ராமன் கோயில் தலைமை பூசாரிக்கு ஏற்பட்ட கதி?

Viduthalai
2 Min Read

இறந்தவரின் உடலில் கல்லைக் கட்டி ஆற்றில் தூக்கி எறிந்த பரிதாபம்
இதற்குப் பெயர் ஜல சமாதியாம்!

அயோத்தி, பிப்.16 அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி மகாந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் புதைக்கப்படவில்லை. அதேபோல் அவரது உடல் எரியூட்டப்படவில்லை. மாறாக சரயு ஆற்றில் கல்லை கட்டி ஜலசமாதி செய்தனர். அதன் பின்னணி பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நீண்ட கால சட்டப்போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று திறந்து வைத்தார். அயோத்தி ராமஜென்மபூமி கோவிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸ் செயல்பட்டு வந்தார். இவருக்கு 85 வயது.

இந்நிலையில்தான் வயது முதிர்வு காரணமாக மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் மஹந்த் சத்யேந்திர தாஸ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மஹந்த் சத்யேந்திர தாஸ் உயிரிழந்தார். 1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பின்போது ராமர் கோவிலின் பூசாரியாக மஹந்த் சத்யேந்திர தாஸ் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு அந்த வளாகத்தை அரசு கைப்பற்றியபோது அவர் தலைமை பூசாரியாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலமானார்.

இதையடுத்து அவரது உடல் பாலன்குயினில் உள்ள இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. அங்கு கோவில் நிர்வாகிகள், இந்து அமைப்பினர், பாஜக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சரயு ஆற்றில் ஜல சமாதி செய்யப்பட்டது. துளசிதாஸ் காட் பகுதியில் ஓடும் சரயு ஆற்றின் நடுப்பகுதிக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உடலில் கல்லை கட்டி படகில் இருந்து சரயு ஆற்றுக்குள் தள்ளிவிடப்பட்டது. இப்படியாக அவரது உடல் ஜல சமாதியாக்கப்பட்டதாம்.
இதுபற்றி அயோத்தி கோவிலின் புதிய தலைமை பூசாரி பிரதீப் தாஸ் கூறுகையில், ‘‘ராமானந்தி பிரிவில் மரபு ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த மரபின்படி மஹாந்த் சத்யேந்திர தாஸின் உடல் சரயு ஆற்றில் ஜலசமாதி செய்யப்பட்டுள்ளளது. உடலில் கல்லை கட்டி ஜலசமாதி முறை நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *