ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் புலம்பல்!

2 Min Read

கோவை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத் “இந்தியக் குடும்பங்கள் ஹிந்துமதத்தின் மகிமையைப்புரிந்து கொள்ளவேண்டும், மத மாற்றத்தைத் தடுக்க ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் முனைப்போடு வெளியே வர வேண்டும். அப்போதுதான் நம் ஹிந்துமதம் காப்பாற்றப்படும்” என்று கூறியுள்ளார். 

கோவையில் சிங்காநல்லூர் காமாட்சிபுரி ஆதீனம் உள்ளது. இதிலுள்ள கோயில் வளாகத்தில் மழை வேண்டியும், இயற்கைப் பேரிடர்கள் போன்றவை நிகழாமல் தடுக்கவும், பொது மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டியும் ஹோமம் நடைபெற்றதாம். இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். 

இதில்  பேசிய மோகன் பகவத் கூறியதாவது: “இந்த ஹோமங்கள் ஹிந்து மதத்தில் மட்டுமே உள்ளன. இவ்வகை ஹோமங்கள் ஹிந்துக்களுக்கு  நன்மையை ஏற்படுத்தும்; கம்போடியாவில் உள்ள கோயிலுக்குச் சென்ற போது, எனது தலையை அங்குள்ள கல்லில் மோதி ரத்தம் வரச் செய்து வழிபட்டேன்.  உலகின் அனைத்து இடங்களிலும் ஹிந்துக் கோயில்கள் உள்ளன. இதன் மூலம் நமது மதத்தின் சாராம்சம் கொண்டு சேர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன் கடல் கடந்து சென்று கோயில்களை நிலை நாட்டினார். அதன் மூலம் நம் நாட்டுப் பாரம்பரியமும், வரலாறும் பரவியுள்ளது.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது ஹிந்து தர்மத்தின் சிறப்பு; மதமாற்றம் கூடாது என்பது நம்மிடம் இருந்து தொடங்கப்பட வேண்டும். நாம் நமது குடும்பத்திலும், உறவினர்களிடமும் மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும். குடும்பங்களில் இருந்து இந்தப் பணியைத் தொடங்க வேண்டும். மதமாற்றத்தால் இன்றும் நாம் பெரும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறோம். காரணம், நம்மிடம் ஒற்றுமை இல்லை. ஹிந்துக்களின் வீட்டில் உள்ள அனைத்துப் பெண்களும் மதமாற்றத்தைத் தடுக்க முன்வர வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார ரீதியில் இருந்தாலும் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது” என்றார்.

சர்வ சக்தி வாய்ந்த கடவுள்கள் உள்ள மதம் தான் ஹிந்து மதம் என்று ஒரு பக்கத்தில் பிதற்றிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இப்படி எல்லாம் புலம்புவதை  நினைத்தால் கைகொட்டி நகைக்கத் தான் தோன்றுகிறது.

ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறாரே ஆர்.எஸ்.எஸ். தலைவர். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே ஹிந்து மதத்தில்  ஜாதிகளே பிறப்பின் அடிப்படையில் கற்பிக்கப்பட்டுள்ளன.

ஹிந்துக் கடவுள்களே, வேதங்களே அதைச் செய்துள்ளன என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு  – இன்னொரு பக்கத்தில் ஹிந்து மதத்தின் நிலையைக் கண்டு, கம்போடியாவில் ரத்தம் வெளிவரும் அளவுக்கு ஒரு கல்லில் முட்டிக் கொண்டதாகப் புலம்பித் தள்ளியுள்ளார்.

ஹிந்து மதத்தைப் பலப்படுத்துவதற்காகவே உரு வாக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸின் தலைவருக்கே இந்த நிலையென்றால் மற்றதைப்பற்றி நினைப் பதற்கு என்ன இருக்கிறது?

மத மாற்றத்தைத் தடுக்க பெண்கள் முன் வர வேண்டுமாம். பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்னும் கீதையையும் – பெண்கள் பெரும்பாலும் விபச்சார தோஷம் உடையவர்கள் என்கின்ற மனுதர்மத்தையும் காப்பாற்றிக் கொண்டு மதமாற்றத்தைத் தடை செய்ய ஹிந்துப் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும் என்பது விஷம் கலந்த வேடிக்கையே!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *