பிரயாக்ராஜி, ஜன. 29- மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப் படாததால் மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள 2 ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜை நோக்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 13 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை சிறப்பு ரயில்கள் ஆகும். அந்த வகையில் கடந்த திங்கள்கிழமை இரவு, மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மற்றும் ஹர்பால்பூர் ஆகிய 2 ரயில் நிலையங்களுக்கு வந்த சிறப்பு ரயில்களின் பெட்டிகளில் பயணிகள் ஏற்கெனவே நிரம்பியிருந்ததால் கதவுகள் திறக்கப்படாமல் இருந்துள்ளன.
ரயில் நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் இதனால் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து, கல் வீசி தாக்கி, கதவுகளை வலுக்கட்டாயமாக திறக்க அவர்கள் முயன்றனர். தொடர்ந்து, ரயில்வே காவல்துறையினர் கதவுகளை திறந்துவைத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
மகா கும்பமேளாவில் நீராட சத்தர்பூரிலிருந்து பிரயாக்ராஜ் புறப்பட்ட பயணி ஆர்.கே.சிங் கூறுகையில், ‘ரயில்வே காவல்துறையினர் ரயிலின் கதவுகளைத் திறந்தனர். ஆனால், ஏற்கெனவே ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பலரால் ரயிலில் ஏற முடியவில்லை’ என்றார்.
இந்திய செய்தித்தாள் தினம் இன்று!
1780 ஜனவரி 29ஆம் தேதி, இந்தியாவில் முதன்முதலாக ‘ஹிக்கிஸ் பெங்கால் கெசட்’ என்ற செய்தித்தாள் அச்சிடப் பட்டது. இதனை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜன.29ஆம் தேதி, இந்திய செய்தித்தாள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவின் விடுதலைக்கான சுதந்திர இயக்கத்தில், செய்தித்தாள்கள் ஆற்றிய முக்கியப் பங்கை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.