தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்
உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, பிப்.11 உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அரசால் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் கிரிமினல் குற்ற வழக்கில் அரசியல்வாதிகள் எம்பி, எம்.எல்.ஏக்கள் தண்டிக்கப்படும்போது, தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராகக்கூட பதவி வகிக்க முடியும். எனவே அப்படிபட்டவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “இந்த வழக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அரசமைப்பை பொறுத்தது. எனவே இதற்கு ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி நீதிமன்றத்திற்கு உதவிட வேண்டும். அதேபோன்று மூன்று வாரங்களுக்குள் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு ஆகியோர் இந்த விவகாரத்தில் விரிவான விவரங்கள் கொண்ட பிரமாணk் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான கருத்துகளை தெரிவிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட காலக்கெடுவில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யும்பட்சத்தில், அடுத்தக்கட்டமாக வாதங்களை மேற்கொள்ளலாம்” என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.