இங்கிலாந்தின் ஈஸ்ட் ஹாமில் நடைபெற்ற “தந்தை பெரியார் மீதான அவதூறுகள் – விளக்கமும் உரையாடலும்” கூட்டத்தில் இலங்கை, தமிழ்நாட்டுத் தமிழர்களின் கருத்துரை
இலண்டன், பிப். 21- இலண்டனில் உள்ள பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் மற்றும் தமிழ் மொழிச் செயற்பாட்டகம் அமைப்புகள் இணைந்து ‘தமிழர் தலைவர் தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகள் – விளக்கமும் உரையாடலும்’ என்ற தலைப்பில் நிகழ்வினைக் கடந்த 8.2.2025 அன்று ஒருங்கிணைத்து வெற்றிக் கரமாக நடத்தினர். பதிப்பாளரும், செயற் பாட்டாளருமான இலங்கைத் தமிழரான எம்.பவுசர் தொடக்கவுரை ஆற்றினார்.
இலங்கையில் பெரியார்
இலங்கையில் பெரியார் என்ற தலைப்பில் கல்வியாளரும் மூத்த எழுத்தாளரும் ஆய்வாளருமான இலங்கை மலையகத்தின் பதுளைப் பகுதியைச் சேர்ந்த மு.நித்தியானந்தம் அவர்கள் உரையாற்றினார். தனது சொந்த வாழ்வை திரும்பிப் பார்க்கும் போது திராவிடர் கழகச் சிந்தனையாளனாகத் தனது மாணவர் பருவத்தில் வளர்ந்திருப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டார். 1960களில் மலையகத்தின் பதுளைப் பகுதி பெரியாரியச் சிந்தனையின் கோட்டையாகத் திகழ்ந்தது என்று குறிப்பிட்டார். மலையக பகுதியில் பெரியார் & அண்ணா அவர்களின் எழுத்துகள் என்ன மாதிரியான தாக்கங்களை அன்றைய இளைய சமூகத் திடம் ஏற்படுத்தியது என்பது குறித்தும் விரிவாகப் பேசினார்.
Home land பத்திரிகைகள்
ஜாதி மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இறை மறுப்பு போன்ற சிந்தனைகள் அங்கு வளர்ச்சியடைந்ததற்கு மிக முக்கியமான காரணிகளாகப் பெரியாரிய சிந்தனைகள் இருந்தன என்றார். குடிஅரசு, விடுதலை, முரசொலி போன்ற 30க்கும் மேலான திராவிட ஏடுகள், அதிலும் குறிப்பாக அண்ணாவின் Home land பத்திரிகைகள் தங்களுக்குக் கிடைத்தது என்றால் பெரியார் & அண்ணாவின் சிந்தனைகள், திராவிடர் கழகத்தின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதைக் கவனிக்க வேண்டும் என்றார். பெரியார், இரட்டைமலை சீனிவாசன் போன்ற தலைவர்கள் உட்படப் பல தலைவர்கள் இலங்கைக்கு வருகை புரிந்ததைக் குறித்தும், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தாக்கங்கள், இலங்கையில் பெரியாரியச் சிந்தனைகளின் தாக்கங்களால் உருவாக்கப்பட்ட பல சுயமரியாதைக் கழகங்கள் குறித்த வரலாற்றையும் பகிர்ந்து கொண்டார்.
மு.நித்தியானந்தம்
எதிர்காலத்
தலைமுறையினரின் கல்வி
பெரியாரின் கல்விச் சிந்தனைகள் என்ற தலைப்பில் உரையாற்றிய சிறார் எழுத்தாளரும் பெரியாரியச் சிந்தனையாளருமான பிரபு, எதிர்கால தலைமுறையினர் விடுதலையின் முக்கிய அங்கமான கல்வித் தளத்தில் பெரியாரின் செயற்பாடுகள் அதனால் கிடைத்த சமத்துவமான கல்வி குறித்து விரிவாகப் பேசினார். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் உள்ள இட ஒதுக்கீடு முறை குறித்தும், பள்ளிகளில் உள்ள சத்துணவுத் திட்டம் ஆகியவற்றைத் தமிழ்நாடு கல்வி முறையோடு ஒப்பிட்டும் பேசினார். தமிழ்நாட்டு அரசியல் என்பது “எதிர்காலத் தலைமுறையினரின் கல்வி” என்ற தளத்தில் இயங்கக் கூடியது என்றார். காமராசரின் ஆட்சி, நெ.து. சுந்தரவடிவேலு அவர்களிள் செயற்பாடுகள், இட ஒதுக்கீடு, தகுதி திறமை எனும் மோசடி, ஜோதிபா பூலே – சாவித்திரி பூலே, அம்பேத்கர் எனக் கல்வி சார்ந்த வரலாற்றுச் செய்திகள் பலவற்றையும் பகிர்ந்துகொண்டார். கல்வியின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்றும், அதன் பற்றற்ற தன்மையின் அவசியம் குறித்து பெரியாரின் சிந்தனைகளையும் உரையில் பகிர்ந்துகொண்டார்.
வேலு
உழைப்புச் சுரண்டல்
வலதுசாரி எதிர்ப்பு அரசியலில் பெரியாரின் தேவை ஏன்? என்ற தலைப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுசாரிச் செயற்பாட்டாளர் தோழர் வேலு உரையாற்றினார். 1930களில் பெரியார் பொருளியல் சார்ந்து பேசிய உரையைக் குறிப்பிட்டுத் தனது உரையைத் தொடங்கினார். “உழைக்கிறவன் ஏன் எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்கிறான், அவன் ஏன் அடுத்தகட்ட இடத்திற்கு நகரவேயில்லை’ என்ற கேள்விக்கு எப்படி பதில் தருகிறார்? உழைப்புச் சுரண்டல் குறித்து பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்பதை எடுத்துரைத்து, கல்வி மற்றும் பொருளாதார உரிமைகள் மீதும் அதன் வழியே மக்களின் சுயசிந்தனை உணர்வு மீதும் தொடர்ந்து வலதுசாரி அரசியில் ஏன் தாக்குதல் நடத்துகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். வலதுசாரி அரசியல் எங்கெல்லாம் பாதிப்பு அடைகிறது என்று பார்த்தால் அங்கெல்லாம் பெரியாரின் சிந்தனைகள் இருப்பதை நாம் பார்க்க முடியும். அதனால்தான் அவர்கள் தொடர்ந்து பெரியாரியச் சிந்தனைகள் மீது அவதூறு எழுப்பி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
பவுசர்
திராவிடமும், பெரியாரும், தமிழ்த்தேசியமும்
திராவிடமும், பெரியாரும், தமிழ்த்தேசியமும் எனும் தலைப்பில் பேசிய இலங்கையைச் சேர்ந்த பெரியார், அம்பேத்கர் ஈடுபாட்டாளரும், செயற்பாட்டாளருமான ராகவன் தனது இளமைக் காலத்தில் ஈழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளோடு இயங்கியவர். தற்போது அதிலிருந்து விடைபெற்று பெரியாரிய-அம்பேத்கர் சிந்தனைகள் எனும் தளத்தில் இயங்கியும் எழுதியும் வருகின்றார். “உலகம் முழுதும் சமகாலத்தில் வலதுசாரிச் சிந்தனைகள் மேலோங்கி வரும் காலத்தில் பெரியாரியச் சிந்தனைகள் மீது செலுத்தப்படும் அவதூறுத் தாக்குதல்களை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். பெரியார் மீது தொடர்ந்து ஏன் பொய்ப் பிரச்சாரங்கள் எழுப்பப்படுகின்றன? ஏன் சிலர் அதன் பின் நிற்கின்றனர்? வரலாற்றில் எங்கு எதனால் இந்தப் பிழைகள் நடக்கின்றன? எனப் பல விசயங்களை வரலாற்று நிகழ்வுகளின் துணைகொண்டு பேசினார். பெரியார் என்பவர் தமிழர் தலைவர் மட்டுமல்ல, அவர் இந்திய உபகண்டத்தின் தலைவரும்கூட! ஏனென்றால் பெரியாரின் சிந்தனைகள் சமத்துவம், ஜாதி மறுப்பு, பெண்ணுரிமை என்ற புரிதலைக் கொண்டது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து அவதூறுகள் எப்படியெல்லாம் வளர்த்தெடுக்கப்படுகின்றன என்ற விரிவான வரலாற்றுப் பார்வைகளைப் பகிர்ந்துகொண்டார்.
பிரபு
பெரியார் எனும் மனிதம்
பெரியார் எனும் மனிதம் என்ற தலைப்பில் இலங்கையைச் சேர்ந்த பெரியாரிய செயற்பாட்டாளர் மயூரன் உரையாற்றினார். “மொழியை நாம் இரண்டு தளங்களில் பார்க்க முடியும். மொழியை அறிவியல் ரீதியாகப் பார்ப்பது அல்லது மொழியை அதன் அழகியல் சார்ந்து பார்ப்பது. பெரியார் மொழியை அறிவியல் ரீதியாகப் பார்த்தார். அழகியல் சார்ந்த உணர்வு ரீதியான பார்வைக்கு அவர் முக்கியத்துவம் தரவில்லை. அது அவரைப் பொறுத்தவரை அவசியமும் இல்லை. ஆனால், சீமான் போன்ற இந்த அவதூறு பேசும் கூட்டத்திற்கு மொழி மீதான அறிவியல் பார்வையும் இல்லை, உணர்வு ரீதியான அழகியல் பார்வையுமில்லை. இந்த கூட்டம் ஒரு கவிதையைக் கூட வாசித்திருக்க மாட்டார்கள், திருக்குறள் உட்பட எந்த ஒரு இலக்கியப் புத்தகங்களையும் வாசித்திருக்க மாட்டார்கள்.
மயூரன்
ஆனால் இவர்கள் அதீத கற்பனைகளை சிலாகித்துப் பேசுபவர்களாக இருப்பார்கள். தமிழை ஆதிசிவன் படைத்தார் என்றும், குமரிக் கண்டம் என்றும் தொடர்ந்து அறிவியலுக்கு எதிர்நிலையான விசயங்களை மிதமிஞ்சிய கற்பனைகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் கூட்டமாகவே இருக்கின்றனர். அறிவியல் சார்ந்தோ அழகியல் சார்ந்தோ மனிதத்தின் அடிப்படையான உணர்வுகள் அற்ற மூடத்தனமான விசயங்களை வெளிப்படுத்துபவர்களாகவே இவர்கள் இருக்கின்றனர். நாம் சில நிமிடங்கள் அவர்களைப் பேச விட்டாலே இவர்களின் மொழி அறிவை புரிந்துகொள்ளலாம். எந்த வாசிப்பும் கிடையாது. திருக்குறள், அகநானூறு, புறநானூறு, ஏன் சமகாலத்தி லுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் என எதையுமே இவர்கள் வாசித்திருக்க மாட்டார்கள். நல்ல வேளை இவர்களுக்கு அரசியல் அதிகாரமில்லை. இவர்களிடம் ஜனநாயகப் போக்கு துளியுமில்லை என் பதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். இவர்களைக் கையாள ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும். பெரியார் என்பவர் மொழிக்காகப் போராடியவரா என்று தனியாக நாம் பார்க்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. ஏனென்றால் பெரியார் சமத்துவத்திற்காகப் போராடியவர். பெரியார் என்பவரை மூன்று சொற்களால் சொல்ல வேண்டுமென்றால், “பெரியார் வெறுத்தது ஆதிக்கம், பெரியார் நேசித்தது மனிதம், பெரியார் காண விரும்பியது சமத்துவம்” என்று தனது உரையைத் தொடர்ந்தார்.
ராகவன்
கர்ப்பப் பை
நிகழ்வின் நன்றியுரையை இலங் கையைச் சேர்ந்த பெண்ணிய, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரியச் சிந்தனையாளர் தோழர் பாரதி வழங்கினார். நன்றியுரையில் அவதூறுவாதிகள் “வலதுசாரி” என்ற அழைக்கக்கூட லாயக்கற்றவர்கள். இவர்கள் feudal mentality கொண்டவர்கள். இவர்களை நாம் feudalistic என்றழைக்க வேண்டும். அடுத்து பெரியார் கர்ப்பப் பை குறித்து பேசியதற்கு இந்த ஆண் களுக்கு என்ன வந்தது? பெரியார் ஒரு தந்தையின் நிலையிலிருந்து பேசியதை இந்த சீமான் போன்ற ஆட்கள் ஒருகாலத்திலும் புரிந்துகொள்ளப் போவதில்லை.
பாரதி
பெரியாரின் அந்த அக்கறையைப் பெண்ணாக இருப்பவர்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று குறிப்பிட்டார். முன்னதாக இந் நிகழ்வு தொடங்கும் வேளையில் குழப்பம் விளைவிக்க முனைந்த காலிகள் சிலர், இங்கிலாந்து காவல்துறையினரால் வெளி யேற்றப்பட்டனர். கூட்டம் மிகச் செறிவாக நடைபெற்றது. தொடர்ந்து இத்தகைய செயல்பாடுகளை முன்னெடுக்கத் தோழர்கள் உறுதிபூண்டனர்.