பீகார் மாநிலம் விடுதலைக்குப் பிறகான முதல் முதலான ஜாதிவாரி ஆய்வறிக்கையை நடத்தி அதன் புள்ளி விவரங்களை வெளியிட்டது. இதில் மிகவும் முக்கியமான தகவல் என்னவென்றால் ஒட்டுமொத்த பீகார் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தினர் என்ற உண்மை அதிகாரப் பூர்வமாக தெரியவந்தது
விடுதலைக்குப் பிறகு அரசமைப்புக் கொடுத்த உரிமையான இட ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் என வகைப்படுத்தப் பட்டுள்ளனர். சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ள உயர் ஜாதியினர் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் அமர்ந்துகொண்டு நாட்டின் அனைத்து வளங்களையும் கட்டுப்படுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அரசியலை மாற்றி அமைக்கும் திறன்
இந்தியாவின் மிகவும் பின்தங்கிய, ஆனால் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றான பீகாரின் ஜாதிவாரி ஆய்வறிக்கை, நாட்டின் அரசியலை மாற்றியமைக்கும் திறன் கொண்டது. இதன் தாக்கத்தினால்தான் ஒன்றிய அரசு ஜாதிவாரிக் கணகெடுப்பை நடத்தவேண்டும் என்று நாட்டில் உரிமை முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது நாட்டின் இட ஒதுக்கீட்டுத் திட்டங்களை மறுசீரமைப்பதற்கான வாய்ப்புகளைத் தருகிறது. மக்கள்தொகையில் உள்ள அடித்தட்டு சமூகத்தின் பங்கிற்கு ஏற்ப ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கு விகிதாச்சார நன்மைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
2024 பொதுத் தேர்தலில் ஜாதிவாரிக் கண்கெடுப்பு முழக்கத்தை ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அரசியல் இயக்கங்களால் ஒற்றுமையாக முன்னெடுக்க முடியவில்லை. மேலும் தேர்தல் காலத்தில் எப்போதும் போல் முக்கியப் பிரச்சினைகளை திசைதிருப்ப வன்முறை – வக்கிர வார்த்தைகளைப் பேசி அதனை எதிர்கொள்ள எதிர்கட்சிகளை சிக்கவைத்ததன் மூலம் எதிர்கட்சிகளின் உண்மையான தேர்தல் முழக்கங்கள் பின்வாங்கி விட்டன.
எடுத்துக்காட்டாக, இஸ்லாமியர்களை வந்தேறிகள் என்றும், எதிர்க்கட்சிகளால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வீட்டில் உள்ள மாடுகளில் இரண்டில் ஒன்றை முஸ்லீம்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்றும், இரண்டு வீடு இருந்தால் அதில் ஒன்றை முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள், வீட்டின் தானியப் பாத்திரங்களில் கைவிட்டு அதில் இருக்கும் தங்கத்தை எடுத்து கொடுத்து விடுவார்கள் என்றும் பிரதமரே வாய்க்கு வந்தபடி குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்த மக்களவை தேர்தல் பரப்புரையில் பேசினார்.
இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் மோடியின் இந்தப் பேச்சிற்கு விளக்கம் கொடுப்பதிலேயே அவர்களின் பாதி சக்தி வீணாகிவிட முக்கியமான பிரச்சினைகள் பின்னுக்குப் போய்விட்டன.
பீகார் ஜாதி ஆய்வறிக்கை கூறுவது என்ன?
இந்தியாவின் பெரும்பான்மையான இந்து சமூகம் பாரம்பரியமாக பல்வேறு ஜாதிகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஜாதிகள் மற்றும் உப ஜாதிகளின் மக்கள்தொகை குறித்த துல்லியமான புள்ளிவிவரக் கணக்குகள் இன்றுவரை இல்லை. கடைசியாக இந்தியா பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கீழ் இருந்தபோது 1931இல் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சமீபத்திய மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் இல்லாததால் இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை, பழைய புள்ளி விவரங்கள் படி நடக்கும் எந்த ஒரு மேம்பாட்டுப் பணிகளும் பெரும்பாலும் மக்களைச் சென்றடையாத நிலையில் உள்ளது.
எடுத்துக்காட்டாக, பீகார் ஜாதி ஆய்வறிக்கை புள்ளிவிவரங்கள் காட்டுவது என்னவென்றால், அங்கு உயர்ஜாதியினர் வெறும் 15.5 சதவீதம் மட்டுமே, அதே
சமயம் ஒடுக்கப்பட்ட ஜாதிகள் மாநில மக்கள் தொகையில் 84 சதவீதம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலைத் தந்தது.. இந்த புள்ளி விவரங்கள் என்ன கூறுகிறது என்றால் இன்று நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கான இட ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது – அரசு வேலைகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் 50 சதவீதம் மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளை பொதுவெளியில் கொண்டுவந்த பீகாரின் நடவடிக்கை, நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகங்களிடமிருந்து இட ஒதுக்கீட்டு கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பரப்புரைகளை மேற்கொள்ள சமூகநீதியின்பால் அக்கறைகொண்ட திருமாவளவன் போன்ற தலைவர்களைத் தூண்டி உள்ளது.
தீண்டாமைக் கொடுமை அதிகரித்து வருகின்றது இந்தியாவின் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் பாதிக்கப்பட்டவர்களாகவும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதால், இந்தியா சுதந்திரம் அடைந்த உடனேயே பல்வேறு வகையில் அம்மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு இருந்தபோதிலும் அவை எழுத்தின் அளவிலேயே உள்ளது. அவர்கள் கொடூரமான தீண்டாமைக்கு ஆளாகின்றனர். பீகார் ஜாதிவாரி ஆய்வறிக்கை தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட சமூக மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை உறுதிசெய்கிறது. அதே போல் தீண்டாமைக் கொடுமைகள் மேலும் அதிகரித்த வண்ணமே உள்ளது, இதை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, தீண்டாமைக் கொடுமை மேலும் அதிகரித்துள்ளது குறித்து அக்கறையுள்ள ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக போராடும் தலைவர்களின் போராடத்திற்கு திட்டமிடலையும் புதிய கோணத்தையும் வழங்கி உள்ளது
இந்தியாவின் சமூக கட்டமைப்பில் ஒடுக்கப்பட்ட ஜாதிகள்தான் மிக ஆதிக்கமான குழுவாக உள்ளனர், இருந்தபோதிலும் அவர்கள் தான் அதிகமான தீண்டமைக் கொடுமை மற்றும் புறக்கணிப்பிற்கு இலக்காகி வருகின்றனர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு படியாக இது அமைகிறது. “ஆதிக்க ஜாதிகளின் ஒரு சிறிய பகுதியினர் அரசியல் முதல் ஊடகங்கள் வரை, வணிகங்கள் வரை அனைத்தையும் எவ்வாறு கட்டுப்படுத்தி வருகின்றனர் என்பதை இந்த தரவுகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன,” என்று டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸில் (TISS) பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் அரசியலை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி அறிஞர் யஷ்வந்த் ஜகடே கூறினார்.
இந்தியா உலகின் அய்ந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது, ஆனால் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி மிகப்பெரியது. ஆக்ஸ்ஃபாம் தனது ஆய்வில் இந்தியா தனது 2023 அறிக்கையில், நாட்டின் செல்வத்தில் 60 சதவீதம் மிகவும் செல்வச்செழிப்பு மிக்க 5 விழுக்காடு பெரும்பணக்காரர்களால் கட்டுக்குள் வைத்திருக்கப்படுகிறது என்று கூறியுள்ளது. இப்போது புரிந்திருக்கும் ஏன் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்று…..
ஒன்றிய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பில்
ஏன் அமைதி காக்கிறது?
2014ஆம் ஆண்டு விபத்துபோல் ஒன்றியத்தில் மோடி அரசு அமைந்துவிட்டது. அதன் பிறகான தேர்தல்கள் பல அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளேயே நடந்து வருகிறது. அனைத்து துறையையும் ஹிந்துத்துவ சக்திகளை நுழைத்துவிட்டனர். இதனால் உரிமை முழக்கம் என்றுமில்லாத அளவு கட்டுப்பட்டு நிற்கிறது. சமூக நீதியின்பால் அக்கறை கொண்ட அரசியல் மற்றும் பொது இயக்க அமைப்புகள் பாஜகவின் ஹிந்துத்துவ அரசியலை எதிர்கொள்ள முயற்சிக்கின்றன, அதிகரித்து வரும் சமத்துவமின்மை மற்றும் அனைத்து வளங்கள் மீதான பெருநிறுவன கட்டுப்பாட்டை முன்னிலைப்படுத்துகின்றன.
காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்கள்தொகையில் அவர்களின் பங்கிற்கு ஏற்ப ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனியார் அமைப்புகள் ஆய்வு செய்த அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி இந்தியர்களில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 71 விழுக்காடு இருப்பதாக கண்டறியப்பட்டது. மோடியின் பின்னால் நின்றுகொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஜாதிய வரம்புகளை நீர்த்துப் போக அடிமட்டம் முதல் வேலை செய்து வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் தோள் மீது கைப்போட்டுகொண்டு அவர்களை ஜாதிப்பெருமை கொள்ளவைக்கும் வேலைகளை திறம்படச் செய்துவருகிறது.
இதற்கு சில எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்:
• தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சமூக மக்களை நீங்கள் தேவலோகத்தில் இந்திரனுக்கு என்று ஏர்பூட்டி உழவு செய்தீர்கள். தேவர்களின் தலைவரே உங்களின் ஜாதிக்கு கடமைப்பட்டுள்ளார் என்று கதைவிட்டு வருகின்றனர். இதற்காக மதுரையில் மாநாடு ஒன்றையே நடத்தினர்.
• அதே போல் மாநிலம் எங்கும் பரவலாக இருக்கும் மற்றொரு பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட ஜாதி மக்களை நீங்கள் சிவனின் வாரிசுகள் என்று கதைவிட்டு அதன் பெயரிலேயே சில துணை அமைப்புகளை உருவாக்கி அம்மக்களை மூளைச்சலவை செய்ய முயல்கின்றனர்.
• தங்களது உழைப்பால் முன்னேறி வந்த மற்றொரு சமூகத்தை வளைக்க அந்தச் சமூகத் தலைவர்களுக்கு பதவிகளைக் கொடுத்து வளைக்கப் பார்த்தது.
• வட மாவட்டங்களில் பரவலாக இருக்கும் ஒரு சமூகத்தை வளைத்துப் போட முயற்சித்தது. ஆனால் இவர்களின் புராணப் புரட்டுகளை வைத்து அந்தச் சமூக மக்களை வளைத்துப் போட ஏற்கெனவே இங்கே ஒருவர் இருந்ததால் அவரோடு சமரசம் செய்தால் மட்டுமே அந்தச் சமூக மக்களை நெருங்க முடியும் என்ற நிலையில் அந்த மக்களை நெருங்கும் திட்டத்தையும் கைவிட்டு விட்டது.
• தென் மாவட்டங்களில் பரவலாக இருக்கும் மற்றொரு இடை நிலை ஜாதியை கையில் போட திட்டமிட்டு அதிலும் தோல்வியைச் சந்தித்து வெறுங்கையில் முழம்போட்டு நிற்கிறது.
ஹிந்துத்துவ சதித்திட்டங்கள் ஏன் இந்த மண்ணில் நடைமுறைப் படுத்தப்பட முடியவில்லை என்றால், இங்கே தந்தை பெரியார் என்னும் பெருநெருப்புக் கோளத்தைத் தாண்டி தீயவர்களால் தடமெடுத்து வைக்க முடியவில்லை. ஆகையால் தான் வேறு வழியில்லாமல் அந்த தந்தை பெரியாரின் பிம்பத்தை உடைக்க கூலிக்கு மாரடிக்கும் சில சில்லரைகளைப் பிடித்துள்ளனர். தந்தை பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டிலேயே (சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில்) கோமாளியை இறக்கி சோதனை நடத்தியது. ஆனால் கோமாளியைப் பார்த்து மக்கள் கைகொட்டி வாய்விட்டு சிரித்தார்களே தவிர அந்தக் கோமாளியின் கோணாங்கித்தனமாக பேச்சுக்களை எள்ளவிற்கும் மதிக்கவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டியது. குறிப்பாக தமிழ்நாட்டில் அவர்களின் ஹிந்துத்துவ திட்டங்கள் தவிடுபொடியாகிவிட்டன. ஆனால் அவர்கள் வடக்கே தங்களின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல மோசமான ஒரு பாதையை அமைத்துள்ளனர்.
இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களில் சுமார் 15 சதவீதம் பேரை கொண்ட முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை பாஜக முன்னெடுத்து வருகிறது. இதில் கனிசமான வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்த பேராபத்தை எதிர்கொள்ள தமிழ்நாட்டின் தந்தை பெரியாரது ‘திராவிட மாடலை’ வட இந்தியாவிலும் கொண்டு செல்ல முயற்சி நடக்கிறது.
இந்த முன்னெடுப்பு பாஜகவிற்கும் ஹிந்துத்துவ அரசியலுக்கும் வேட்டுவைக்கும் என்பது பாஜகவிற்கு உள்ளூர அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் சமூகநீதி மற்றும் பெரியாரிய, அம்பேத்காரிய கொள்கைகளை போர்க்கருவியாக கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது அதே போர்க்கருவிகளை மெருகேற்றி வட இந்தியாவில் கால் பதித்து வருகிறது., கருநாடகா, மகாராட்டிரா போன்ற மாநில தேர்தல்களில் தனது உறுப்பினரை களமிறக்கியது. தேர்தல் களத்தில் வெற்றி தோல்வி என்பதை விட அம்பேத்கரிய பெரியாரிய கொள்கை கொண்ட ஓர் அமைப்பு வடக்கில் களமிறங்கி உள்ளது. அங்குள்ள செயல்பாட்டார்களுக்கு *பற்றிப் படர வாய்ப்பில்லாமல் இருக்கும் கோவைக் கொடிக்கு ஒரு ஆலமரம்* கிடைத்தது போல் இருந்தது.
கடந்த 4 ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்பான செய்திகளை வட இந்தியா உற்றுநோக்கி வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு ஹிந்தி, மராட்டி நாளிதழ்களில் அடிக்கடி இடம் பெறும் தமிழ்நாட்டுத் தலைவருள் ஒருவர் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித்தலைவர்
தொல்.திருமாவளவனும் ஆவார்.
அதே போல் திராவிடர் கழகமும் தந்தை பெரியாரின் கொள்கைகளை பல்வேறு தளங்களின் மூலமும், வடக்கே உள்ள சமூக நீதியின் ஆதரவாளர்களாக இருக்கும் தலைவர்களின் மூலமும் கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பல்வேறு ஒடுக்கப்பட்ட ஜாதிகளிடையே விழிப்புணர்வை உருவாக்க முடியும். அப்படி உருவாக்கும் பணிகளை விடுதலைச் சிறுத்தைகளும் திராவிடர் கழகமும் முயன்று வருகின்றன.
இது பாஜக மற்றும் ஹிந்துத்துவ கொள்கைகளுக்கு வேரில் அமிலம் ஊற்றும் நடவடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நன்கு தெரியும்.
விரிசலடையும் மோடியின் ஆதரவு தளம்
வடக்கே ஜாதிவாரிக்கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஏற்பட்டால் ஹிந்துத்துவ அரசியல் செல்லக்காசாகிவிடும். இதனை பீகார் தேர்தல் மற்றும் கருநாடகா தேர்தல் இரண்டுமே எடுத்துக்காட்டி விட்டன. பாஜக உயர்ஜாதியினருக்கான அரசியல் கட்சி என்ற பிம்பத்தை உடைக்க தானே ஒரு “பிற்படுத்தப்பட்ட ஜாதி” சமூகத்தைச் சேர்ந்தவன் என்று மோடி பொதுக் கூட்டங்களில் தனது ஜாதி அடையாளத்தை மீண்டும் வலியுறுத்தி வருகிறார். இருப்பினும், இந்தியாவின் ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கு அதிக உரிமைகளை வழங்க வலியுறுத்தும் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் மோடியின் ஆதரவு தளத்தில் விரிசலை ஏற்படுத்த்திக் கொண்டு வருகிறது.
