பிரயாக்ராஜ், பிப்.21 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. வரும் 26ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இங்குள்ள நீரில் இதுவரை 56.26 கோடி பேர் புனித நீராடி உள்ளனராம். இந்நிலையில், ‘கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தின் பல இடங்களில் ஓடும் நீரில், மல கோலிபார்ம் என்ற பாக்டீரியா காணப்படுகிறது. இந்த நீர் குளிப்பதற்கான முதன்மை தரத்துடன் ஒத்துப் போகவில்லை’ என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதை சுட்டிக் காட்டி உ.பி. அரசு மீது எதிர்க்கட்சி யினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உ.பி. சட்டமன் றத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘திரிவேணி சங்கம நீர் புனித நீராடுவதற்கு தகுதியானது. ஆனால் அதில் பாக்டீரியா கலந்திருப்பதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறி, மகா கும்பமேளாவை சிறுமைப்படுத்த சிலர் விஷம பிரசாரம் செய்து வருகின்றனர். ஸநாதன தர்மத்துக்கு எதிராக சிலர் போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கங்கை தாய், மகா கும்பமேளா விவகாரத்தில் வதந்தி பரப்புவது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடன் விளையாடும் செயலாகும். இந்த நிகழ்ச்சிக்கு எந்த ஒரு கட்சியோ அரசோ ஏற்பாடு செய்யவில்லை. சமூக அமைப்புகள் இந்த விழாவை நடத்துகின்றன. அதற்கு தேவையான வசதி களை மட்டுமே மாநில அரசு செய்து தருகிறது. இந்த நூற் றாண்டில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது எங்கள் அரசுக்கு கிடைத்த பாக்கியமாகும். போலி பிரச்சாரங்களை முறியடித்து, இந்தியர்கள் மட்டுமல்லாது உலக மக்களும் இந்த விழாவை சிறப்பித்து வருகிறார்கள்’ என்றார்.
இந்நிலையில், பொது இடத்தில் வைத்து கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் இருந்து நீரை எடுத்து யோகி ஆதித்யநாத் தும் அமைச்சர்களும் குடிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் சவால் விடுத்துள்ளார்.