சுவாசத் தொற்று: முகக் கவசம், தடுப்பூசி அவசியம்
தமிழ்நாட்டில் ‘ஆர்எஸ்வி’ எனப்படும் சுவாசப் பாதை தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவி வருகிறது. இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தீவிர பாதிப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்குக் குறைவான குழந்தைகள், கட்டுப்பாடற்ற இணை நோயாளிகள் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம். முதியவர்கள், இணை நோயாளிகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிதல் அவசியம் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
நாகை – காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல்
மீண்டும் தொடக்கம்
நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் 22.2.2025 அன்று முதல் தொடங்கப்படுகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாள்கள் போக்குவரத்து நடைபெறும்.
பயணிகள் www.sailsubham.com என்ற இணைய தளத்தில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யலாம். 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச் செல்லலாம். கூடுதலாக உடைமைகளை எடுத்துச் செல்ல கட்டணம் செலுத்த வேண்டும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத மருந்து விற்பனை: உரிமம் ரத்து
மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த 59 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாக விதிகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்ட 17 மருந்தகங்கள், மருந்து விநியோக நிறுவனங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநில மருந்து உரிமம் வழங்குதல் கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.சிறீதர் தெரிவித்துள்ளார்.