பிற இதழிலிருந்து…மாணவர் எழுச்சி!

Viduthalai
3 Min Read

ர.பிரகாசு

திராவிடர் மாணவர் கழக மாகாண மாநாடு நீடாமங்கலம், நாள்:23, 24-02-1946

கருஞ்சட்டைப் படைக்கு ஆட்கள் திரட்டுவதை, பெரியார் தீவிரப்படுத்தியிருந்த வேளையில், நீடாமங்கலத்தில் ‘திராவிடர் கழக மாகாண மாநாடு’, 23, 24.03.1946 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இம்மாநாட்டில், சுமார் இரண்டாயிரம் பேர் மாணவர்கள். அவர்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் கருஞ்சட்டையோடு வந்திருந்தனர்.
ஆற்றங்கரையோரம் அழகுற அமைக்கப் பட்டிருந்த மாநாட்டுப் பந்தலுக்கு, இந்தி எதிர்ப்புப் போரில் தீயில் வெந்து வரலாற்றில் மலர்ந்த தாளமுத்து, நடராசன் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஊர்வலம் மாநாட்டுப் பந்தலை அடைந்தபோது, பெரியாரைக் கண்டு உணர்ச்சிப் பெருக்கில் ஆர்ப்பரித்தது இளைஞர் கூட்டம்.

அப்போது, அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவியாக இருந்த லாரன்ஸ், “இருட்டறையில் உள்ள திராவிட சமுதாயத்தை இருட்டு நிறத்தை விட வேறெந்த நிறத்தைக் கொண்டு குறிப்பது? தலைகுனிந்து தடுமாறி இருந்த திராவிடத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெள்ளி முளைத்தது. ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற பெயரால். அந்த வெள்ளியின் வேலைதான் நடுவே இருக்கும் சிவப்பு. வெள்ளிக்கு மூலகர்த்தா இங்கே வீற்றிருக்கும் ‘வெள்ளித்தாடி’ பெரியார் திராவிட நாட்டை நாம் அடைந்தவுடன் கருப்பு நீங்கி, சிவப்பு முழுமையாய் பரவும். அது பிற்கால சந்ததியினரைப் பொறுத்தது” என்று ஆற்றிய கொடி விளக்கம் லட்சிய முழக்கமாக இருந்தது.

மாநாட்டைத் திறந்துவைத்த காந்தி என்ற மாணவி, “சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆரியப் பிடியில் இருந்த சிறுவர்களில் பலர், இன்று திராவிட இன உணர்ச்சி மிகுந்து தியாகத் தீயில் சீறிப்பாயும் சிங்கங்களாக விளங்குகின்றார்கள். பெரியாரின் பேருழைப்பே அதற்குக் காரணம். இந்நாளில் மாணவர் கிளர்ச்சியில் முன்னிற்பது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பார்ப்பனர்கள் நலனுக்குத்தான் தோன்றியதோ என்று எண்ணி திராவிடர்கள் கலங்கிய நிலையில், இருந்த அப்பல்கலைக்கழகம், இன்று ஆரியத்திற்கு சாவு மணி அடிக்கும் பல தளபதிகளை உற்பத்தி செய்யும் நிலைக்களமாக விளங்குகின்றது. அக்கழகத்தில் படித்து வருகின்ற நான் உண்மையிலேயே உங்களைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி அடைகின்றேன்” என்றார்.

தவமணி இராசன் வரவேற்புரை நிகழ்த்த, மாநாட்டுக்குத் தலைமையேற்ற ஏ.இராமசாமி, “நாடு-இனம்-மொழி இவைகளைக் காக்க சிறை செல்லவும், ஆவி கொடுக்கவும் வாய்க்கும் வாய்ப்பே மக்களுக்கு எல்லா நல்வாய்ப்புகளையும் விட மேலானது”என்று கூறியதும், “பெரியாரை, இனி சிறை செல்ல விட மாட்டோம். நாங்கள் யாவரும் சென்ற பிறகுதான் அவருக்கு வாய்ப்பளிப்போம்” என்று ஆரவாரித்தது மாணவர் கூட்டம். அடுத்துப் பேசிய பெரியார், ‘திராவிட மாணவர் கழகம்’ ஏன் தேவை என்பதை, 2 மணி நேரம் விளக்கினார். அன்று மாலை நிறைவுரையும் அவர்தான்.
இரண்டாவது நாள் மாநாட்டுக்குத் தலைமையேற்ற பேரறிஞர் அண்ணா.

இந்தியாவில் அன்றைக்கு இருந்த மாணவர் இயக்கங்களை விளக்கி, திராவிட மாணவர் இயக்கத்தின் தேவையை எடுத்துரைத்தார். “இந்தி மீண்டும் புகுத்தப்பட்டால், மாணவர்களே போராட்டம் நடத்துவோம், வடநாட்டுப் பிடியில் இருந்து, திராவிட நாட்டைப் பிரிக்க வேண்டும், பாடத்திட்டங்களில் மத நூல்கள் போதிப்பை நிறுத்த வேண்டும். இன விடுதலை பெறத்தக்க வகையிலான பெரிய போராட்டத்தை, பெரியார் முன்னெடுக்க வேண்டும்” என்பன உட்பட 7 தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. மீண்டும் 3 மணிநேரம் சொற்பொழிவாற்றினார் பெரியார்! பேசிப்பேசியே மாணவர் எழுச்சிக்கு உரமூட்டினார்!

‘‘வடநாட்டுப் பிடியில் இருந்து, திராவிட நாட்டைப் பிரிக்க வேண்டும், பாடத்திட்டங்களில் மத நூல்கள் போதிப்பை நிறுத்த வேண்டும். இன விடுதலை பெறத்தக்க வகையிலான பெரிய போராட்டத்தை, பெரியார் முன்னெடுக்க வேண்டும்”


நன்றி: ‘முரசொலி’ (18.2.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *