புதுடில்லி, பிப்.14 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (13.2.2025) மக்களவையில் தாக்கல் செய்தார்.
புதிய வருமான வரி மசோதா
மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது, எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பத்துக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதற்கு அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஒத்தி வைப்பு
இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள் எழுப்பினர். இதையடுத்து, இந்த மசோதாவை மக்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நேற்றுடன் முடிவடைந்தது. 2-ஆம் கட்ட கூட்டத் தொடர் மார்ச் 10-ஆம் தேதி தொடங்க உள்ளது. அதுவரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், புதிய வருமான வரி சட்ட மசோதாவை மக்களவை தேர்வுக் குழு முழுமையாக ஆய்வு செய்யும். தேவைப்படும் பட்சத்தில் அதில் உரிய மாற்றங்களை செய்து, இதுதொடர்பான அறிக்கையை மக்களவையில் மார்ச் 10-ஆம் தேதி தாக்கல் செய்யும்.