வல்லம், பிப். 4- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் துறையும், உயிரிதொழில்நுட்ப துறையும் இணைந்து இத்தகைய பன்னாட்டு கருத்தரங்கை ஏற்பாடு செய்தன. இக்கருத்தரங்கில், ஆராய்ச்சியின் பயன்பாடு மக்களை சென்றடைவது அவசியம் என்று நிர்வாகக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் தமது சிறப்புரையில் குறிப்பிட்டார்.
அறிவுறுத்தல்
1.2.2025 அன்று நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் குறிப்பாக இளம் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். துவக்க விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.இராமச்சந்திரன் தலைமை வகித்து துவக்கவுரை நிகழ்த்தினார். அவரது உரையில் ஆய்வு மற்றும் வெளியீடுகளின் இன்றைய தேவையை வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை இயக்குநர் முனைவர் பாலகுமார் பிச்சை வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிர்வாகக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் சிறப்புரையில் ஆராய்ச்சியும் அதன் பயன் பாடுகளும், மக்களைச் சென்ற டைவது மிகவும் அவசியமானது என்றும் இளம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி முயற்சிகளில் முழு மையாக ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பங்கேற்பு
கருத்தரங்கத்தில் நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பி.கே.சிறீவித்யா, அமெரிக்க பேராசிரியர்கள் ஜெகதீஷ், அரசு செல்லையா, மலேசியா பேராசிரியர்கள் பேராசிரியர்கள் ஜி முருகன், தங்கையா, ஹேமா.சுப்ரமணியன் சவுதி அரேபியா பேராசிரியர் சரவணன், பாண்டிய ராஜ், உள்ளிட்டவர்கள் கருத்தரங்க உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக ஆராய்ச்சித் துறை இயக்குநர் முனைவர் டி.ஜெயசிம்மன் நன்றி தெரிவித்தார்.
இந்த பன்னாட்டு கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கீதா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.