இலங்கைக் கடற்படையினர் தொடர் தாக்குதல்
மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தலைத் தொடர்ந்து மக்களவையில் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வேண்டுகோள்!
புதுடில்லி, பிப்.12 ‘‘இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்று மக்களவையில் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்திப் பேசினார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தனர் என்று கூறி இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
அடுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் படகு உள்ளிட்ட இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உடைமைகளையும் பறிமுதல் செய்கின்றனர். இது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்குத் தொடர்ந்து கடிதம்!
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையி னரால் கைது செய்யப்படும் போதும், படகுகள் பறிமுதல் செய்யப்படும் போதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் பலமுறை கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் அலட்சியத்தால், தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி விட்டனர் என்று கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
மக்களவையில் – தி.மு.க. ஒத்தி வைப்பு தீர்மானம்!
இந்நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் அவையை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் நேற்று (11.2.2025) ஒத்திவைப்பு தீர்மா னத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
டி.ஆர்.பாலு கோரிக்கை!
இந்நிலையில், மக்களவையில் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை குறித்து மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசியதாவது:–
இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 520 கைது நிகழ்வுகளும், இந்த ஆண்டு கடந்த 40 நாள்க ளில் 77 கைதுநிகழ்வுகளும் நடந்துள்ளன. தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இலங்கைக் கடற்படையினர் அத்துமீறல்!
இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி வருகிறார்கள். நடுக் கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறார்கள். ஜனவரி 27 ஆம் தேதி 2 மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது
பிப்ரவரி 8ஆம் தேதி 14 மீனவர்கள் மீது துப்பாக்கிச் டு நடத்தியுள்ளனர். 97 மீனவர்கள் தற்போதும் இலங்கைச் சிறையில் உள்ளனர். 216 படகுகள் இலங்கை வசம் உள்ளது. அவற்றை விடுவிக்க வேண்டும் என்று வெளி யுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசினார்.