சென்னையில் 250 பெண் ஓட்டுநர்களுக்கு பயிற்சி
‘பிங்க்’ ஆட்டோ திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் சென்னையில் 250 பெண் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக அண்ணா நகர் வட்டார போக்குவரத்துக் கழக பயிற்சி வளாகத்தில் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆட்டோக்களை பாதுகாப்பாக இயக்குவது, சுய தற்காப்பு, டிஜிட்டல் முறையில் பணம் பெறுவது, தனியார் ஆட்டோ செயலிகளை பயன்படுத்தும் முறை, ஆட்டோக்களில் இணைக்கப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்தி அவசர காலங்களில் காவல் துறையை தொடர்பு கொள்வது குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த இரண்டாம் கட்ட பேச்சு வரும் பிப்.13, 14ஆம் தேதிகளில் சென்னை குரோம்பேட்டையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சங்கம் சார்பிலும் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மெட்ரோ ரயில்களிலும் வரைபட திரைகள்
அனைத்து மெட்ரோ ரயில்களிலும் எல்இடி வழித்தட வரைபட திரைகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் பொருத்த மெட்ரோ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஒரு பெட்டியில் 4 திரைகள் என ஒரு ரயிலில் மொத்தம் 16 திரைகள் சோதனை முறையில் பொருத்தப்பட்டு, கடந்த ஒரு வாரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் எவ்வித குளறுபடிகளும் ஏற்படாத நிலையில், ஆகஸ்டு மாதத்துக்குள் முதல் கட்ட திட்டத்திலுள்ள 52 ரயில்களிலும், வழித்திட வரைபட எல்இடி திரை பொருத்தப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெறுப்புப் பேச்சு
தொடர்ந்து அதிகரிப்பு
தேர்தல் நேரத்தில் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது. ‘இந்தியா ஹேட் லாப்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2023இல் 233 சம்பவங்கள் பதிவான நிலையில், 2024இல் அது 1,165ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பிரதமர் மோடி 63 முறை வெறுப்புணர்வு கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும், பாஜக தலைவர்கள் 450 முறை வெறுப்பு பேச்சுக்கள் பேசியதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நாட்டில்
எவ்வளவு பில்லினியர்கள்?
எந்த நாட்டில் எத்தனை பேர் ரூ.8,700 கோடிக்கு மேல் ($1 பில்லியன்) சொத்து வைத்திருக்கின்றனர்?
அமெரிக்கா – 813 பேர், சீனா -406 பேர், இந்தியா – 200 பேர், ஜெர்மனி – 132 பேர், ரஷ்யா – 120 பேர், இத்தாலி – 73 பேர், பிரேசில் – 69 பேர்
ப்ளூட்டோ ‘கோள்’களில் இடம் பெறவில்லை
1980 முதல் 2006 வரை 9ஆவது கோளாகக் கருதப்பட்ட ப்ளூட்டோ, பின்னர் நீக்கப்பட்டது. அதற்கு காரணம், கோளுக்கான 3 விதிகளில் ஒன்றை அது பூர்த்தி செய்யவில்லை. அதாவது, சூரியனை சுற்ற வேண்டும் என்ற முதல் விதி மற்றும் உருண்டையாக இருக்க வேண்டும் என்ற இரு விதிகளில் ப்ளூட்டோ வென்றது. ஆனால், தன்னுடைய பாதையில் மற்ற பொருட்களுக்கு இடமளிக்கக் கூடாது என்ற 3ஆவது விதியில் அது தேர்ச்சி பெறாது வெளியேறியது.
உலகின் சிறந்த
100 மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டுக்குச் சிறப்பிடம்
உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் 60ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு அரசு சென்னை மருத்துவக் கல்லூரி. தமிழ்நாட்டில் இருந்து பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் சிஎம்சி- 46, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி 55ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. மொத்தமாக 48 இடங்களை அமெரிக்க மருத்துவக் கல்லூரிகளே பிடித்துள்ளன.
மனிதர்களோடு விண்வெளிக்கு பறக்கும் ஈக்கள்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில், மனிதர்களுடன் சேர்த்து ஈக்களையும் அனுப்ப டாடா நிறுவன விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். விண்வெளிப் பயணம் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், விண்வெளிக்கு பறக்கும் போது அவை என்ன மாதிரியான உயிரியல் மாற்றங்கள் மற்றும் அழுத்தங்களைச் சந்திக்கின்றன என்பதையும் மதிப்பிட, ஈக்களை அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.