அமைச்சர் பி.கே.சேகர்பாபு
சென்னை,மார்ச் 10- மும்மொழி கொள் கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் கையெழுத்து பெறும் பாஜ, உண்மையாகவே தமிழ்நாட்டு மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், சொரணை இருந்தால் ஒன்றிய அரசிடம் நிதியை பெற்று தர முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நடந்து வரும் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வு ஓட்டேரி முத்து நகர் மற்றும் சூளையில் உள்ள கே.எம். கார்டன் தெருவில் 8.3.2025 அன்று காலை நடந்தது.
இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
10 மாதத்தில் தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு மும்மொழி கொள்கை தமிழ்நாட்டில் அமல் படுத்தப்படும் என ஒன்றிய இணை அமைச்சர்
எல்.முருகன் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 13 மாதம் இருக்கிறது. 10 மாதத்தில் ஆட்சிக்கு வருவோம் என்றால் எப்படி மந்திரம் மற்றும் யாகம் செய்து வர வைப்பாரா, ஜனநாயக ரீதியாக தேர்தலை எதிர் கொள்ள தி.மு.க. களத்தில் நின்று கொண்டிருக்கிறது,
ஆனால்,
எல்.முருகனையோ, அண்ணாமலையையோ தொடர்பு கொண்டு பாருங்கள் அவர்கள் கிடைக் கிறார்களா என்று.
200 நிச்சயம்
களத்தில் ஒன்றிணைந்து மக்களோடு திமுக பயணித்து வருகிறது. வரும் தேர்தலில் 200 நிச்சயம் 234 எங்கள் லட்சியம். மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறது பாஜ. மதத்தால், இனத்தால் பிரிவினையை உண்டாக்க நினைத்தவர்கள் தமிழ்நாடு மண்ணில் இடமில்லை என்பதை அறிந்த பிறகு மாணவச் செல்வங்கள் இடையே இந்த சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.
அறநிலையத் துறையின் பயணம்
எப்போதெல்லாம் திமுக மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதோ, இன்னும் 10 அடி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சி என சொன்னார்கள். ஆனால் 2,670 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது.
ரூ.300 கோடி செலவில் கோயில்கள் புனரமைப்புப் பணிகளுக்கு அரசின் சார்பாக முதல்வர் வழங்கியுள்ளார்.
ரூ.340 கோடி வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் புதிய வேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை பயணித்து வருகிறது.
சொரணையிருந்தால்…
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வி என்பது மாநகராட்சி பள்ளியில் ஒதுக்கப்பட்ட சூழல் இருந்ததை மாற்றி கல்வித்தலங்களாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் மும்மொழி கொள்ளை பற்றி பேசுபவர்கள், சொரணை இருந்தால் ஒன்றிய அரசிடம் கேட்டு நிதியை பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.