மாநிலங்களின் உரிமையை பறிக்கும் ‘யுஜிசி’ வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்

2 Min Read

கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கோவி.செழியன் வலியுறுத்தல்

பெங்களூரு, பிப்.6 மாநிலங்களின் சுயாட்சி உரிமையை பறிக்கும் யுஜிசி வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பெங்களூருவில் நடைபெற்ற மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தினார்.
யுஜிசி வரைவுக்கொள்கை தொடர்பான மாநில கல்வி அமைச் சர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்டு பேசியதாவது:

யுஜிசி வரைவு அறிக்கை

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் நியமனம் மற்றும் பதவி உயர் வுக்கான குறைந்தபட்சத் தகுதிகள் தொடர்பாக யுஜிசி அண்மையில் வெளியிட்ட வரைவு அறிக்கை மாநிலத்தின் சுயாட்சியை முற்றிலும் பறிப்பதாக உள்ளது. யுஜிசி நெறி முறைகள் ஒரு வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வளவுதான். யுஜிசி உயர்கல்வி தரத்தை மேம் படுத்த ஆலோசனைகள், பரிந்து ரைகள் வழங்கலாம். ஆனால், அவற்றை அமல்படுத்த மாநிலங் களைக் கட்டாயப்படுத்த முடியாது.

யுஜிசி வரைவு அறிக்கை தேசிய கல்விக்கொள்கையை புறவழியாக அமல்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியாக தெரிகிறது. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் அதுதொடர்பான விதிமுறைகளை வகுக்கும்போது ஒவ்வொரு கட்டத்திலும் மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் ஆலோசனை பெறுவது முக்கியம்.

தமிழ்நாட்டில் உள்ள பொது பல்கலைக்கழகங்கள் மாநில சட்டப்பேரவை சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டு, அரசின் நிதியுதவியுடன் சமவாய்ப்புகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளடக்கிய சமூக நீதியுடன் செயல்பட்டு வருகின்றன. வரைவு அறிக்கையில், துணைவேந்தர்களுக்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுக்களில் இருந்து மாநில அரசு ஒதுக்கப்படுவதை தமிழ்நாடு எதிர்க்கிறது. மாநில அரசின் உறுப்பினர் ஒப்புதல் இன்றி எடுக்கப்படும் துணைவேந்தர் நியமனம் தொடர்பான முடிவுகள் பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாநில சுயாட்சியைச் சிதைக்கும் முயற்சி ஆகும்.

கல்வியியலாளர்கள் அல்லாத வர்களை துணைவேந்தர்களாக நியமிக்கும் விதிகள் கவலைக் குரியதாக உள்ளன. பல்கலைக் கழகங்களுக்கு கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகம் இரண்டையும் புரிந்து கொள்ளும் தலைவர்கள் தேவை. இவர்கள் வணிகத்தில் மட்டும் கவனம் செலுத்தும் நபர்கள் அல்ல. இந்த விதிமுறைகளை அமல்படுத்துவது கல்வியை வெறும் வியாபாரமாக மாற்றி அதன் தரத்தைச் சீரழித்துவிடும்.

தகுதித் தேர்வு

ஆசிரியர்கள் நியமனத்தில் நெட், செட் தகுதித் தேர்வை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு தொடர்பில்லாத பாடங்களில் ஆசிரியர்களை கற்பிக்கச் செய்வது மாணவர்களின் கற்றல் விளைவுகளைப் பாதிக்கக் கூடியதாகும். திறமையான அறிவுப் பரிமாற்றத்துக்கு ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் பாடங்களில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் மீது நியாயமற்ற சுமையை ஏற்படுத்தும் பொதுநுழைவுத் தேர்வுகளை தமிழ்நாடு எப்போதும் எதிர்க்கிறது.

அதேபோல், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும், அதிக போட்டி நிறைந்த நுழைவுத்தேர்வுகள், தற்போதுள்ள தேர்வுகளை அர்த்தமற்றதாக்கி, மாணவர்களுக்கு மனச்சுமையை ஏற்படுத்தும். ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை மற்றும் பல நுழைவு மற்றும் பல வெளியேறுதல் (Multiple Entry and Multiple Exist (MEME) போன்றவை கல்வி முறையை முற்றிலும் சீர்குலைக்கும்.

எனவே, யுஜிசி வரைவு விதி முறைகளை திரும்பப் பெற வேண்டும், ஜனநாயக முறையில் உயர்கல்வியை உருவாக்க மாநிலங் களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசை தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *