‘‘கிராம – நகர பேதத்தை ஒழிக்கவேண்டும்’’ என்று சொன்னவர் தந்தை பெரியார்!
தந்தை பெரியாரின் இந்தக் கருத்து குடியரசுத் தலைவர்
அப்துல் கலாம் அவர்களை மிகவும் கவர்ந்தது!
சென்னை, பிப்.9 ‘‘கிராம – நகர பேதத்தை ஒழிக்க வேண்டும்’’ என்று சொன்ன தந்தை பெரியாரின் இந்தக் கருத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை மிகவும் கவர்ந்தது! பெண் கல்வி என்பதற்கே முன்னுரிமை கொடுத்து கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியருடன், அன்புடன் ஆனந்தியின் நேர்காணலின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
டாக்டர் சோம இளங்கோவன்: அய்யா உங்கள் மாமனார் மறைந்தபொழுது, அய்யாவிடம் நீங்கள் என்ன பேசினீர்கள்?
மாமனாருக்குக் கொள்ளி வைக்க மறுத்த மருமகன்!
தமிழர் தலைவர்: எங்கள் குடும்பத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம். என்னுடைய மாமனார் – மாமியார் திருமணமே செல்லாது என்பது அந்த வழக்கு. என்னுடைய மாமனார் இறந்தபொழுது, அவருடைய இரண்டு மகன்களும் வெளிநாட்டில் இருந்தார்கள். அதனால், நீங்கள்தான் கொள்ளி வைக்கவேண்டும் என்று என்னிடம் சொல்லாமல், அய்யாவிடம் சொன்னார்கள்.
‘‘ஏம்பா, இதுபோன்று சொல்கிறார்களே, பின்னாளில் வழக்கு ஆகும் என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே சொத்துப் பிரச்சினைகள் இருக்கிறது. நீங்களே அதனை செய்துவிட்டுப் போகலாமே’’ என்றார்.
‘‘கொள்ளி வைக்கின்ற கொள்கையை நாம் இது வரையில் எதிர்த்துப் பேசியிருக்கின்றோம். அதை நான் செய்யமாட்டேன். அந்தக் கொள்கை சரி என்று நீங்கள் சொல்லுங்கள். நான் கொள்ளி வைக்கிறேன்’’ என்றேன்.
‘‘வேண்டாம், வேண்டாம், உங்களை நான் வற்புறுத்தவில்லை’’ என்றார் அய்யா.
அது ஒன்றும் பெரிய பிரச்சினையல்ல. அது சரியாக என்னுடைய நினைவில் இல்லை.
அன்புடன் ஆனந்தி: அருமை, அருமை அய்யா. நீங்கள் அழகாகச் சொன்னீர்கள். ஆசானிடமே, நான் ஒரு வழக்குரைஞர், நான் சொல்கிறேன், வீட்டில் ஆதாரம் இருக்கிறது, அதை எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
ஏனென்றால், அந்த உரிமை கொடுக் கப்பட்டது என்று சொன்னீர்கள்.
ஓர் அரிய பொக்கிஷமாக ஒரு விஷயத்தைப் பொறுப்பை நம் கைகளில் கொடுக்கும்பொழுது, நமக்கு அந்த பயம்,பதற்றம், சரியாகக் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டுமே என்கிற எண்ணம் இருக்கும்.
அய்யா அவர்களே உங்களை ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்து, அந்தப் பொறுப்பை உங்கள் கைகளில் கொடுத்ததில் தொடங்கி, ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் இரண்டு பேரும் வாதம் செய்வதை நான் அப்படியே காட்சி செய்து பார்த்தேன்.
தமிழர் தலைவர்: முக்கியமான ஒரு செய்தி என்ன வென்றால், என்னுடைய உறுதி என்பது அதில் முக்கியமல்ல. அய்யா அவர்கள் அதனை எப்படி எடுத்துக்கொண்டார் என்பதுதான் முக்கியம். அவர் சொன்ன கருத்தில் எவ்வளவு உறுதியாக இருப்பார் என்றாலும், நான் சொன்ன கருத்தினை ஏற்று, அதற்கு அனுமதித்தார். தவறை, தவறு என்று சொன்னவுடன், அதற்கு அனுமதித்தார்.
அய்யாவின் சிறப்பு என்னவென்றால், ஒருவர் ஏதாவது தவறு செய்தால், அது எவ்வளவு பெரிய தவறாக இருந்தாலும், மன்னிக்கப்பட முடியாததாக இருந்தாலும், ‘‘அய்யா, அந்தத் தவறை நான்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டால், அடுத்த நிமிடம் அந்தத் தவறைப்பற்றி பேசவே மாட்டார்.
‘‘அந்தத் தவறை நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொண்டார் அல்லவா, அத்தோடு விட்டு விடுங்கள்’’ என்பார்!
பெரியாருடைய பெருந்தன்மை, பெரியாருடைய மனப்பக்குவம், பெரியாருடைய வழிகாட்டல் என்பது மிகவும் முக்கியம். அதனால்தான் அந்த நிகழ்வினை சொன்னேன்.
கரண்டி பிடிக்கும் கையில் கல்வி!
அன்புடன் ஆனந்தி: அதனால்தான் அவர் பெரியார். பெரியார் என்பவர்கள் எல்லாம் பெரியார் அல்ல. அவர்தான் பெரியார் என்பதற்கு அருமையான உதாரணம் சொன்னீர்கள்.
அடுத்ததாக, கல்வி நிறுவனங்கள் தொடங்கு வதில் உங்களுக்கு அதிகப்படியான ஈடுபாடு இருந்தது. அதிலும் குறிப்பாக பெண்கள் கல்விக்கு முனைப்பு காட்டியிருக்கிறீர்கள்.
ஏனென்றால், நீங்கள் அய்யா பெரியார் வழியில் வந்தவர். எல்லோருக்கும் தெரியும் ‘‘கரண்டி பிடித்த கரங்களில் கல்வி ஏட்டைக் கொடுக்கவேண்டும்’’ என்பதற்காகப் போரடிய வர் அவர்!
அவர் வழியில் வந்த நீங்கள் இயல்பாகவே, பெண்கள் கல்விக்காக முனைப்போடு நிறைய செய்திருக்கிறீர்கள். அதைப்பற்றி நீங்கள் சொல்லுங்களேன்?
தமிழர் தலைவர்: எங்களுடைய குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. பள்ளிப் படிப்பை நான் முடித்ததும், கல்லூரி படிப்பைப் படிப்பதற்கு என்னுடைய குடும்பத்தார் உற்சாகப்படுத்தவில்லை. வேலைக்குப் போகலாம் என்றனர். நான் படிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அல்ல; பண வசதி இல்லை, கல்லூரிக்குப் போய் எப்படி படிப்பது? என்கிற எண்ணத்தினால்தான்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இருந்ததி னால்தான், எங்களைப் போன்றவர்கள் படிக்க முடிந்தது. அதற்கு நாங்கள் கடமைப்பட்டவர்கள்.
அய்யா அவர்களும் சொல்லியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்களும், தென்னார்க்காடு மாவட்டம், சுற்று மாவட்டத்தில் உள்ளவர்கள் எல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினால் பயன்பட்ட வர்கள்.
எங்களுடைய வறுமையின் காரணமாக, இறுதித் தேர்வு கட்டணத்தைக்கூட கட்ட முடியாத நிலை; சக மாணவர்கள்தான் தேர்வுக் கட்டணத்தை கடைசி நேரத்தில் செலுத்தினார்கள் ஹானர்ஸ் படிப்பில்.
ஸ்காலர்ஸ் ஷிப் வாங்கித்தான் நான் படித்தேன். என்னுடைய அண்ணன் மிகவும் கஷ்டப்பட்டு மாதம் 10 ரூபாய் அனுப்புவார். அதில் ஒரு ரூபாய்க்கு நான் ‘விடுதலை’யை வாங்குவேன்.
நான் படிக்கும்பொழுது நண்பர்கள் உதவியிருக்கி றார்கள். இயக்கத்துக்காரர்கள் உதவியிருக்கிறார்கள். புத்தகங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
பெண் கல்வியில்
பெரியாருக்கு இருந்த அக்கறை!
ஆகவே, எனக்கு வாய்ப்புகள் வந்தபொழுது, பெரியார் மணியம்மை அறக்கட்டளைகளை நிர்வ கிக்கின்ற வாய்ப்புகள் வந்தபொழுது, அய்யா பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடும்பொழுது, கல்வி யைப் பரப்பவேண்டும்; ஆண்களுக்குக் கல்வி கற்று தருவதைவிட, பெண்களுக்குக் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்கின்ற உறுதி ஏற்பட்டது.
அய்யா சொன்ன தத்துவத்தில் மிகவும் முக்கிய மானது, ஒரு குடும்பத்தில் ஒரே ஒருவர்தான் படிக்க வேண்டும் என்றால், அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணை படிக்கச் சொல்லவேண்டும். ஏனென்றால், தாய்தான் முதல் ஆசிரியர் எல்லோருக்கும். ஒரு பெண் படித்தால், அந்தக் குடும்பமே படிப்பதாகும் என்று.
அந்தக் கருத்தை நான் உள்வாங்கிக் கொண்டதால், வாய்ப்பு இருக்கும்பொழுது மகளிருக்குக் கல்வி கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன். கல்வி, ஒருவருடைய அறிவை வளர்க்கிறது. மகளிருக்குத் தன்னம்பிக்கை அதிகம். மகளிருக்குக் கல்வி கொடுத்தால்தான் இன்னும் சிறப்பாகும்.
நம்முடைய கல்லூரியில் படித்த பெண்கள், உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்பொழுது, விமான நிலையத்தில் என்னைப் பார்த்தவுடன், ‘‘அய்யா, நான் பெரியார் மணியம்மையார் கல்லூரியில்தான் படித்தேன். இப்பொழுது இந்த நாட்டில் பணியாற்றுகிறேன்” என்று மகிழ்ச்சியாக சொல்லும்பொழுது, அதைவிட வேறு மகிழ்ச்சி என்ன வேண்டும்?
பெண்கள் வீக்கர் செக்க்ஷனா?
ஆங்கிலத்தில் ஒரு தவறான மரபு இருக்கிறது. அது என்னவென்றால், ‘‘வீக்கர் செக்ஸ்” (Weaker Sex) என்று. வீக்கர் செக்ஸ் என்பது தவறான, ஒப்புக்கொள்ள முடியாத ஒரு வார்த்தையாகும்.
பொதுக்கூட்டங்களில் நான் வேடிக்கையாக சொல்வது உண்டு. வீக்கர் செக்ஸ் என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தினீர்கள் என்றால், ஒப்புக்கொள்ளலாம். எப்படி என்றால், ‘‘வீக்கஸ்ட் செக்ஸ்’’ ஆண்; அதனால், ‘வீக்கர் செக்ஸ்’ பெண் என்று வேண்டுமானாலும் ஒப்புக்கொள்ளலாம் என்பேன்!
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்துவிட்டால், ‘‘தாயாக’’ இருந்து அந்தக் குடும்பத்தில் உள்ள மற்ற வர்களும் கல்வி கற்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
மகளிர் பாலிடெக்னிக், மகளிர் பொறியில் கல்லூரி முதன்முதலாக தஞ்சாவூரில் தொடங்கினோம் முதலில். குறைவான பெண்கள்தான் சேர்ந்தார்கள். கல்வி அமைச்சர் கேட்டார், அவ்வளவு பணம் உங்களால் செலவழிக்க முடியுமா? என்றார்.
நான் உடனே அவருக்குப் பதில் சொன்னேன், பெரியார் நூற்றாண்டில் தொடங்குகிறோம். பணமுடை ஏற்பட்டால் அரசிடம் ஒப்படைத்துவிடுவோம்; அதனை நீங்கள் மூட முடியுமா?
மூட முடியாது அல்லவா! நாங்கள் தொடங்கிய பிறகு, அரசாங்கம் அதனை மூடிவிட்டால், மக்களே முன்வருவார்கள், அதனைத் திறப்பதற்கு.
பெரியார் பெயரில், பெண்கள் பாலிடெக்னிக் நடைபெறுகிறது. தனியார் துறையில் முதல் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அதுதான்.
ஆகவே, எங்களால் நடத்த முடியவில்லை என்றால், அரசாங்கத்திடம் அதனைக் கொடுக்கப் போகிறோம். அரசாங்கம் அதனை நடத்தப் போகிறது. ஆக மொத்தம், அந்த நிறுவனம் தொடர்ந்து நடக்கும். அதுதான் எங்களுக்கு முக்கியமே தவிர, நாங்கள் நடத்தவேண்டும் என்பது முக்கியமல்ல.
மகளிர் பொறியியல் கல்லூரி – அமெரிக்கா, கனடா நாடுகளில் பெண்கள் அதிகமாக பொறியியல் படிப்பைப் படிப்பதில்லை. அதனால்தான், அந்த நாடுகளிலிருந்து வந்தவர்கள், தமிழ்நாட்டில் பெண்க ளுக்கு மட்டும் பொறியியல் கல்லூரியா என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.
மகளிர் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்; குடும்பம் குடும்ப மாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சி இருக்கிறதே, அதைவிட ஊதி யம் வேறு இல்லை. அந்த மகிழ்ச்சி ஒன்றே போதும்.
பெரியாருடைய கொள்கையும் நிறைவேறியது. அடிமைத்தனமும் விடைபெற்றது.
இதுவே ஆண்களுக்கு இருந்தால், இன்னுங் கொஞ்சம் குறைந்திருக்கும். ஆனால், யாருக்கு வாய்ப்பு இல்லையோ, எந்த இடம் வறட்சியோ, எந்த இடம் கடைமடையோ அங்கே போய் இந்தத் தண்ணீர் சேரவேண்டும். அதுதான் நடந்திருக்கிறது.
அப்துல் கலாமுடன்
உங்கள் உறவு என்ன?
அன்புடன் ஆனந்தி: வறண்ட நிலத்திற்குத்தான் மழை தேவை என்று சொல்வார்கள். அதுபோல, எந்த இனத்திற்கு அதிகப்படியான தேவையோ அதை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.
ஒரு பெண் கல்வி அறிவு பெற்றால், அவளுடைய குடும்பம் மட்டுமல்ல; அவளுடைய தலைமுறை முழுக்க பயன் பெறுவார்கள். ஓர் ஆண் என்றால், அவனோடு முடிந்துவிடும். பெண் என்றால், தலைமுறை தலைமுறையாகத் தொடரும். அதுதான் பெரியார் அய்யாவினுடைய கனவு. அதனை நீங்கள் நனவாக மாற்றியிருக்கிறீர்கள். அதுதான் மிகவும் முக்கியம்.
எப்பொழுதும் உங்கள் பேச்சில் ஒரு உள்குத்து இருக்கிறது. நான், ஆரம்பித்துவிடுவேன்; பிரச்சினை வந்தால் என்ன, அந்தக் கல்லூரியை அரசாங்கமே எடுத்து நடத்தும். விதை போட்டது நான் என்று மிகவும் அழகாகச் சொன்னீர்கள். பொறியியல் கல்லூரி மட்டுமல்லாமல், பெண்களுக்காக பிரத்தியேகமாக நிறைய செய்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு வணக்கமும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்ததாக, அப்துல்கலாம் அவர்க ளைப்பற்றி நிறைய இடங்களில் நீங்கள் சொல்லக் கேட்டிருக்கின்றோம். அவருடனான உங்கள் உறவு – ஏனென்றால், இன்றைய தலைமுறையினர் அனைவரும் ஒரு கனவு நாயகனாகப் போற்றிப் பாராட்டக்கூடிய, கொண்டாடக்கூடிய
அப்துல்கலாம் அவர்களோடு உங்கள் உறவு எப்படி இருந்தது?
தமிழர் தலைவர்: கலாம் அய்யா அவர்கள், அண்ணா பல்கலைக் கழகத்தில் தங்கியிருந்தார். அதற்கு முன்பே நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு எப்படி வந்தது என்றால், நம்முடைய பெண்கள் பொறியியல் கல்லூரியை, அன்றைய இராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் சுற்றிப் பார்க்கும்பொழுது, ராணுவத்தில் பெண்களுக்கு சில இடங்களை நீங்கள் கொடுக்கலாம் என்று நாங்கள் சொன்னபொழுது, பொறியியல் படிப்பு படித்த பெண்களை ராணுவத்திற்கு எடுக்கலாமா? என்று வியப்போடு கேட்டு, உடனே அதற்குரிய நடவடிக்கையை எடுத்தார்.
ஒன்றிய அரசின் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ‘‘இப்படி ஒரு கல்லூரி இருக்கிறதா, Exclusively for Women பெண்களுக்காகவே?’’ என்று ஆச்சரிப்பட்டார்.
ஆமாம்! அந்தக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு நீங்கள் வரவேண்டும் என்று அவரை அழைத்திருந்தோம்.
டி.ஆர்.டி.ஓ. (டிபென்ஸ் ரிசர்ச் அன்ட் டெவ லப்மெண்ட் ஆர்கனைசேசன்) என்ற அமைப்புடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். அப்பொழுது அந்த அமைப்பிற்கு சேர்மெனாக அய்யா அப்துல் கலாம் அவர்கள் இருந்தார்!
நான் கல்லூரியின் தலைவர் என்ற முறையிலும், இராணுவ ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் அய்யா அப்துல்கலாம் அவர்களும் டில்லிக்குச் சென்றோம். ஒன்றிய ராணுவத் துறை அமைச்சரின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டோம்.
அப்பொழுதுதான் எனக்கு அய்யா அப்துல் கலாம் அவர்கள் அறிமுகமானார். அந்த அமைப்பின் சேர்மன் பொறுப்பு முடிந்தவுடன், அண்ணா பல்கலைக் கழகத்தில் தங்கியிருந்தார்.
அங்கே சென்று அவரை சந்திப்போம். அதற்குப் பிறகு அவர் குடியரசுத் தலைவராக ஆனார். அப்பொழுது அவரிடம், ‘‘அய்யா எங்கள் நிறுவனங்களுக்கு வந்து பார்வையிட்டு, அறிவுரை சொல்லுங்கள்” என்றோம்.
உடனே அவர் அதற்கு ஒப்புக்கொண்டு, எங்களு டைய கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டார். பல்கலைக் கழகமாக ஆவதற்கு முன்பே, வல்லத்தைச் சுற்றியுள்ள 69 கிராமங்களைத் தத்தெடுத்திருந்தோம். அதற்கு மூலம் யார் என்றால், தந்தை பெரியார்தான்.
கிராமம் – நகர பேதம்பற்றி
பெரியார் கருத்து!
பெரியார்தான் சொல்வார், ‘‘கிராமம் – நகரம் என்பது இருக்கிறதே, அது வருணாசிரம தர்மம். எப்படி மேல்ஜாதிக்காரன் – கீழ்ஜாதிக்காரன்; தொடக்கூடியவன் – தொடக்கூடாதவன் என்று இருக்கி றதோ, அதுபோல, கிராமத்துக்காரன் உழைப்பை, நகரத்துக்காரன் சுரண்டி வாழ்வதுதான். நெய்யை கிராமத்தில் இருப்பவர் தயார் செய்வார்; நகரத்தில் இருப்பவர் அதை சாப்பிடுவார். இதுபோன்ற முறையை மாற்றவேண்டும். நகரம் – கிராமம் என்ற பேதமில்லாமல் செய்யவேண்டும். நகரங்களுக்கு என்னென்ன வசதிகள் இருக்கின்றனவோ, அதேபோன்று, அதே வசதிகள் கிராமங்களுக்கும் இருக்கவேண்டும்” என்று சொன்னார்.
‘‘கிராம சீர்திருத்தம்’’ எனும் தலைப்பில் 1946 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் பேசினார்.
அதை நடைமுறைப்படுத்த வேண்டும் கல்லூரியில் என்று நாங்கள் சொல்லி, சுற்றுவட்டாரங்களில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தோம்.
கல்வி, சுகாதாரத்திற்காக தன்னார்வத் தொண்டர்களை அழைத்து, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். மாணவர்களுக்கும் ஒரு பொதுத் தொண்டறத்திற்கு வாய்ப்பாக இருக்கும் என்று அந்தப் பணியை மேற்கொள்ளச் செய்தோம்.
அய்யா அப்துல் கலாம் அவர்கள் எங்கள் கல்லூ ரிக்கு வந்தபொழுது, இதுபோன்ற திட்டத்தை நாங்கள் செய்கிறோம் என்று சொன்னவுடன், அவர் ஆச்சரியப்பட்டு, ‘‘நானும் இதே கருத்தை எழுதியி ருக்கிறேன் என்னுடைய அக்னி சிறகுகளில். அதில் ‘புரா’ என்ற ஒரு திட்டம். PURA என்றால் Providing Urban Amenities to Rural Area என்பதாகும்.
நகரத்தில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றதோ, அதனை கிராமங்களுக்கும் கொண்டுவரவேண்டும் என்பதுதான் அதனுடைய முக்கிய நோக்கமாகும்.
இதை எப்படி நீங்கள் செய்திருக்கிறீர்கள்? என்று அய்யா அப்துல்கலாம் கேட்டார்.
பெரியார் அய்யா, ‘‘கிராம சீர்திருத்தம்’’ புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். இது பெரியாருடைய கல்லூரி; மகளிருக்கு அதனைச் சொல்கிறோம். பெரி யாருடைய சித்தாத்தங்களை, கொள்கைகளை நடை முறைப்படுத்தினால், மக்களுக்கு நலம் பயக்கும்.
இது வெறும் ஏட்டுச்சுரைக்காயை கற்றுக் கொடுப்பது மட்டும் அல்ல; மக்களை நேரிடையாகச் சந்திக்கவேண்டும் என்பதற்காகவும், மக்கள் நிறு வனமாக இருப்பதினால், சுற்றியுள்ள 69 கிராம மக்களுக்கும் பயன்படும். மாணவர்களுக்கும் படிக்கின்ற காலத்திலேயே தொண்டு செய்கின்ற மனப்பான்மை வரவேண்டும் என்பதற்காக இதனைச் செய்கிறோம் என்று நாங்கள் சொன்னோம்.
அப்படி சொன்னவுடன், அப்துல் கலாம் அய்யா அவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்!
அவரை யார் சந்தித்தாலும், தஞ்சாவூருக்குச் செல்லுங்கள்; அங்கே என்னென்ன செய்கிறார்கள் என்று போய்ப் பாருங்கள் என்பார்!
எனக்கு முன்பாகவே பெரியார் சொல்லிவிட்டார். அது இப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. கிராம சீர்திருத்தம் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொடுங்கள் என்று சொன்னார். அதுபோலவே நாங்களும் கொடுத்தோம்.
டில்லியிலிருந்து 30 அதிகாரிகளை அனுப்பி வைத்து தஞ்சை வல்லத்தில் உள்ள கல்லூரியைப் பார்க்கச் சொன்னார்!!
என்னுடைய கருத்து நடைமுறைக்கு வருமா? என்று சில அதிகாரிகள் அய்யத்தோடு கேட்டார்கள். நான் அவர்களுக்குச் சொன்னேன், ‘‘ஏற்கெனவே பல ஆண்டுகளாக நடைமுறையில் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் அப்துல் கலாம் அய்யா.
என்னை, அப்துல் கலாம் அய்யா அவர்கள், ‘‘சார்” என்று அன்போடு அழைப்பார்.
‘‘என்னை போய் சார் என்று ஏன் அழைக்கிறீர்கள்?’’ என்று கேட்பேன்.
இல்லை இல்லை, நீங்கள் முக்கியத் தலைவர் அல்லவா என்பார்.
கடைசியாக அவர்,‘‘I am your, international marketing Agent’’ என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்துக் கொள்வார்.
வல்லம் பெரியார் – மணியம்மை கல்லூரிக்கு ஆறுமுறை வந்தவர் அப்துல் கலாம்!
வல்லம் கல்லூரிக்குக் கலாம் அவர்கள் ஆறு முறை வந்திருக்கிறார். மூங்கில் காடுகள் வையுங்கள், அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று சொல்வார்.
இன்றைக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழ கத்தில் பார்த்தீர்கள் என்றால், மூங்கில் தோட்டத்தை ஒரு பெரிய ஆய்வுக்கூடம் போன்று வைத்திருக்கின்றோம். கலாம் பெயரிலேயே அதனை வைத்திருக்கின்றோம்.
ஆகவே, அவருடைய கல்வித் தொண்டும், மனித நேயமும் மிகச் சிறப்பானது.
அவரை நாங்கள், ‘‘பீப்பிள்ஸ் பிரசிடெண்ட்’’ என்று அழைத்தோம். மக்களுடைய அதிபர் என்பதாகும்.
அதேபோன்று, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் என்பது மக்கள் பல்கலைக் கழகமாகும்.
அப்துல் கலாம் அய்யா அவர்கள், தஞ்சை வல்லத்தில் உள்ள மூலிகைச் செடிகள் மிகவும் அற்புதமாக இருக்கின்றன; அவற்றை ராஜ்டிரபதி பவன் என்று சொல்லக்கூடிய குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்புங்கள் என்று சொன்னார். அதேபோன்று அங்கே அந்த மூலிகைச் செடிகளை அனுப்பி வைத்தோம்.
ஒவ்வொரு முறையும் எங்களுடைய ‘மெண்டர்’ (Mentor) என்று சொல்லக்கூடிய ஒரு மதியுரைஞர் – எங்களுக்கு வழிகாட்டி.
ஆகவே, என்றைக்கும் அவரைப் போற்றக் கூடிய அளவில் அவர் நினைவைப் போற்றும் வகையில், அவருடைய பெயரை பல இடங்களுக்கு வைத்திருக்கின்றோம்.
அன்புடன் ஆனந்தி: இப்போது ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று சொல்கிறார்கள் அல்லவா – அதுபோன்று, மாடல் நிறுவனத்தைப் பார்க்கவேண்டும் என்றால், எல்லோரையும் தஞ்சாவூருக்குப் போய் பாருங்கள் என்று அப்துல் கலாம் அய்யா சொல்லக்கூடிய அளவிற்கு உங்கள் நிறுவனத்தை நடத்துகிறீர்கள். ஆறு முறை அங்கே அவர் வந்தார் என்று சொன்னீர்கள். இளைய தலைமுறையினரிடம் கனவு காணுங்கள் என்று சொன்னவுடன், உடனே நினைவுக்கு வருவது அப்துல் கலாம் அய்யா அவர்களைத்தான்.
அவருடைய கொள்கையும், நம்முடைய கொள்கையும் இணையாக இருப்பதால், அருமையான உறவாக அமைந்திருக்கிறது.
பல்கலைக் கழகத்திற்கு யார் வந்தாலும் ஒரு செடியை நடவேண்டும் என்று நீங்கள் ஒரு கொள்கையை வைத்திருந்தீர்கள். இன்றைக்கு அது ஒரு பெரிய சோலையாக இருக்கிறது. அதைப்பற்றிச் சொல்லுங்களேன்?
கரிமில வாயு இல்லாத இடம்!
தமிழர் தலைவர்: எங்களுக்கு ஒரு பெரிய அறைகூவல், சவால் என்னவென்றால், பல்கலைக் கழகம் இருக்கின்ற பகுதியில் உள்ள மண்ணில் ஒரு செடிகூட முளைக்காது என்று பல பேர் சொன்னார்கள் (Abandoned Quarry) முன்பு.
மறைந்த எங்கள் துணைவேந்தர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் மற்றும் பலருடைய கூட்டு முயற்சியால், பெரிய சோலையாக அந்தப் பகுதி ஆயிற்று.
கரிமில வாயு இல்லாத ஒரு மிகப்பெரிய இடம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நிறைய மரங்கள் இருக்கின்றன. பல்கலைக் கழகத்திற்கு யார் வந்தாலும், ஒரு செடியை நடவேண்டும். அப்படி செடி நட்டவரின் பெயரைப் பொறித்து விடுவோம். அப்படி செய்ததினால், இன்றைக்கு ஒரு பெரிய அளவிற்கு ஒரு பாலைவனம், ஒரு சோலைவனம் போன்று ஆகியிருக்கிறது.
இதன்மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய வாய்ப்புகள்; மழைநீர் சேகரிப்புத் திட்டம் – இயற்கையையொட்டி இருக்கக்கூடிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதனை உடனடியாக செய்வோம். மழை நீர் வீணாகப் போகக்கூடாது என்பதற்காக செயற்கையாகவே ஒரு ஏரியை உரு வாக்கியிருக்கின்றோம்.
உங்களுக்கு வாய்ப்பு ஏற்படும்போது, அங்கே நீங்கள் வந்து பாருங்கள். எங்களால் முடிந்த அளவிற்கு செய்திருக்கின்றோம். இதற்கு அரசாங்க உதவி ஏதும் இல்லை.
பெரும்பாலும் மகளிருக்காகத்தான் வைத்திருந்தோம். பிறகு பல்கலைக் கழகமாக அதனை மாற்றும்பொழுது, அதற்கு அனுமதி கொடுக்கின்ற ஒன்றிய அரசு, இருபாலரும் படிக்கும் வகையில் மாற்றவேண்டும் என்று சொன்னது.
அதனால், 60 சதவிகிதம் பெண்களுக்கும்; 40 சதவிகிதம் ஆண்களுக்கும் என்று ஒதுக்கினோம்.
சுற்றுச்சூழலுக்குப் பெரியார் பல்கலைக் கழகம் அமைந்துள்ள பகுதி பெரிய வாய்ப்பாக அமைந்தி ருக்கிறது.
(நாளை தொடரும்)