புதுடில்லி, மார்ச் 24 – ‘‘ஒன்றிய பி.ஜே.பி. அரசு வெற்று விளம்பர அரசே’’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ‘எக்ஸ்‘ தள பதிவில் கூறி யிருப்பதாவது:
மோடி அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவதை விட விளம்பரத்துக்கே முக்கியத்துவம் தரும் என்பதற்கு மேக் இன் இந்தியா நல்ல உதாரணம். கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மய்ய மாக மாற்ற 10 வாக்குறுதிகளை பா.ஜ. அரசு கொடுத்தது. அதில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. உற்பத்தி துறைகளில் வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தியின் பங்கு பெருமளவு சரிந்திருப்பது நிலைமை மோசமாகி விட்டதை காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
12 துறைகள் வளர்ச்சி அடையவில்லை!
தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. இந்திய தொழில்முனைவோர்கள் இந்தி யாவில் தொழில் தொடங்குவதற்குப் பதிலாக வௌிநாடுகளுக்குச் சென்று அங்கு நிறுவனங்களை அமைக்கின்றனர். ஏற்றுமதி துறை தடையற்ற வீழ்ச்சியை அடைந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட 14 துறைகளில் 12 துறைகள் வளர்ச்சி அடையவில்லை.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் பொருள்களின் பங்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோடி அரசாங்கத்தின்கீழ் ஏன் மிகவும் குறைந்துள்ளது? காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மொத்த ஏற்றுமதியில் பொருள்களின் பங்கு பெரிதும் துரிதப்படுத்தப்பட்டது என்பது உண்மை. ஒருவேளை உண்மையான தற்சார்பு இந்தியா என்பது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது என்பதைப் பிரதமர் மோடி இப்போது உணர்ந்திருக்கலாம்.
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே கூறியுள்ளார்.