“2022 உத்தரப்பிரதேச தேர்தல்களில், மோடியின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) வாக்குகள் குறைந்தன. 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தப் பின்னடைவு அவர்களை சிறுபான்மை அரசாகவே மாற்றிவிட்டது 1990களின் ஆரம்பத்தில், ராமன் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தில் கோயில் கட்டுவதற்கான மத ரீதியான பிரச்சாரத்தின் மூலம் ஆட்சிக்கு வர பாஜக மேற்கொண்ட முயற்சிகள், ஒ.பி.சி.க்களுக்கு அதிக வாய்ப்புகள் மற்றும் இட ஒதுக்கீட்டை கோரிய மண்டல் இயக்கத்தால் முறியடிக்கப்பட்டது. மண்டல் இயக்கம் குறைந்தது 30 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சி அதிகாரத்தை தடுத்தது. எதிர்க்கட்சிகள் அதே போன்ற ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கின்றன. இதன் விளைவாக, பாஜகவின் சில கூட்டணிக் கட்சிகள் உட்பட பெரும்பாலான பிற கட்சிகள் தேசிய ஜாதி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தி வரும் நிலையில், பாஜக இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டி வருகிறது.
அதனால் தான் மோடி “ஜாதி வாரிக் கணக்கெடுப்பை கோருவது நாட்டை பிரிப்பது” என்ற “பாவத்தை” செய்ய எதிர்கட்சிகள் துணிவதாக மோடி புலம்புகிறார்.
ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பிரச்சினை
இந்திய அரசியலில் ஜாதியை மய்ய அம்சமாக மாற்றுமா?
முக்கிய எதிர்க்கட்சிகள் தேசிய அளவிலான ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தங்களது முக்கிய பரப்புரை கொள்கையாக மாற்ற நினைத்தாலும் அவர்களின் மென்மையான ஹிந்துத்துவ மனப்போக்கு அதற்கு முழுமையான ஈடுபாட்டைத் தரவிடுவதில்லை. அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையில் வேகத்தை உருவாக்க வேண்டும், இத்தகைய ஜாதி தரவுகள் எவ்வாறு அவர்களுக்கு பயனளிக்கும் என்பது குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஜாதி குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையிலான பெரும் பரப்புரை பொதுக்கூட்டங்கள் தற்போது வட இந்தியாவில் தேவைப்படுகிறது இதற்கு அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் தேவைப் படுகிறார்கள்.
ஏன் தேவைப்படுகிறார்கள்? இதற்கான விடை இந்த நிதி நிலை அறிக்கையிலேயே உள்ளது.
இந்த நிதி நிலை அறிக்கையைத் தயாரித்தவர்களில் வெறும் மூன்று பேர் மட்டுமே மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர். அதிலும் அவர்கள் கிட்டத்தட்ட ஒரு உதவியாளர்கள் போல் தான் நடத்தினார்கள் என்று நிதி அமைச்சரக வட்டாரத்தில் உள்ள சமுகநீதியின் பால் அக்கறைகொண்ட தலைவர்கள் கூறினார்கள்.
அதே போல் இந்த நிதி நிலை அறிக்கை ஆண்டிற்கு 12 லட்சம் வருவாய் பெறும் மேல்தட்டு வர்க்கத்திற்கானது என்பது குன்றிலிட்ட விளக்காய் தெரிகிறது அதாவது இவர்களுக்கு இந்தியாவில் மண்ணின் மைந்தர்களாக உள்ள 80 விழுக்காடு மக்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. வருணாசிரம படிநிலையில் உள்ளது போன்று மனுதர்மத்தில் கூறியது போன்று சூத்திரர்களுக்கு எந்த உரிமையும் வழங்கக்கூடாது என்ற விதிமுறையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தெளிவாகவே கூறியுள்ளார்.
ஆகவேதான் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வடக்கே தேவைப்படுகிறார்கள்.