின் அவதாரம் என்று ஆக்கியவர்கள் ஆயிற்றே! டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் வெறும் நாள் குறிப்பல்ல – பார்ப்பனீயத்தை வீழ்த்திட வீறு கொள்ளச் செய்யும் வினையூட்டு நாள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *