பெரியார் என்ன செய்தார்? சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது? என்பவர்களுக்கு இதுதான் பதில்!

viduthalai
8 Min Read

சுயமரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் எவ்வளவு படித்தவர்? அவர் படித்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியில்தான்!
ஈரோட்டுப் பள்ளியில் படித்ததால்தான் –
பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தார்!
நூற்றாண்டு நிறைவு விழா – மலர் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

Contents
சுயமரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா!வாழ்நாள் முழுவதும் கொள்கைப் போராளி; எடுத்துக்காட்டான தொண்டறச் செம்மல்மாதம் தவறாமல் ‘‘பெரியார் உலக’’த்திற்காக நன்கொடை!கழகம்தான் நாற்றங்கால்!வேல்.சோமசுந்தரம் அவர்களின் 60 ஆம் ஆண்டு விழா!மணிவிழாவிலும் – நூற்றாண்டு விழாவிலும் கலந்துகொள்கின்றவன் நான்!கழகப் பொருளாளர் மறைந்த கோ.சாமிதுரையின் கல்லூரி நண்பர்!நூற்றாண்டு நிறைவு விழா  அழைப்பிதழே சாட்சி!பெரியார் திடலுக்கு மிக நெருக்கமானவர்!மனிதநேயம் என்பது மிகவும் முக்கியம்!எல்லாம் உயர்ஜாதி பார்ப்பன வழக்குரைஞர்களாகத்தான் இருந்தார்கள்!அவர் படித்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியில்தான்பெரியார் என்ன செய்தார்? இதைத்தான் செய்தார்?

சென்னை, ஏப்.11 சுயமரியாதைச் சுடரொளி
வேல்.சோமசுந்தரம் எவ்வளவு படித்தவர்? அவர் படித்த தெல்லாம் ஈரோட்டுப் பள்ளியில்தான். ஈரோட்டுப் பள்ளியில் படித்ததால்தான், இவ்வளவு பேரை படிக்க வைத்திருக்கிறார். பெரியார் என்ன செய்தார்? இதைத்தான் செய்தார்? இந்த இயக்கம் என்ன செய்தது? என்று கேட்பவர்களுக்கு இதைத்தான் இந்த இயக்கம் செய்தது என்பதுதான் பதில் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்கள்.

சுயமரியாதைச் சுடரொளி
வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா!

கடந்த 1.3.2025 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘சுய மரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழாவில், நூற்றாண்டு விழா மலரினை வெளியிட்டு  திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

வாழ்நாள் முழுவதும் கொள்கைப் போராளி; எடுத்துக்காட்டான தொண்டறச் செம்மல்

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி, வாழ்நாள் முழுவதும் கொள்கைப் போராளியாகவும், மற்ற வர்களுக்கு எடுத்துக்காட்டான தொண்டறச் செம்மலாகவும் வாழ்ந்த நம்முடைய வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் ஆகியோருடைய நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாதம் தவறாமல்
‘‘பெரியார் உலக’’த்திற்காக நன்கொடை!

இவ்வளவு சிறப்பான விழாவை – தந்தைக்கு, தாய்க்கு சிறப்பான முறையில் எடுத்து, ஒரு சிறந்த கொள்கையாளராக இருக்கக்கூடிய பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவரும், பெரியார் – மணியம்மை பல்கலைக் கழக கல்வி நிர்வாக ஆளுமை உறுப்பினருமான நம்முடைய அருமைத் தோழர் வரவேற்புரையாற்றிய வேல்.சோ.நெடுமாறன் அவர்கள், ‘‘பெரியார் உலக’’த்திற்காக ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்துக்கொண்டு,  தேதி தவறாமல் வந்து அதற்குரிய நன்கொடையைக் கொடுத்துவிட்டுப் போவார். நான் ஊரில் இல்லை என்றால், நம்முடைய கழகத் துணைத் தலைவரிடம் கொடுத்துவிட்டுப் போவார்.

கழகம்தான் நாற்றங்கால்!

