எப்பொழுது பார்த்தாலும் சங்பரிவார்களுக்கு மதப் பிரச்சனை தானா? மகாராட்டிராவில் அவுரங்கசீப் நினைவிடத்தை கையில் எடுக்கும் பிஜேபி

Viduthalai
2 Min Read

புதுடில்லி, மார்ச் 12 மகாராட் டிராவில் உள்ள முகலாயர் மன்னர் அவுரங்கசீப் நினைவிடத்தை அகற்ற முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு அளித் துள்ளார்.
மகாராட்டிரா சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டம் குல்தாபாத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் நினைவிடம் உள்ளது. 1707 மார்ச் 3-ஆம் தேதி அவுரங்கசீப் இறந்தபின் அவரது விருப்பத்தின் பெயரில் இங்கு உடல் புதைக்கப்பட்டது. அந்த நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின் னமாக இந்த நினைவிடம் உள்ளது.
இந்நிலையில், கொடுங்கோல் மன்னன் என்று அவுரங்கசீப் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார். குறிப்பாக பாஜக ஆட்சியில் பல முறை அவுரங்கசீப்புக்கு எதிராக குரல்கள் எழுகின்றன. இதன் காரணமாக டில்லியில் அவுரங்கசீப் சாலையின் பெயர் மாற்றப்பட்டது. மகாராட்டிராவின் அவுரங்கபாத் மாவட்டத்தின் பெயரும் சத்ரபதி சம்பாஜி நகர் என மாறியது.

எதிர்ப்பு

இப்போது, அவுரங்கசீப் நினை விடத்தையும் இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி. உதயன் ராஜே போஸ்லே உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு குரல் கொடுத்ததால், நினைவிடத் திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
சீக்கியர்களின் 9-ஆவது குரு தேஜ் பகதூரின் விழாவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று (10.3.2025) பேசும்போது, “அவுரங்கசீப் நினைவிடம் அகற்றப்பட வேண்டும். அதற்கு காங்கிரஸ் ஆட்சியில் பாது காக்கப்பட்ட சின்னம் அந்தஸ்து அளிக்கப்பட்டு விட்டது. எனவே, அந்த சட்டத்துக்கு ஏற்ற வகையில் விதிகளை மீறாமல் பிரச்சினையின்றி நினைவிடத்தை அகற்றுவது அவசியம்” என்றார்.
பாலிவுட் வரலாற்று திரைப் படம் ‘சாவா’தான் அவுரங்கசீப் நினைவிடத்தை அகற்ற வேண்டும் என்பதற்கு காரணமானது. சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகராஜின் கதையான இந்த திரைப்படம் குறித்து மகாராட்டிராவின் பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதம் எழுந்தது. அப்போது சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி பேசும் போது, “பலரும் நினைப்பது போல் அவுரங்கசீப்பை நான் கொடுங்கோலர் எனக் கருத மாட்டேன். சமீபத்திய ஆட்சியாளர் களாலும், திரைப்படங்களாலும் அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கப்படுகிறது” என்று கூறினார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அபு ஹாஸ்மி மார்ச் 26 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதிலும் இருந்து நீக்கி வைக்கப் பட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *