சென்னை,பிப்.8- ‘‘அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அதிபர் ட்ரம்ப் அவமானப்படுத்தியது, இந்தியாவை அவமானப்படுத்தியது போல் உள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்’’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து டி.ராஜா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போராட்டம்
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு செப்டம்பர் 21 முதல் 25 வரை பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ளது. அம்பேத்கருக்கு எதிராக பாஜக, ஆர்எஸ்எஸ் பேசி வருகின்றன. பாஜக, ஆர்எஸ்எஸ் சேர்ந்து மத ரீதியான மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன.
இந்திய பொருளாதாரம் தனியார்மயம் ஆக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்படுகிறது. பெரு முதலாளிகளிடம் பொதுத் துறை நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி, பணவீக்கம் அதிகரித்து உள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது. அந்நிய செலாவணி கடன் அதிகரித்து உள்ளது.
இந்த பட்ஜெட் ஏழைகளை வஞ்சித்துள்ளது. பட்ஜெட்டை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறோம். வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நாடு தழுவிய அளவில் மக்களை சந்திக்கும் பேரியக்கம் நடத்தப்படும். மார்ச் 23 முதல் ஏப்ரல் 14 வரை சமூக நீதி, சமத்துவம், பாஜக அரசிலிருந்து மக்களை காப்பதற்காக அரசியல் சித்தாந்த பேரியக்கத்தை நடத்த உள்ளோம்.
கையில் விலங்கு
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கை, கால்களில் சங்கிலியால் கட்டி விமானத்தில் அழைத்து வரப்பட்டதைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியர்களை அவமானப்படுத்தியது, இந்தியாவை அவமானப்படுத்தியது போல் ஆகும். இந்தியா இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமை எந்த பகுதியில் நடைபெற்று இருந்தாலும் அதற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டும் என்பது ஒன்றிய தொழிற்சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது. எல்லா மாநிலங்களிலும் வலியுறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இது வலியுறுத்தப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்.”
இவ்வாறு டி.ராஜா கூறினார்.
மதமோதல் முயற்சி
எச்.ராஜா மீது வழக்கு
மதுரை,பிப்.8- மதுரை, திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் கடந்த 4ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆர்ப்பாட்டத்தில் ஒரு ஒலிவாங்கி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது. ஆர்ப்பாட்டம் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், இரு பிரிவினரிடையே மதமோதலை தூண்டும் வகையில் பேசியதால் அவர் மீது சுப்ரமணியபுரம் காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆம் ஆத்மியிலிருந்து பிஜேபிக்கு தாவிய
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.15 கோடி
பி.ஜே.பி. மீது குற்றச்சாட்டு
டெல்லி,பிப்.8- சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவுக்கு சில நாள்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தனர்.
இதற்காக அந்த 7 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ரூ.15 கோடி பா.ஜனதா வழங்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தொலைபேசி வாயிலாக அந்த 7 சட்டமன்ற உறுப்பினர்களையும் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
கட்சி மாறுவதற்காக சிலருக்கு நேரடி சந்திப்புகளிலும், சிலருக்கு வேறு நபர்கள் மூலமாகவும் பணம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வெளிவரும் முன்பே பா.ஜனதா தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. அதனால்தான் இதுபோன்ற செயல்களில் அந்த கட்சி ஈடுபடுகிறது என்று கூறினார்.