யுஜிசி புதிய நெறிமுறைகளை எதிர்ப்போம் ஆளுநர் தனது எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அமைச்சர் கோவி.செழியன் எச்சரிக்கை!

சென்னை,ஜன.30- யு.ஜி.சி.யின் புதிய நெறிமுறைகளை எதிர்த்து கடைசி வரை போராடுவோம்.
அதேநேரம் நெறி முறைகளை தாண்டி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டால் உச்சநீதி மன்றத்தை நாடுவோம் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று முன்தினம் (28.1.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
பல்வேறு மாநிலங் களைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் முகமாக யுஜிசி வரைவு நெறிமுறைகள் வெளி யிடப்பட்டுள்ளன.
மாநில அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில மாணவர் களுடைய கல்வி சார்ந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாகவே இதுவரை செயல்பட்டு வந்துள்ளன.

சர்வாதிகாரத் தொனி
அதைத் தடுப்பதற்காக பல்கலைக்கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். ‘நாங்கள் சொன்னதை நீங்கள் செய்ய வேண்டும்’ என்று ஒரு சர்வாதிகாரத்தோடு பல்கலைக்கழகத்தின் மீது திணிக்கக் கூடிய கருத்தாகத்தான் யுஜிசியின் வரைவு இருக்கிறது.
துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசி தலையிடுகிறது. தொடர்ந்து கல்விப் பணி ஆற்றிக் கொண்டிருப்பவர்கள்தான் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும்.
கல்விப் பணி சாராதவர்களும் துணை வேந்தர் ஆகலாம் எனச் சொல்லியிருப்பது பல்கலைக்கழகங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாகும்.
அதேபோல பட்டப் படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம் என்பது ஏற்புடையதல்ல.
தொழிற்கல்வியில் இருந்து பொதுக் கல்விக்கு மாணவர்கள் மாறிப் படிக்கலாம் என்பதும் தவறானது.

உச்சநீதிமன்றத்தை நாடுவோம்
ஒரே நேரத்தில் 2 இளங்கலை, 2 முதுகலை படிக்கலாம் என்பதும் சரியானதல்ல. இது சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உயர்கல்வியில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.
யு.ஜி.சி. புதிய நெறிமுறைகளை தமிழ்நாடு போன்று கேரளா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளும் எதிர்த்துள்ளன.
யு.ஜி.சி. புதிய நெறிமுறைகளை எதிர்த்து கடைசி வரை நாங்கள் போராடுவோம். யுஜிசி குறித்து வருகிற 5.2.2025க்குள் கருத்து தெரிவிக்கலாம் என ஒன்றிய அரசு கூறியிருக்கிறது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசுக்கு மெயில் அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம். நெறிமுறைகளை தாண்டி ஆளுநர் கல்வித்துறையை மாற்ற நினைத்தால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும்.
பச்சையப்பன் கல்லூரியை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *