“தமிழர் தலைவரின் வருகைக்காக தா.பழூர் காத்திருந்தது. ஆசிரியரின் உரைக்காக! சுற்று வட்டார ஊர்களில் எல்லாம் பொதுக் கூட்டம் நடத்திய நாங்கள் – தா.பழூரில் மட்டும் கூட்டம் நடத்தாமல் விட்டு வைத்திருந்தோம். பலரும் கேட்டார்கள், சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் கூட்டம் நடத்துகிறீர்களே – தா.பழூரில் ஏன் கூட்டம் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என்று! நாங்கள் சொன்னோம்… திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவரின் வருகைக்காக தா.பழூர் காத்திருக்கிறது… விரைவில் இங்கு ஆசிரியர் வருவார்… அறிவார்ந்த கருத்துகளைத் தருவார்… பொறுத்திருங்கள் என்றோம்…. இன்ற மாநாடு போல் மக்கள் வெள்ளத்தின் ஊடே தமிழர் தலைவர் இன எழுச்சி உரை வழங்கிட உள்ளார்.”இப்படி பேசி வரவேற்புரையாற்றிய ஒன்றிய தி.மு.க. செயலாளர் – ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தமிழர் தலைவரை நெகிழச் செய்தார்.
ஆம்! தா.பழூர் புதுக்கோலம் பூண்டது. காணும் இடமெங்கும் தி.க., தி.மு.க. கொடிக்காடாய்… வரலாற்றுச் செய்திகளை வரவேற்பாய் தந்திட்ட பதாகைகளாய் பளிச்சிட்டன. பிரமாண்ட மேடை… பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, சுயமரியாதை வீரர் க.சொ.கணேசன் உருவச் சிலைகளுக்கு அருகே. வண்ண விளக்குகள் எங்கும ஜொலித்தன. இரவை பகலாக்கின. வாண வேடிக்கைகள் வர்ண ஜாலம் செய்தன. அதிர் வேட்டுகள் தலைவரின் வருகையை மக்களுக்கு அறிவித்தன. கண்ணுக்கெட்டிய தூரம் மக்கள் வட்டம். ஆண்களும், பெண்களுமாய் பெருந்திரளாய் குழுமி இருந்து தமிழர் தலைவரை உச்சிமுகர்ந்து வரவேற்ற
காட்சி கண்கொள்ளாக் காட்சியன்றோ!
ஊரின் முகப்பில் கருஞ்சட்டை காளையர்கள் வாழ்த்தொலியுடன் தமிழர் தலைவருக்கு வரவேற்பு நல்கினர். சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், ஒன்றிய, நகர தி.மு.க. முன்னணியினர், திராவிடர் கழக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூடியிருந்து வரவேற்பளித்தனர்.
மறைந்தும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கக்கூடிய க.சொ.கணேசன் அவர்களால் அமைக்கப்பட்ட தி.மு.க. அலுவலகத்துக்குள் தமிழர் தலைவர் ஆசிரியர் அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த கால நினைவுகளில் ஆசிரியர். மாணவர் பருவத்தில் தாம் இந்த ஊருக்கு பரப்புரைக்காக வந்ததும், இரவு தங்கியதும் மறக்க முடியாத நினைவுகள்… ஒரு தாமரைக்குளம்கூட பக்கத்தில் இருக்குமே… என்ற தலைவரின் சரியான நினைவுகளுக்கு “ஆம்… இருக்கிறது அய்யா” என்ற மூத்த தோழர்களின் பதில் இளையோருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் சந்திப்பு, தி.மு.க. கூட்டணி என்பது யாராலும் அசைக்க முடியாத கற்கோட்டை போன்றது என்பதை உறுதிப்படுத்தினார். பா.ஜ.க. ஒன்றிய அரசின் தமிழர் விரோதப் போக்கை அம்பலப்படுத்தினர்.
மாநாடு போன்ற முப்பெரும் விழா!
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா – தி.மு.கழகத் தலைவர் – முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 72ஆவது பிறந்த நாள் விழா – மக்கள் தொண்டர் மொழிப்போர் தியாகி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா இணைந்த முப்பெரும் விழா மாநாடு போல் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளோடு தொடங்கியது. மேடைக்கு அருகே இருந்த பெரியார் – அண்ணா – க.சொ.க. சிலைகட்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தி.க., தி.மு.க. கொடிகள் உயர்த்தப்பட்டன.
போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சி செய்துவரும் மாண்புமிகு அமைச்சர் சா.சி.சிவசங்கர், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், சட்டமன்ற உறப்பினர் க.சொ.கண்ணன் ஆகியோர் மூன்று சிலைகட்கும் மாலை அணிவித்து ஒலிமுழக்கம் எழுப்பினர்.
திராவிடர் கழகக் கொடியை கழகத் தலைவர் ஆசிரியர் உயர்த்தினார். தி.மு.கழகக் கொடியை மாண்பமை அமைச்சர் உயர்த்தினார்.
தா.பழூர் க.சொ.கணேசன் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முப்பெரும் விழாவாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் தொடங்கியது. ஒன்றிய கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான க.சொ.க.கண்ணன் உணர்ச்சிமிக்க வரவேற்புரையாற்றினார். ஒன்றிய தி.மு.க. முன்னணி வீரர்கள் முன்னிலை வகித்தனர்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். தி.மு.க. சட்டத் திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி திமுக மேற்பார்வையாளர் கலா சுந்தரமூர்த்தி பேசியதை அடுத்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் இன எழுச்சி உரையாக முக்கால் மணி நேரத்துக்கும் கூடுதலாக பேசினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்,. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், அரியலூர் மாவட்ட கழக செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், காப்பாளர் சி.காமராஜ், காப்பாளர் சு.மணிவண்ணன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் உள்ளிட்ட முன்னணி தோழர்களும், தி.மு.க. முன்னணி தோழர்களும் பெருமளவில் பங்கு பெற்றனர்.
மானமிகு சுயமரியாதை வீரர் – மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் வரலாற்று நூலினை மாண்புமிகு அமைச்சர் வெளியிட இயக்க முன்னோடிகள் பெற்றுக் கொண்டனர்.
தமிழர் தலைவரால் தொகுக்கப் பெற்ற நூலில் சில வரலாற்றுச் சுவடுகள்
கண்டியங்கொல்லை சொக்கலிங்கம் கணேசன் (க.சொ.க.) தொடக்கத்தில் திராவிடர் கழகத்திலும் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலுமாக மக்கள் தொண்டாற்றியவர். இனிமையான சுபாவம்; எளிமையான வாழ்வு; அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பேரன்பு; அனைவரும் நேசிக்கும் நன்மதிப்பு; பொதுத் தொண்டில் ஆழமான ஈடுபாடு கொண்டவர் அவர்.
“காசோ பணமோ; கனகமாலை வைர மாலையெனக் கணக்கிலா உயர மாலை குவிந்தாலும்; எங்கள் க.சொ.க. எனும் கழக மாமாலையே கடவுளே பிறந்துவரினும் மாற்ற முடியாது” என்றும்,
“அவர் உறுதிகுலையாக் கழகப் படையின் ஓர் அங்கம் – குருதிக் கொட்டி கொள்கை வளர்த்த செழுந்தங்கம்; ஜெயங்கொண்டம் பகுதியிலே பயமறியாத் தமிழ்ச் சிங்கம்; நயந்து குனிந்திடா அந்த உருவம் கண்டாலே பகைபங்கம்” என்றெல்லாம் தலைவர் கலைஞரால் பாராட்டு பல பெற்றவர் மக்கள் தொண்டர் க.சொ.க.!
“மாணவப் பருவத்திலேயே தன்மான இயக்கத்தில் ஈடுபட்டவராகவும், ஹிந்தி ஆதிக்க எதிர்ப்பு உணர்வு கொண்டவராகவும் விளங்கியவர்.
தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும், தலைவர் கலைஞரிடமும் நீங்கா பற்றுடையவராக அவர்களின் கட்டளையை ஏற்றுக் செயல்பட்டவர்” என்கிறார் பேராசிரியர் க.அன்பழகன்.
“ஜெயங்கொண்டம் பகுதியில் தனி மனிதனாக நின்று எத்தனையோ எதிர்ப்புகளுக்கெல்லாம் ஈடுகொடுத்து, எது நேர்ந்தபோதும் கழகப் பணியில் பின்வாங்காது சுழன்று பணியாற்றிய கொள்கைவாதி – சிறந்த செயல்வீரர்” என சான்றளிக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
“க.சொ.கணேசன் அவர்கள் ஒரு பழுத்த நாத்திகவாதி; பெரியாரின் உண்மைத் தொண்டன்; அண்ணாவின் அருமைத் தம்பி; தலைவர் கலைஞரின் பேரன்பைப் பெற்றவர்; கொள்கைவாதி – பொதுநலத் தொண்டர்” என்று நெஞ்சார போற்றுகிறார் மாநிலங்களவை உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர் என பல பொறுப்புகளில் இருந்த எஸ்.சிவசுப்பிரமணியன்.
“விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பட்டவர்த்தனமாகப் பேசுவது! அரசியலில் இப்படி பேசுவது என்பது சில நேரங்களில் பலமாகவும், பல நேரங்களில் பலவீனமாகவும் ஆகிவிடுவதை உணர்ந்திருக்கிறேன்.
முதலமைச்சரின் மொழிப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு
அண்ணன் க.சொ.கணேசன் அவர்களுக்கு பட்டவர்த்தனமாகவும், வெளிப்படையாகவும் பேசுவது அவரது பலமோ, பலவீனமோ என்பதை எடை போடுகிற வயதும் தகுதியும் எனக்கில்லை என்றாலும், அவரது அந்த ஆளுமைப் பண்பைக் கண்டு பலமுறை வியந்தும் பயந்தும் இருக்கின்றேன்” என மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் அவர்களின் வெளிப்படைத் தன்மைக்கு ஆளுமைக்கு சான்றளிக்கிறார் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா.