இந்நிகழ்விற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய நம்முடைய பாராட்டுதலுக்குரிய அருமைத் தோழர் –  வேல்.சோ.தளபதி – அவருடைய தொடக்கம் திராவிட மாணவர் கழகத்திலிருந்துதான், பச்சையப்பன் கல்லூரியில். இந்த வரலாறு உங்களுக்கெல்லாம் தெரியவேண்டும். சமாஜ்வாடி ஜனதா கட்சியின் மேனாள் மாநில தலைவர் என்று அவர் பொறித்துக் கொண்டாலும், எல்லா இடங்களிலும் பார்த்தீர்க ளேயானால், கழகம்தான் நாற்றங்கால். இந்த நாற்றை எடுத்துத்தான் மற்ற இடங்களில் எல்லாம் நடுவார்கள்.

இதை விவசாய மொழிகளில் சொல்லவேண்டும் என்றால், ‘‘ஆன் டெபுடேசன்’’ என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட அருமைத் தோழர், நல்ல ஆற்றலாளர், சிந்த னையாளர், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போதே, அமைப்புகளில் இருந்து சிறப்பான முத்திரையைப் பதித்தவர். வி.பி.சிங் அவர்களுடைய இயக்கத்தில் இருந்தவர். அதுதான் அவருக்கு மிகப் பெருமையாகும். கலிவரதனை மாற்றியவர் இவர் என்பதுதான் மிகவும் முக்கியம்.

வேல்.சோமசுந்தரம் அவர்களின்
60 ஆம் ஆண்டு விழா!

வேல்.சோமசுந்தரம் அவர்களுடைய 60 ஆம் ஆண்டு விழா செய்யாறில் நடைபெற்றது. அவ்விழாவிற்கு,
இரா.செழியன் அவர்களும் வந்தார்.

கலிவரதன் அவர்கள், ம.பொ.சி. அவர்களுடைய நெருக்க மான நண்பர் அவர். ஆழ்ந்த தமிழ்ப் புலமை உள்ளவர். காங்கிரசிலிருந்து சமாஜ்வாடி ஜனதா கட்சிக்கு வந்தவர் அவர்.

வேல்.சோமசுந்தரம் அவர்களுடைய மணிவிழாவில் உரையாற்றிய கலிவரதன் அப்போது மிக அருமையாக ஒன்றைச் சொன்னார்.  வேல்.சோமசுந்தரம் அவர்கள் எப்படிப்பட்டவர்களையெல்லாம் ஈர்க்கக் கூடியவர் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டினார்.

இப்போது ஹிந்தி மொழிப் பிரச்சினை ஓடிக்கொண்டி ருக்கின்றது பாருங்கள். அன்றைக்கே அவர் சொன்னார். ஹிந்தியில் அவர் சொல்வதைத் திரும்ப நாங்கள் சொல்வோம். ‘‘போலோ, பாரத் மாதா கி ஜே’’, ‘‘போலோ, பாரத் மாதா கி ஜே’’, ‘‘போலோ, மகாத்மா காந்தி கி ஜே’’ என்று சொன்னதை அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் திரும்பச் சொல்வார்கள். அதை ஒரு முழக்கமாகச் சொல்வார்கள்.

ஆனால், எங்களுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகுதான் தெரிந்தது; ‘‘போலோ’’ என்றால், சொல்லுங்கள் என்று அர்த்தம். ஆனால், அதையும் சேர்த்து ‘போலோ, பாரத் மாதா கி ஜே’’ என்று இப்போது சொல்கிறார்கள்.

மணிவிழாவிலும் – நூற்றாண்டு விழாவிலும் கலந்துகொள்கின்றவன் நான்!

அவருடைய தொண்டறம், இந்தக் குடும்பத்தி னுடைய கொள்கை உழைப்பு. ஈரோட்டுக் குடும்பங்களில் எத்தனையோ குடும்பங்கள் இதுபோன்று சிறந்திருக்கின்றன என்பதற்கு அடையாளம்.

அவருடைய மணிவிழாவிலும் கலந்து கொண்டு, அவருடைய நூறாண்டு நிறைவு விழாவிலும் கலந்து கொள்கிறவன் நான்.

ஆனால், எங்கே சென்றாலும் நிறைவு என்பது எப்போது வரும் என்றால், பெரியார் திடலில் நடத்து வதுதான் நிறைவாக இருக்கும். அதற்காகத்தான் இவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள்.

ஓய்வு பெற்ற மண்டல நகராட்சி மேலாளர், அய்யா வேல்.சோமசுந்தரம் அவர்களுடைய சகோதரர் அண்ணாமலை அவர்கள். திருச்சியில் முனிசிபல் ஆணையராக இருந்தவர். பெரியார் மாளிகைக்கு மிகவும் வேண்டியவர் அவர். உருவத்தைப் பார்த்து நீங்கள் எடை போடாதீர்கள். உள்ளம்தான் மிகவும் முக்கியம்.

கழகப் பொருளாளர் மறைந்த கோ.சாமிதுரையின் கல்லூரி நண்பர்!

மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தி ருக்கக் கூடிய கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை அவர்களும், அண்ணாமலை அவர்களும் கல்லூரித் தோழர்கள், பச்சையப்பன் கல்லூரியில்.

அண்ணாமலை அவர்கள் எங்கே மாறுதலாகிச் சென்றாலும், நமக்கு ஒரு லாபம் உண்டு. அங்கே ‘விடுதலை’ சந்தாக்களைப் பெற்றுத் தருவார். அவர் ஏற்பாடு செய்யாவிட்டாலும், வேல.சோமசுந்தரம் அவர்கள், அவரை விடமாட்டார்.

அப்படிப்பட்ட அளவிற்கு இது ஒரு நல்ல குடும்பம். இங்கே வெளியிடப்பட்ட மலரைப் பார்த்தேன். இது ஒரு நல்ல ஆவணம்.

பெரியார் தொண்டர்கள், நூறாண்டு விழாவை காண்பவர்களுக்கு, நூறாண்டு நிறைவு விழாவை காண்பவர்களுக்குக் கூடுமானவரையில் இதுபோன்ற மலரோ, புத்தகமோ போடுவோம்.

அன்றைய காலகட்டத்தில், பிரச்சாரத்திற்காக நாங்கள் செல்லும்போது, பேருந்தில்தான் செல்வோம். அங்கே அம்மா ரத்தினம்மாள் சமைத்துப் போடுவார். அம்மா மணியம்மையார் அவர்கள் சென்றாலும், அவர்களுடைய வீட்டின் சமையலறைக்குச் சென்று சேர்ந்து சமைப்பார். எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம், அந்தக் காலகட்டத்தில்.

‘‘பெரியார் என்ன செய்தார்?’’ என்று சில பைத்தி யங்கள் உளறுவது உள்பட, நல்லவர் சிலர் கேள்வி கேட்கிறார்கள்.

நூற்றாண்டு நிறைவு விழா  அழைப்பிதழே சாட்சி!

பெரியார் என்ன செய்தார் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம், இந்த நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பி தழைப் பார்த்தீர்களேயானால் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அழைப்பிதழின் கடைசிப் பக்கத்தில், ‘‘தங்கள் வரவை அன்புடன் எதிர்பார்க்கும்’’

வி.எஸ்.தளபதி எம்.ஏ., பி.எல்.,

டாக்டர் டி.தாமரை எம்.பி.பி.எஸ்.

எஸ்.செல்வமணி பிஎஸ்.சி.,

எஸ்.சிவக்குமார் பி.காம்., எஃப்.சிஏ.,

எஸ்.ரேவதி எம்எஸ்.சி.,

எஸ்.ஆனந்த்குமார் பி.இ.,

ஏ.பாக்யலட்சுமி பி.இ.,

டி.கண்ணகி பி.ஏ.,

டி.ஆனந்த் பி.காம்., எம்.பி.ஏ.,

டி.பாலபரணீயன் பிஎஸ்.சி.,

பி.தமிழரசி பிஎஸ்.சி., பிஜிடிசிஏ

டாக்டர் எம்.மணிமேகலை பிஎஸ்சி., எம்.பி.பி.எஸ்.,

டாக்டர் ஆர்.என்.மணிகண்டன் எம்எஸ்.சி,. எம்.டி. (ஜெனரல் மெடிசன்)

எம்.சங்கீதா பிஎஸ்.சி.,

வி.சதீஷ் எம்எஸ்.சி.,

வி.எஸ்.நெடுமாறன் பி.இ., (சிவில்), எம்.இ., (அர்பன்)

டாக்டர் என்.விஜயலட்சுமி எம்.டி., (ஜெனரல் மெடிசன்) எஃப்.சி.சி.பி.

டாக்டர் என்.பரத்குரு எம்எஸ்., எம்.சிஎச் (சிடிஎஸ்), டிஆர்என்பி (சிடிஎஸ்) எம்.ஆர்.சி.எஸ். (எடின்) எஃப்.ஆர்.சி.எஸ். (சி.டிஎச்)

டாக்டர் கே.பாரதி எம்.பி.பி.எஸ்., டி.என்.பி., (ஓஜி), எஃப்.ஆர்.எம்.

வி.எஸ்.இராசராசன் பிஎஸ்.சி., சி.ஏ.

டாக்டர் ஆர்.சந்திரிகா பிஎஸ்சி., எம்.பி.பி.எஸ்.,

டாக்டர் ஆர்.திவ்யா எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ., டி.என்.பி. (ஓஜி)

டாக்டர் எம்.சிவசங்கரன் எம்.டி.டி.எம்., (நெப்ரோ)

டாக்டர் ஆர்.காவ்யா எம்.பி.பி.எஸ்., எம்.டி. (பிடியாட்ரிக்), பெலோ ஷிப் இன் பிடியாட்ரிக் நியூராலஜி

எஸ்.அன்பரசன் எம்.டி.டி.எம்., டிஆர்என்.பி., எஸ்மோ (மெடிக்கல் ஆன்காலஜி),

எஸ்.அசோகன் எம்.ஏ., பி.எல்.,

ஏ.மங்கை பி.காம்., எல்.எல்.பி.,

டாக்டர் ஏ.உதயன் பி.டி.எஸ்., எம்.டி.எஸ். (ஆர்த்தோ)

டாக்டர் வி.மோனிகா ஸ்வேதா எம்.பி.பி.எஸ்., எம்.டி., (பிடியாட்ரிக்),

வேல்.சோமசுந்தரம் அவர்களின் குடும்பம் ஒரு மருத்துவப் பல்கலைக் கழகம்

ஒரு பெரிய மருத்துவ நகரே இந்தக் குடும்பத்தில் இருக்கிறது. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் குடும்பம் என்று சொன்னால், வேல்.சோமசுந்தரம் அவர்களுடைய குடும்பத்தினர் – ஒரு மருத்துவப் பல்கலைக் கழகம் – பொறியாளர்களும் அதிகம் இருக்கிறார்கள் இந்தக் குடும்பத்தில்.

தந்தை பெரியார் அவர்கள் கூட்டங்களில் உரை யாற்றும்போது சொல்வார், ‘‘அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தில் பொறியாளர் படிப்பு படிக்கவேண்டும் என்றால், அது சுலபமல்ல. ‘‘இச்சுபட்ன வாடுக்கு இஞ்சினியரிங் படிப்பு’’ என்று தெலுங்கில் சொல்வார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்றால், பொறியாளர் படிப்பு படிப்பதற்குக்  கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்பதுதான்’’ என்று சொல்வார்.

பெரியார் திடலுக்கு மிக நெருக்கமானவர்!

அது படிப்பாக இருப்பதினால்தான், சி.இ.பத்மநாபன் அவர்கள் பேசியதை கட்டுரையாகப் போட்டிருக்கிறார்கள்.

அவர், ஒழுக்கமான, நாணயமான தலைமை வரலாற்றுக்கு உரியவர். பெரியார் திடலுக்கு மிக நெருக்கமானவர் அவர்.

மருத்துவப் படிப்பிலேயே பிரிவுக்குள் பிரிவு. மூக்கை எடுத்துக்கொண்டால், இடது மூக்கா? வலது மூக்கா? என்று அதிலே சிறப்பு. வலது மூக்கில் உள்ள நரம்புக்கு ஒரு சிறப்பு. ஆனால், இந்தக் காலகட்டத்தில், கும்பமேளா என்று சொல்லி முழுக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் அந்தத் தண்ணீர் அழுக்குத் தண்ணீராக இருந்தாலும், எவ்வளவு அசிங்கங்கள் கலந்திருந்தாலும், ‘‘பரவாயில்லை, அது புனிதம்தான், நீங்கள் முழுக்கு போடுங்கள்’’ என்று சொல்கின்ற பெருமைமிகுந்த பிரதமர்தான் நம்முடைய நாட்டின் பிரதமராக இருக்கிறார்.

இதைப் பேசினால் தேசத் துரோகம் என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கிறது. தேசத் துரோகத்தைப்பற்றி பேசினால்தான், மனித வளர்ச்சி வரும் என்றால், அந்தத் தேசத் துரோகத்தை நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவோம்.

மனிதநேயம் என்பது மிகவும் முக்கியம்!

எனக்குத் தேசம் முக்கியமல்ல; தேச மக்கள்தான் மிகவும் முக்கியம். மனிதநேயம் என்பது மிகவும் முக்கியம். மக்கள் காப்பாற்றப்பட்டு, அவர்கள் உயிரோடு இருந்தால்தானே, தேசம் வளரும்.

தேசம் என்பது நிலப்பரப்பா?

மக்கள் பரப்பா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

இந்தக் குடும்பத்தில் ஒரு பக்கம் மருத்துவர்கள்; இன்னொரு பக்கம் பொறியாளர்கள்; மற்றொரு பக்கம் வழக்குரைஞர்களாக இருக்கின்றனர்.

எல்லாம் உயர்ஜாதி பார்ப்பன வழக்குரைஞர்களாகத்தான் இருந்தார்கள்!

தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை சொன்னார், ‘‘நான் எதிர்வழக்காடுவதில்லை என்று எப்போது முடிவு செய்தேன் என்றால், நீதிபதிகள் உயர்ஜாதிக்காரர்களாக இருக்கிறார்கள்; அதனால் அவர்கள் சரியான தீர்ப்பு சொல்லமாட்டார்கள் என்பது மட்டுமல்ல; நமக்காக வாதாடுகின்ற, நம் வக்கீல்களே கிடையாது. எல்லாம் உயர்ஜாதி பார்ப்பன வழக்குரைஞர்களாகத்தான் இருந்தார்கள்’’ என்றார்.

அவர் படித்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியில்தான்

இந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் இவ்வளவு படித்திருக்கிறார்களே, அப்படியென்றால், சுயமரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் எவ்வளவு படித்தவர்? என்பது அடுத்தக் கேள்வி.

அவர் எவ்வளவு படித்தார் என்றால், அவர் படித்த தெல்லாம் ஈரோட்டுப் பள்ளியில்தான்.

ஈரோட்டுப் பள்ளியில் படித்ததால்தான், இவ்வ ளவு பேரை படிக்க வைத்திருக்கிறார்.

பெரியார் என்ன செய்தார்?
இதைத்தான் செய்தார்?

இந்த இயக்கம் என்ன செய்தது? என்று கேட்பவர்களுக்கு இதைத்தான் இந்த இயக்கம் செய்தது.

திராவிடத்தால் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா? எழுந்தோமா? வளர்ந்தோமா? என்பதற்கு இதை விட, ஆதாரப்பூர்வமான மிக முக்கியமான சாட்சியம் வேறு என்ன தேவை?

அவர் என்ன பெரிய வசதி படைத்தவரா? என்றால், கிடையாது.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *