திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு
சென்னை, ஜன.30 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (29.1.2025) நடைபெற்றது.
ஆளுநருக்கு நடத்தை விதிகள் மற்றும் கோப்புகள், மசோதாக்களில் கையெழுத்திட கால நிர்ணயம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.31 ஆம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அவையில் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விவாதிப்பதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (29.1.2025), முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொரு ளாளர் டி.ஆர்.பாலு மற்றும் மக்களவை, மாநிலங்க ளவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், நாடாளுமன்ற அவைகளில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தல்களை வழங்கினார். குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி, பள்ளிக்கல்வி நிதி, வக்பு வாரிய திருத்தச்சட்டம், ஒரேநாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆறு தீர்மானங்கள்!
இதையடுத்து, 6 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. குறி்ப்பாக ஆளுநர்களுக்கு நடத்தை விதிகள் உருவாக்குதல், மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்ய கூட்டத்தொடரில் வலியுறுத்தல், டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், உருக்கு இரும்பு 5,370 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளதை உலகுக்கு அறிவித்த அரசின் சாதனையை ஒன்றிய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போராட்டம்
யுஜிசியின் வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெறக்கோரி தி.மு.க. மாணவரணி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் பிப்.6 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு, இந்த முறை தமிழ்நாட்டின் திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்துக்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அறிவுறுத்தல்
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நிறைவுற்றதும், திமுக மாணவரணி சார்பில் பிப்.6 அன்று யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக நடைபெறும் போராட்டம் தொடர்பாக, மாணவரணி நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விவா தித்தார். அப்போது, நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார்.