சென்னை,பிப்.8- பாலியல் அத்து மீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை
கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பள்ளி சிறுமிகள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஒரு சில சம்பவங்கள் நடந்து வருகின்றன. கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவி, மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மணப்பாறையில் 4ஆம் வகுப்பு சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள் உட்பட 5பேர் கைது செய்யப்பட்டனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் களிடம் கூறியதாவது:
கல்வித் தகுதி ரத்து
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டால் யார் தவறு செய்திருந்தாலும் ஆசிரியர்களாகவே இருந்தாலும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் புகார் அளிக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். பாலியல் அத்து மீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு காவல் துறையினர் மூலம் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்.
தமிழ்நாட்டில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து உள்ளார். வருங்காலத்தில் இது போல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க பள்ளிக்கல்வி துறை காவல் துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என்றார். இவ்வாறு அவர் கூறினார்