புதுடில்லி, மார்ச் 26- நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியத்தை 24 சதவீதம் உயா்த்துவதாக ஒன்றிய அரசு 24.3.2025 அன்று அறிவித்தது. செலவுப் பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் ஊதியம் உயா்த்தப்பட்டதாகவும், இந்த அறிவிப்பு 2025, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்தது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சமாக உள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முதல் ரூ.1.24 லட்சமாக உயரவுள்ளது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கான அன்றாடப் படி, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றையும் உயா்த்தி நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. அந்த வகையில், எம்.பி.க்களுக்கான ஒரு நாளுக்கு படி ரூ.2,000-இல் இருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம், மாதம் ரூ.25,000-இல் இருந்து ரூ.31,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வோர் ஆண்டுக்குமான பணிக்கும் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000-இல் இருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செலவுப் பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.