மருத்துவக் கல்லூரி இல்லாத ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்

Viduthalai
2 Min Read

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஏப். 13- தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.

புதிய கட்டடங்கள்
காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.4.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 9 புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்து வைத்தனர்.

செவிலியர் குடியிருப்பு
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.42.25 கோடி செலவில் பல்வேறு மருத்துவ கட்டடங்கள் மற்றும் உயர் மருத்துவ உபகரணங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
இதில், ரூ.1.50 கோடி செலவில் 6 நகர்ப் புற நலவாழ்வு மய்ய கட்டிடங்கள், ரூ.2 கோடி செலவில் 8 துணை சுகாதார நிலைய கட்டடங்கள், ரூ.2.75 கோடி செலவில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவு, செவிலியர் குடியிருப்பு, கூடுதல் கட்டிடங்கள் உள்பட பல்வேறு மருத்துவ சேவைகள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

புற்று நோய்க்கு…
இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 மருத்துவமனை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.299.88 கோடி செலவில் 29 மருத்துவ கட்டடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் ரூ.218.40 கோடி மதிப்பீட்டில் காரப்பேட்டை, அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு மட்டும் தரை மற்றும் 5 தளங்கள் கொண்ட புற்றுநோய்க்கான ஒப்புயர்வு மய்ய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.

புதிய மருத்துவக் கல்லூரிகள்
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது,
“காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் உட்பட அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் படும். நாய்க்கடி, பாம்புக் கடி மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கையிருப்பு வைக்கப் பட்டுள்ளன” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *