வெளிநாட்டு கைதிகளை
மனிதத் தன்மையுடன் நடத்த வேண்டும்
வெளிநாட்டு சிறைக் கைதிகளாக இருந்தாலும் அவர்களை மனிதத் தன்மையுடன் நடத்த வேண்டும். அவர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும். வெளிநாட்டு சிறைக் கைதிகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை வைத்தே அந்த நாட்டில் நம் நாடு குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் வழக்கு விசாரணை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பின
சென்னை மாநகருக்குத் தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து பெறப்படுகிறது. இதில் பூண்டி ஏரிக்கு தமிழ்நாடு அரசு ஆந்திர மாநில அரசுடன் செய்துகொண்ட கிருஷ்ணா நதி நீர் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. நீர், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படுகிறது. அதேபோல், பருவமழை மூலம் கிடைக்கும் நீர் இந்த ஏரிகளின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. சில மாதங்களாக பெய்த வடகிழக்குப் பருவமழையால் போதிய நீர் ஏரிகளில் சேமிக்கப்பட்டதால் இந்த ஏரிகளில் 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளன என நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையில்
பணியிடங்கள் நிரந்தரம்
பள்ளிக் கல்வித் துறையில் முதன்மைக் கல்வி அலுவலர், தனியார் பள்ளிகள் ஆய்வாளர், சட்ட அதிகாரி, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் உள்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியிடங்களாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் பல்வேறு பதவிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத 47 ஆயிரத்து 13 நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்படுகின்றன. அதேபோல், சமையலர், காவலாளி உள்பட 5,418 தற்காலிக பணியிடங்கள், ஒழிவடையும் பணியிடங்களாக தற்காலிகமாக தொடரலாம். ஓட்டுநர், பதிவு உதவியாளர் ஆகிய 145 தற்காலிக பணியிடங்கள் மேலும் 5 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக தொடர் நீட்டிப்பு வழங்கப்படுகிறது. முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் புத்தாக்கம் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மதுமதி பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
புதிய தலைமை தேர்தல் ஆணையர்
தேடல் குழு அமைப்பு
புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான நடவடிக்கையை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இதற்கு முன், மூத்த தேர்தல் ஆணையர் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, தேடல் குழு பரிந்துரைக்கும் நபர்களில் ஒருவரை தேர்வுக் குழு முடிவு செய்யும். தற்போது, இதற்கான 3 பேர் கொண்ட தேடல் குழுவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் குழுவிற்கு தலைமை வகிக்கிறார். இக்குழு 5 அதிகாரிகள் பெயரை தேர்வுக் குழுவிடம் பரிந்துரைக்கும்.