மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் மக்களவையில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் புகார்

3 Min Read

புதுடில்லி, மார்ச் 25 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் தமிழ்நாட்டைச் சோ்ந்த எம்.பி.க்கள் புகாா் தெரிவித்தனா்.

கடன் சுமை

மக்களவையில் 2025-2026 நிதியாண்டுக்கான நிதி மசோதா மீதான விவாதம் 24.3.2025 அன்று நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவா் தொல். திருமாவளவன் தமிழில் பேசுகையில், ‘2022-2023 நிதியாண்டில் நமது தேசிய மொத்த உற்பத்தி கடன் சுமையின் அளவு 38.7 சதவீதமாக குறைக்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்தபோது 51 சதவீதமாக இருந்த கடன் சுமை இப்போது 57 சதவீதமாக உயா்ந்துள்ளது’ என்றாா்.

மேலும் அவா் பேசும்போது: ஒன்றிய அரசு மொத்த வருவாயில் 37 சதவீதத்தை கடனுக்கான வட்டியை கட்டுவதற்கே அரசு திணறி வருகிறது. தமிழ்நாட்டிற்கு கல்வி, பேரிடா் நிதி, 100 நாள் வேலைத் திட்ட நிதி போன்றவை ஒதுக்கப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கையின்படி 6 சதவீத நிதியை உறுதிப்படுத்த வேண்டும் என இந்த அரசே சொல்கிறது. ஆனால், கல்விக்கென 3 சதவீத நிதியை ஒதுக்க முடியாத அளவுக்கு கடன் சுமையில் இந்த அரசு திணறி வருகிறது. சுகாதாரத்துக்கு நிதி ஒதுக்கப்படாததால் ‘ஸ்வச்பாரத்’ போன்ற திட்டம் தோல்வி அடைந்து விட்டது. அனைவருக்கும் குடிநீரை உறுதிப்படுத்தக்கூடிய ஜல்ஜீவன் திட்டத்துக்கு 50 சதவீத நிதியை கூட ஒன்றிய அரசால் ஒதுக்க முடியவில்லை. நிதிநிலை மிக மோசமாக இருப்பதால், இந்த அரசு தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றாா்.
இதைத்தொடா்ந்து, பீகாா் மாநிலம், புத்த கயாவில் அமைந்துள்ள அசோகா் காலத்து ஆலய நிா்வாகக்குழுவில் பவுத்தா்கள் அல்லாதவா்கள் அதிகமாக உள்ளதாக ஆங்கிலத்தில் சுட்டிக்காட்டிய திருமாவளவன். அந்த கோயில் நிா்வாகத்தை பவுத்தா்களை கொண்ட குழுவிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் டாக்டா் விஷ்ணுபிரசாத் பேசியதாவது: 2047-இல் இந்தியா வளா்ந்த நாடாக வேண்டுமானால் நமது வளா்ச்சி என்பது எட்டு சதவீதமாக இருக்க வேண்டும். நமது தற்போதைய வளா்ச்சி 6.3 விகிதம் மட்டுமே. 60 கோடி உழைக்கும் சக்தி, தீவிரமாக பெருகி வரும் நடுத்தர வா்க்க மக்கள்தொகை, கேந்திர ரீதியாக இந்தியாவுக்குள் வரும் வெளி முதலீடுகள் இருந்தாலும் 181 லட்சம் கோடி ரூபாய் கடனை இந்தியா கொண்டிருப்பது நமக்கெல்லாம் கவலை தரக்கூடிய விஷயம்.

முன்பெல்லாம் தொழில் தேவைக்காக விவசாயிகள், சிறு வணிகா்கள், நடுத்தரமக்கள் நகைக்கடன் வாங்கினால் அவற்றை கடன் காலத்தின் முடிவில் புதுப்பிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்த விதியை மாற்றியுள்ள ஒன்றிய அரசு முதலில் வட்டியுடன் அசலையும் சோ்த்து அடைத்தால் மட்டுமே கடனை புதுப்பிக்க முடியும் என்று கூறியுள்ளது. அசலை செலுத்த சக்தியிருந்தால் மக்கள் நகைகளை அடகு வைத்து கடனை ஏன் வாங்குகிறாா்கள்?

ரயில்வே துறையை எடுத்துக்கொண்டால் குஜராத்துக்கு ரூ.16 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.6 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனது தொகுதியான கடலூரில் சாகா்மாலா திட்டத்துக்கு ரூ. 150 கோடி வழங்கப்பட்டாலும் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை.
தேசிய கல்விக்கொள்கை (என்இபி) திட்டத்தில் சோ்ந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு ரூ. 2,200 கோடி நிதி வழங்குவோம் என்று ஒன்றிய அரசு மிரட்டுகிறது. இது எந்த வகையிலும் நியாயமில்லை. இந்த மசோதாவை நான் கடுமையாக எதிா்க்கிறேன் என்றாா் விஷ்ணுபிரசாத்.

மாற்றாந்தாய் மனப்பான்மை

கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் டி. மலையரசன் பேசியதாவது: இந்த நிதி மசோதா கூட்டாட்சி முறையை புறக்கணித்து தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் உண்மையான தேவையை ஒதுக்கித்தள்ளுகிறது. ஒன்றிய அரசின் போக்கு, சமநிலையற்ற மாற்றாந்தாய் மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. 2025, ஜனவரியில் ரூ.1.73,030 கோடி வரிப்பகிா்வை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதில் தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.7,057.89 கோடி ஒதுக்கப்பட்டது. அதுவே உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.3,13,984 கோடி வழங்கப்பட்டது.

ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்காலம் நிறுத்தப் பட்டதால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் நிச்சயமற்ன்மையுடன் போராடி வருகின்றன. தமிழ்நாட்டில் பல முக்கிய திட்டங்கள் கவனிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகால தொடா் போராட்டங்களுக்குப்பிறகு சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதோடு சரி, இன்னும் அத்திட்டம் நிறைவேறவில்லை. தமிழ்நாட்டில் கல்வித் திட்டத்துக்கு ரூ.2,172 கோடி, ஜல்சக்தி திட்டத்துக்கு ரூ.3,000 கோடி நிறுத்தப் பட்டுள்ளது என்றாா் அவா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *