சீதாபூர், ஏப்.8- உத்தரப் பிரதேசத்தில், அரசு நிலத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர், புத்தர் சிலைகளை அகற்றியதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தில் 8 காவல் துறையினர் காயம் அடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் விபாராபூர் கிராமத்தில் கடந்த மாதம் 11ஆம் தேதி, சட்ட மேதை அம்பேத்கர், புத்தர் ஆகியோரின் சிலைகளை கிராம மக்கள் ஊராட்சி கட்டடத்துக்கு எதிரில், அரசுக்கு சொந்தமான நிலத்தில் அவர்கள் அந்த சிலைகளை வைத்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாலுகா அலுவலகத்துக்கு புகார்கள் அனுப்பப்பட்டன.
சிலைகளை அகற்றுமாறு தாலுகா அலுவலக நிர்வாகம் தாக்கீது அனுப்பியது. ஆனால் கிராம மக்கள் சம்மதிக்கவில்லை. கடந்த 5ஆம்தேதி நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் இப்பிரச்சினை பெரிதாக வெடித்தது
இதைத்தொடர்ந்து, சிலைகளை அகற்றுவதற்காக மஹோலி உதவி ஆட்சியர் சசிபிந்த் திவிவேதி, சர்க்கிள் அதிகாரி விஷால் குப்தா ஆகியோர் காவல் படையுடன் விபாராபூர் கிராமத்துக்கு சென்றனர்
அவர்கள் புல்டோசர் உதவியுடன் அம்பேத்கர், புத்தர் சிலைகளை அகற்றினர். இதனால் கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில், 8 காவலர்கள் காயம் அடைந்தனர். காவல் வாகனமும் சேதம் அடைந்தது. இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் கிராம மக்கள் சிலர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகிறார்கள். மேற்கொண்டு அசம்பாவிதம் நடப்பதை தவிர்க்க கூடுதலாக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.