“1972இல் இவரது திருமணத்துக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையேற்க தேதி வழங்கி திருமண நிகழ்வு இடத்துக்கு வந்துவிட்டார். மணமகனைக் காணவில்லை. ராகுகாலத்தில்தான் திருமணம் செய்துகொண்டு மூடநம்பிக்கைகளை முறியடிப்பேன் எனச் சொல்லி கிராமத்துக்குப் போய்விட்டார். அன்றைய முதலமைச்சர் கலைஞரை ஒரு மணி நேரம் காக்க வைத்து ராகுகாலத்தில்தான் மங்கல நான் அணிவித்தார். கொண்ட கொள்கையில் உறுதியானவர்” என்ற அவரின் கொள்கைப் பற்றை பாராட்டுகிறார் இன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்!
எல்லாவற்றுக்கும் மேலாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர், மறைந்தும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கக்கூடிய தொண்டறச் செம்மல் க.சொ.கணேசனின் சிறப்புப் பண்புகளை எப்படி எல்லாம் பட்டியல் போடுகிறார் பாருங்கள்…
“திராவிடர் இயக்கத்துப் போர்வீரர்… சுயமரியாதைச் சுடரொளி அணைக்கரை டேப் தங்கராசு அவர்கள் மூலம் கொள்கை உணர்வு பெற்றவர்… இளம் வயதிலேயே திராவிடர் கழக மேடைகளில் பெரியார் கருத்துகளைப் பேசியவர்… ஆதிக்க ஹிந்தியை அன்றே எதிர்த்த மொழிப் போர்வீரர்! தா.பழூர் பள்ளிக்கு தந்தை பெரியாரை அழைத்து பேசச் செய்தவர்…
ஒரு முரட்டு சுயமரியாதைக்காரர்…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பில் இருந்தாலும் திராவிடர் கழக உறுப்பினர் போல அன்புகாட்டி செயல்பட்டு வந்தவர்…
தனிப்பட்ட முறையில் நம் மீது பேரன்பு கொண்டவர்… தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதிலே தன்னை அர்ப்பணித்தவர்…
தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதிலே தன்னை அர்ப்பணித்தவர்…
தந்தை பெரியார் அரியலூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் பகுதிகளுக்கு எப்போது வந்தாலும் கூட்டத்துக்கு தோழர்களை அழைத்து வந்து தெளிவு பெறச் செய்வதுடன் பெரியாரைப் பற்றியே உரையாடிக் கொண்டே இருப்பார்…”
ஒரு கொள்கை வீரனை எப்படியெல்லாம் பாராட்டி அவரின் பங்கு – பணிகளை விவரிக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் பாருங்கள்!
வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபு அடியார்கள் வரலாற்றில். ஆனால், திராவிடர் இயக்க வரலாற்றில் அதுபோலவே எஸ்.எஸ். என்று மாவட்ட மக்களால் அழைக்கப்பட்ட எஸ்.சிவசுப்பிரமணியன் சீரிய பகுத்தறிவாளர். சுயமரியாதைக்காரர். திராவிட மாணவர் கழகத்தில் பங்கு பணியாற்றியவர். அவரின் மகன்தான் இப்போது திராவிட மாடல் ஆட்சியின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர். மாவட்ட தி.மு.க. செயலாளர்.
தந்தையைப் போலவே தலைமைக்கு விசுவாசம், கட்டுப்பாடுமிக்க களப்பணி – சுயமரியாதை வீரர் – சீரிய பகுத்தறிவாளர்.
க.சொ.கணேசன் – நாத்திகர், சுயமரியாதை தீரர். சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க.வில் இருந்து சாதனை படைத்தவர். அவரின் மகன் கண்ணன் இப்போது சட்டமன்ற உறுப்பினர். ஒன்றிய கழக செயலாளர் – சிறந்த கொள்கையாளர் – சுயமரியாதைக்காரர்.
திராவிடர் கழகமும், தி.மு.கழகமும், இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அறிஞர் அண்ணா சொன்னதை எடுத்தியம்பும் மாவட்டமாக அரியலூர் மாவட்டம். வாழையடி வாழையென திராவிடர் இயக்க மரபு தொடர்கிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு மகத்தான மக்கள் ஆதரவு தொடருவதை தா.பழூர் நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. தமிழர் தலைவர் ஆசிரியரின் வருகையும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க உரையும் ஜாதி, மதங்களைக் கடந்து மக்களை சமத்துவத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை எடுத்தியம்பியது. தா.பழூர் நிகழ்வு சாதனை படைத்தது. ஏற்பாட்டாளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். வெல்க திராவிட மாடல் ஆட்சி!