சுசீந்திரம், மன்னார்குடி சுயமரியாதை சத்தியாக்கிரகம்
சுசீந்திரத்தில் வழி நடைபாதை விஷயமாய் துவக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தை சுயமரியாதை சத்தியாக்கிரக கமிட்டியார் ஏற்று நடத்துவதாக ஏற்பாடு செய்து அது சம்பந்தமாக விசாரித்து பொது ஜனங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட வேண்டு மென்பதாக சத்தியாக்கிரக் கமிட்டி திருநெல்வேலியில் தீர்மானம் செய்தது வாசகர் களுக்கு நினைவிருக்கலாம்.
இப்போது திருவாங்கூர் சர்க்கார் மேல்படி சுசீந்திரம் ரோடு விஷயமாய் சத்தியாக்கிரகம் மேலால் நடக்க வேண்டிய அவசரமில்லாமல் சீக்கிரத்தில் ஏற்பாடு செய்யக்கூடும் என்பதாக நம்பிக்கை உள்ள இடத்தில் இருந்து சேதி கிடைத்திருப்பதாய் தெரிவிக்கப்படுகின்றது.
அறிக்கை
இது ஒரு புறமிருக்க தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு தடுக்கப்பட்ட ரோடுகள் விஷயமாய் விசாரித்து அறிக்கை செய்யும்படியாய் நியமிக்கப்பட்ட சப் கமிட்டி அதாவது சத்தியாக்கிரகக் கமிட்டி காரியதரிசியும் சுயமரியாதைச் சங்க நிர்வாகச் சபை காரியதசிரியுமான திருவாளர்கள் ரெ.சின்னையா, எஸ்.ராமநாதன் ஆகிய இரு கனவான்களும் தஞ்சை ஜில்லாவில் மன்னார்குடி டவுனில் உள்ள சில ரோடுகளைப் பற்றி நேரில் சென்று விசாரித்து அதன் விபரத்தை அறிக்கை செய்திருக்கின்றார்கள். அவ்வறிக்கையின் மீது இம்மாதம் 10ஆம் தேதி விருதுநகரில் சத்தியாக்கிரகக் கமிட்டி கூடி மேலால் நடக்க வேண்டிய வேலைகளைப் பற்றி தீர்மானங்கள் செய்யப்படும். அவ்வறிக்கையின் விபரமாவது:-
தீண்டா வகுப்பாரும்
மன்னார்குடி ரஸ்தாக்களும்
“கடந்த மே மாதத்தில் ஈரோட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில்,பிறப்பினால் தாழ்த்தப் பட்டவர்கள் என்று சிலரைத் தப்பாக எண்ணிக் கொண்டு அவர்களுக்குண்டான சமூக சுதந்திரங் களை அவர்கள் அனுபவிக்க வொட்டாமல் தடுத்திருக்கும் முறையெல்லாம் நீக்கி, அவர்கள் தங்கள் சுதந்திரங்களை, ஏனைய மேல்ஜாதியார் என்று எண்ணிக் கொள்ளுகிறவர்களைப்போலவே அனுபவிக்க வேண்டுமெனக் கருத்துடைய தீர்மானம் ஒன்று அரங்கேறியது.
அத்தீர்மானத்திற்கொப்ப ஒழுங்கானதாயும், கொஞ்சமேனும், பலாத்காரமில்லாததாயும் உள்ள முறையில் சத்தியாக்கிரகம் செய்து அந்தப் பாத்தி யங்களை அடைவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மகாநாடானது, இந்தத் தீர்மானத்தை நடவடிக்கைக்குக் கொண்டுவர உத்தேசித்து, அது சம்பந்தமான வேலையினிமித்தம் சுயமரியாதை சத்தியாக்கிரகக் கமிட்டி என்று ஒரு கமிட்டியையும் நியமித்தது.
கொடிய முறை
இந்தக் கமிட்டியாரின் இரண்டாவது கூட்டம் திருநெல்வேலியில் கூடி ஆலோசித்தபோது, தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள சில நகரங்களில், முக்கியமாக, மாயவரத்திலும், மன்னார்குடியிலும், சில பொது ரஸ்தாக்களில் தீண்டாதார் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பார் நடமாடக் கூடாதென்ற ஒரு கொடிய முறை இருந்து வருவதாக செய்தியொன்று கமிட்டியாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதன்மேல், காரியதரிசிகள் அந்த இடங்களை நேரில் போய்ப் பார்த்து, விவரத்தை எல்லோருக்கும் விளக்க வேண்டுமென்று கமிட்டியார் முடிவு கூறினர். அதன்படியே காரியதரிசிகளான திருவாளர்கள் ஆர்.சின்னையா, திரு.எஸ்.ராமநாதன் ஆகிய இருவரும் போய்ப்பார்வையிட்டார்கள். மன்னார்குடியைச் சுற்றியுள்ள சேரிகளிலுள்ள பள்ளர், பறையர் என்று கூறப்பட்ட வகுப்பார்கள் விசாரிக்கப்பட்டார்கள். உள்ளூரில் வசிக்கும் பார்ப்பனர்களுடைய கருத்தும் இன்னதென்று தெரிந்து கொள்ளப்பட்டது.
தஞ்சை ஜில்லாவில் மன்னார்குடியானது காவிரிப் பாசனத்துக்கு தென்புறத்தில் அமைந்த ஒரு முனிசிபல் பட்டணம். அப்பட்டணத்தின் ஜனத்தொகை 21636 அதில் 20165 இந்துக்கள் 589 பேர் கிறிஸ்துவர்கள், 742 பேர் முஸ்லிம்கள். இவர்கள் அல்லாதவர்கள் 140 பேர். இந்தத் தஞ்சை ஜில்லாவில் இந்தவூர் கல்வி விருத்தியால் விளக்கம் அடைந்த ஊர், முதல் கிரேட் காலேஜ் ஒன்றும், இரண்டு ஹைஸ்கூல்களும் இவ்வூரில் இருக்கின்றன.
பார்ப்பனர் சொத்து
தேசத்திலுள்ள ஏனையோரைப் போன்று இல்லாமல், மன்னார்குடிப் பார்ப்பார்கள் நன்றாய்ப் படித்தவர்களும் நல்ல சொத்து உடையவர்களும் ஆவார்கள். மன்னார்குடியைச் சுற்றி பலமைல் விஸ்தீரனத்திற்குக் காணப்படும் கொழுத்த நெல் வயல்கள் எல்லாம் இந்த மன்னார்குடிப் பார்ப்பனர்களுடைய சொத்தாகும்.
ஆகவே மன்னார்குடி நகரில் உள்ள செல்வந்தரும் படித்தவர்களும் பார்ப்பனர்களே யாவார்கள். மேலும் இவர்கள் யாவரும் தனியாக பார்ப்பனத் தெருவிலேயே (அக்கிரகாரத்தில்) வசிக்கிறார்கள். இவற்றுள் முக்கியமான பார்ப்பனத் தெரு முதல் தெரு என்று அழைக்கப்படும். அதில் வசிப்பவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களே யாவார்கள்.
இந்தப் பார்ப்பனர் அநேகமாக நன்றாய் கல்வி கற்றவர்கள். அதில் பி.ஏ.க்களும், எம்.ஏ.க்களும், ஆசிரியர்களும் வக்கீல்களும், டாக்டர்களும், மிராசு தாரர்களும் குடியிருக்கின்றனர். ஆகவே, அதில் வசிப்போரெல்லாம் தக்க செல்வ நிலைமையில் இருக்கக் கூடியவர்கள்.
நாய், பன்றி போகலாம்
இப்படிப்பட்ட இவர்கள் வசிக்கும் 2- பர்லாங்கு நீளமுடையதான இந்த ரோடானது முனிசிபல் ஆபீசுக்கும், ஆஸ்பிடலுக்கும். கோர்ட்டுகளுக்கும் இன்னும் மற்ற இடங்களுக்கும் போவதற்கு சவுகரிய மானதும் சுருக்கமானதுமான வழியாக இருக்கிறது. இந்த ரோட்டை மன்னார்குடி முனிசிபாலிட்டியார்தாம் செவ்வையாக கப்பி போட்டுச் செப்பனிட்டு வரு கிறார்கள். அந்த டவுனில் உள்ள முக்கியமான பாதை களுக்குத்தான் முனிசிபாலிட்டியார் கப்பி போடுவது வழக்கம். அந்தத் தெருவுக்கு விளக்கு போடுவதும் முனிசிபாலிட்டியாரேயாகும். நெடுக கிணறுகளும் முனிசிபாலிட்டியாரால் வெட்டப்பட்டிருக்கின்றன. இப்படியிருக்க இந்தப் பக்கத்திலுள்ள பள்ளர், பறையர் என்று சொல்லப்பட்டவர்கள் இந்தத் தெருவழியாக நடக்கவே கூடாதாம். இது யாவரும் அறிந்த செய்தியே. ஆனால் இந்துக்கள் என்ற வர்க்கத்தில் அடங்கிய மேற்படி தாழ்த்தப்பட்ட வகுப்பார் மட்டும் அந்தத் தெரு வழியாய் போகக் கூடாதே ஒழிய – அவ்வகுப்பிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்குச் சென்று விட்டவர்களும், முஸ்லிம்களும் அந்தப் பாதை வழியே நெடுகப் போகலாம், மற்றும் எவ்விதமான நாய், கழுதை, பன்றியும் போகலாம்; மலம் முதலிய அசிங்கமான குப்பை கூளம் கொண்ட எரு வண்டியும் போகலாம்.
கொல்லைப்புற வழி
அந்தத் தெருவில் மிராசுதாரர்கள் தங்கள் பண்ணை யாட்களாய் மேற்படி 2 வகுப்பில் உள்ளவர்களையும் தம் காரியத்திற்கு அழைக்கும்போது, அவர்களைப் பக்கத்துத் தெருக்கள் மூலமாய் கொல்லை வழியாய் (தம் புறக்கடைக்கு) வரச்சொல்லி வேலை வாங்கிக் கொள்வது வழக்கம். இந்தப் பட்டணத்து முன்சிபாலிட்டியானது இந்தப் பார்ப்பனர்களின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டதாதலால் இவர்களது மேல் கண்ட தெருவில் கப்பி போடுதல் முதலான வேலைகளை எல்லாம் மற்ற வகுப்பினரைக் கொண்டே செய்விப்பது என்னும் ஒரு நிர்ப்பந்தத்தை உபயோகித்து வருகின்றார்கள். யாரேனும் ஒரு தீண்டாத வகுப்பார் அத்தெரு வழியாக வழக்கத்திற்கு விரோதமாக மீறிப் போனால் அவரை அங்குள்ள பார்ப்பனர்கள் திட்டுவார்கள்; கல்லால் அடிப்பார்கள்; கழியால் தாக்குவார்கள்.
இத்தனைத் தண்டனைக்காளாகின்ற வகுப்பினர்கள் தம் நிலைமைக்குப் பெரிதும் வருந்துகின்றனரேனும், தமக்குத் துணை செய்வாரில்லாமையால் செல்வமும் செல்வாக்குமுள்ள மேற்படி பார்ப்பனர்களை மீறி ஒன்றும் செய்ய முடிவதில்லை.
மேற்படி முதற்றெருவுக்கு வடக்கில் ஒத்தைத் தெரு என்று ஒரு தெரு அமைந்திருக்கிறது. மற்றும், தெற்கில் இரண்டாவது தெருவென்று ஒரு தெரு அமைந்திருக்கிறது.
இந்த 2 தெருக்களின் கீழ்ப்பாதிகளிலும் பார்ப்பனர் களே வாழ்கின்றனர். அக்காரணத்தினாலும் அந்தக் கீழைப் பாதிகளின் வழியே போகக்கூடாதென்று கூட மேற்படி வகுப்பினர் ஏற்பட்டிருக்கிறது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி யென்னவென்றால், மேற்சொன்ன 3 தெருக்களுக்கு மிகவும் எட்டியிருக் கின்ற ராஜகோபாலாசாமி கோவிலைச் சுற்றிய தெருக்களிலேயும், மேற்படி தாழ்த்தப்பட்ட இரு வகுப்பினர்களும் போகலாம். ஆனால் பார்ப்பனர் வசிக்கும் முதல் தெருவிலும் மற்ற தெருக்களின் கீழ் பாதிகளிலும் மட்டும் அவர்கள் போகக்கூடாது. காரணம் அங்கு பார்ப்பனர்கள் மட்டுமே வசிக்கிறார்கள் என்ற காரணமே.
புறக்கணிப்பு
முதலாவது தெருவில் வசிக்கும் சொல்வதென்ன வென்றால் பார்ப்பனர் தீண்டப்படாதவர்கட்குப், பார்ப்பனர்களே வசிக்கும் தெருவில் வேலையென்ன என்பது ஒன்று. மேலும் அவர்கள் உள்கூற்று என்னவென்றாலும் ஒரு காலத்தில் ஒரு வேளை அந்தத் தீண்டாதார்களுக்கு உரிமை இருந்திருந்தால் கூட, நெடுங்காலம் அவர்கள் வீதியில் நடக்கக் கூடாதென புறக்கணிக்கப்பட்டும் போயிருக்கிற காரணத்தினாலும், அவர்களும் இணங்கியே இவ்வளவு காலம் சம்மதித்து,விட்டுக் கொடுத்திருக்கிறதாலும் அவர்கள் இனிமேல் அந்தத் தெருவில் நடமாடும் பாத்தியத்தை இழந்து விட்டார்கள் என்பது இரண்டாவது. மேலும், பார்ப்பனர்கள் தம் மதத்தின் படியேயும் தம் இருப்பிடங்கட்கு அருகில் மேற்படி ஜாதியார் அணுகக் கூடாதென்பது மூன்றாவது. ஆனால் தாராள சிந்தையுடைய சிலர் மட்டும் அவர்களும் நடக்க வேண்டும் என்கிற உரிமை ஞாயமென்று சொல்லுகிறார்களேயானாலும் அவர்கள் தங்கள் பாத்தியதையை விட்டுக் கொடுக்கும் விஷயத்தில் எவ்வித உதவியும் செய்ய மறுக்கிறார்கள்.
வாயினால் மட்டும் மேற்படி யாருடைய உரிமையை ஒப்புக் கொண்டு, “காலாந்தரத்தில் அத் தீமை விலகிவிடும்” என்று சொல்லுகிறார்கள். தீண்டா வகுப்பினர் என்பவர்களுக்கு அந்தத் தெருவில் வேலை இல்லை என்கின்றவாதம் சுத்த அசட்டுத்தனமே. எப்படியெனில் மேற்படி தீண்டாதார் உழுது பணி செய்து விளைவிக்கின்ற நெல்லையே மேற்படி தெருவிலுள்ள எல்லாப் பார்ப்பனர்களும் அடைகின்றவர்களாய் அந்தத் தீண்டாதார் என்பவர்களையே தம் பண்ணையாட்களாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டாருடைய வேலைக்கும் மேற்படி வகுப்பினர் வேண்டியிருக்கின்றனர். ஆடு, மாடு மேய்த்தல், நெல் மூட்டைகள் தூக்குதல், விறகு கொணர்தல் முதலிய வேலைகட்கு மேற்படி வகுப்பினர் வேண்டியிருக்கின்றனர். உண்மையாகவே மேற்படி வகுப்பினர் பக்கத் தெரு மூலமாய் வீட்டின் புறக்கடை வழியாக வீட்டின் கட்டுக்குள் கூட வேலைக்காக விடப்படுகின்றனர்.
மனித உரிமை
சட்டப்படியாகக் கூட ஏதோ ஒரு வகுப்பின் சில பேர் சில காலமாக ஒரு பாதை வழியாகப் போகவில்லையென்று அவ்வகுப்பார் எல்லாரையும் எக்காலமும் போகக் கூடாதென்று தடுத்தல் செல்லு படியாகாது. ஒரு பொதுப் பாதையில் நடப்பதென்பது ஒவ்வொரு மனிதனுக்குமுள்ள முதல் உரிமையாகும். அந்த உரிமைக்கு விரோதமாக ஒரு வகுப்பார் தம் மதத்திற்கு விரோதம் என்று கூறி இன்னொரு வகுப்பினரைத் தடுப்பது முற்றிலும் சட்ட விரோதமே.
ஆகவே, மன்னார்குடியில் மேற்படி, முதல் தெருவில் தீண்டா வகுப்பார் நடத்தற்குரிமை யுண்டென்பது தெள்ளத் தெளிய விளங்கும் ஒரு செய்தி. இதற்கு எதிர்ப்பானது “உயர்ந்த பிறவி யுடையவர்கள்” என்று எண்ணிக் கொண்டும் தமக்கு இயற்கையிலேயே சிலரை தம் வாசஸ்தலங்கட்கு அருகே வரவிடாமல் செய்யப் பாத்தியம் உண்டென்றும் கருதிக் கொண்டு மிருப்பவர்களிடம் ஏற்படுகிறது. பிறப்பினால் உயர்வு என்ற இப்படிப்பட்ட கொள்கையானது தற்கால நாகரிக் வாழ்க்கையினரால், மிகமிகப் பைத்தியக்காரத்தன முடையதென்றும் முதல் நம்பர் அயோக்கியத்தனமுடைய தென்றும் சொல்லத்தகுந்தது.
பொதுநலன் இல்லை
மனிதற்குள் சிலர் அகம்பாவத்தனமும் இழி குணமும் நிறைந்தவர்களாய் இருக்கின்றார்களென்பது மன்னார்குடிப் பார்ப்பார்களது செய்கையே போது மான அத்தாட்சியாகும். பொதுஜன க்ஷேம நலத்தைக் கருதுகையிலும் தேசிய நலத்தைக் கருதுகையிலும், இந்த உயர்வு என்ற கொள்கையானது எடுபடவும், தீண்டா வகுப்பினர் என்று தூற்றப்படுகின்றவர்கள் ஞாயமுடையவும் வேண்டுமென்பது தோன்றுகிறது.
ஒரு தலையாகச் சுயமரியாதை இயக்கத்து உறுப்பினர்களும், இந்தியப் பொது மக்களும், மேற்படி மன்னார்குடி தீண்டா வகுப்பினர் என்கிறவர்கள் அடைய விரும்புகின்ற தமது உரிமையை அடையும் வழியில் செய்ய வேண்டிய முழு உதவியையும் செய்ய வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்ளுகிறோம். அரசாங்கத்தாரும் நமக்கு உதவி செய்வார்கள் என்று நம்புகிறோம்.
குறிப்பு: இந்த ரிப்போர்ட்டின் மீது விருதுநகரில் 10ஆம் தேதி கூடும் சத்தியாக்கிரக கமிட்டி செய்யும் முடிவை எதிர்பார்த்து சுயமரியாதை சத்தியாக்கிரகத் தொண்டர்கள் உதவிக்குத் தயாராகவிருக்கும்படி வேண்டுகிறோம்.
– ‘குடிஅரசு’, 06.07.1930