சென்னை, மார்ச் 20- தமிழ்நாட்டின் தலைநகரமான பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-2026 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நேற்று (மார்ச் 19) நடைபெற்றது.
சென்னை மேயர் ஆர்.பிரியா சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான ஏராளமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கல்வி மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை, உயர்கல்வி வழிகாட்டுதல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றலுக்கான பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு
ஆங்கில பயிற்சி
இம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் கொண்டு வரும் கல்வி ஆண்டில் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்ளும் வகையிலும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாகவும் அவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக பயிற்சி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கு விழிப்புணர்வு
10 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு போட்டித்தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் மற்றும் பொது அறிவு ஆகிய பாடங்களை கற்றுத் தரும் ஆசிரியர்களைக் கொண்டு, போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.15,000 முதல் ரூ.1,50,000 வரை என்ற அடிப்படையில் ரூ.40.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
செய்தித்தாள் வாசிக்க பரிசுகள்
பள்ளி மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், குறிப்புகள் தயார் செய்யவும், வினாடி வினாப் போட்டிகள் நடத்திடவும், அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரால், தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து வினாத்தாள்கள் தயாரித்து, தேர்வுகள் நடத்தப்படும்.
அவற்றில், வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி மற்றும் மண்டலம் அளவிலான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், அக்குழுவில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஒன்றுக்கு ரூ.15,000 முதல் ரூ.75,000 வரை 211 பள்ளிகளுக்கு ரூ.86.7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வளமிகு ஆசிரியர் குழு
சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்காக, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களைக் கொண்டு “வளமிகு ஆசிரியர் குழு” அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு உபகரணங்கள்
விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.30 லட்சம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.30 லட்சம், நடுநிலைப்பள்ளி விளையாட்டு மய்தானங்களை சமப்படுத்தலுக்கு ரூ.30 லட்சம், போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு பயணப்படி மற்றும் உணவுப்படிக்கு தலா ரூ.500 என்ற வீதம் ரூ.62.55 லட்சம், விளையாட்டு வீரர்களுக்கு உரிய காலணிகள் வழங்க ரூ25 லட்சம் என ஒதுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறைகளில்
மின்னணுப் பலகைகள்
பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கு வகையில் பள்ளி வகுப்பறைகளில் மின்னணுப் பலகைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கென மழலையர் பள்ளிகளுக்கு ரூ.1.66 கோடி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.64.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளியிடப்பட்ட
முக்கிய அறிவிப்புகள்:
மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உணவு விற்பனை மண்டலங்கள் 2 இடங்களில் அமைக்கப் படும்.
இறந்தோரின் உறவினர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் வரையில் உடல்கள் தற்காலிகமாக குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கும் வசதி, மூலக் கொத்தளம் மற்றும் பெசன்ட் நகர் மயானங்களில் ஏற்படுத்தப்படும்.
மாநகராட்சியின் 70 பூங்காக்களில் ரூ.2 கோடியில் புத்தகம் வாசிப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்.
டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்.
தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த ரூ.3 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோர்களுக்கு தனி நலப் பிரிவு ரூ.90 லட்சத்தில் அமைக்கப்படும்.
கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்திலிருந்து, ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும்.
மேயர் மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியிலிருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்படும்.
மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த ரூ.2.34 கோடி ஒதுக்கப்படும்.
மகளிருக்கு இலவசமாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி ரூ 7.50 கோடியில் வழங்கப்படும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரிக்க ரூ.5 கோடியில் ஆவண காப்பகம் மேம்படுத்தப்படும்.
அனைத்து தகன மேடைகளிலும் ஜெனரேட்டர் வசதி ரூ.15 கோடியில் ஏற்படுத்தப்படும்.
செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு அவசர சிகிச்சை மய்யம் ரூ.25 லட்சத்திலும், வட சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு மயான பூமி வசதியும் ஏற்படுத்தப்படும்.
முக்கிய பேருந்து வழித்தடங்களில் 200 இடங்களில் புதியதாக நிழற்குடைகள் அமைக்கப்படும்.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 300 பூங்காக்களை பொது மக்கள் அதிகம் பயன்படுத்திடும் வகையில், ரூ.43 கோடியில் பூங்காக்கள் பழுது பார்க்கப்படும்.
மேம்பாலங்கள் மற்றும் ரயில்வே மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியை உகந்த முறையில் ரூ.42 கோடியில் அழகுபடுத்தப்படும்.
பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் வழங்குவதற்கு வாட்ஸ்அப் அடிப் படையிலான தகவல் தொடர்புகளை உருவாக்கிட, ரூ.4.46 கோடி நிதி ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்ட 62 அறிவிப்புகளை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த 82 அறிவிப்புகளில், 39 அறிவிப்புகள்
செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 39 அறிவிப்புகள் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 4 அறிவிப்புகள் நிர்வாக காரணங்களுக்காக கைவிடப்பட்டதாகவும் மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.