சென்னை, ஜன. 27- இந்தியாவில் முதல்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த பிரபல மருத்துவர் கே.எம்.செரியன் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் செரியன்
உலக அளவில் தலைசிறந்த மருத்துவ வல்லுநர்களில் ஒருவரும், இந்தியாவில் இதய பைபாஸ் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையை அறிமுகப்படுத்தியவருமான மருத்துவர் கே.எம்.செரியன் (82), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்றிருந்தார். 25.1.2025 அன்று இரவு திடீரென மயக்கமடைந்த அவர், உடனடியாக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரள மாநிலம் காயம்குளத்தில் 1942இல் பிறந்த கே.எம்.செரியன், மருத்துவப் படிப்பை நிறைவு செய்த பிறகு வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராக 1970இல் பணியாற்றினார். பின்னர் இதய அறுவை சிகிச்சையில் எப்ஆர்ஏசிஎஸ் படிக்க பிரிட்டன் சென்ற அவர், பிறகு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் மருத்துவப் பயிற்சிகளை மேற்கொண்டு உலகத்தரத்தில் இதய அறுவை சிகிச்சைகளை செய்வதில் கைதேர்ந்தவராக உருவெடுத்தார்.
இதய மாற்று அறுவை சிகிச்சை
ஆஸ்திரேலியாவில் தனது 26ஆவது வயதிலேயே திறந்த நிலை அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். பன்னாட்டு அளவில் பணி வாய்ப்பும், பாராட்டுகளையும் பெற்றாலும், அதனை விடுத்து சென்னை திரும்பிய அவர், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கடந்த 1975இல் இந்தியாவின் முதல் இதய பைபாஸ் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு உலகின் கவனத்தை ஈர்த்தார். மருத்துவர் கே.எம்.செரியனால் பைபாஸ் சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி சுமார் 25 ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்தார். அதேபோல், உறுப்பு மாற்று சிகிச்சைகள் சட்டப்பூர்வமாக்கப்பட்ட பிறகு, இந்தியாவிலேயே முதன்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, மருத்துவ உலகை திரும்பி பார்க்க வைத்தார் செரியன்.
நாட்டின் முதலாவது இதயம் – நுரையீரல் மாற்று சிகிச்சை, குழந்தைக்கு முதன் முறையாக இதய மாற்று சிகிச்சை என பல சாதனைகளை செய்துள்ளார். குடியரசுத் தலைவர், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என பலரும் அவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர். மருத்துவத் துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய சேவையை பாராட்டி பத்மசிறீ விருது வழங்கி ஒன்றிய அரசு சிறப்பித்தது. இவைதவிர பன்னாட்டு அளவிலும், இந்திய அளவிலும் மருத்துவத்துறையின் பெரும்பாலான உயரிய விருதுகள் மருத்துவர் கே.எம். செரியனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தலைவர்கள் இரங்கல்
முதலமைச்சர் ஸ்டாலின்: இதய அறுவை சிகிச்சையில் உலக அளவில் அறியப்பட்ட மருத்துவர் கே.எம்.செரியனின் மறைவை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இதய சிகிச்சையில் அவரது முன்னோடியான பணிகள் எண்ணற்றோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. மருத்துவத்துறையில் பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. அவரது பங்களிப்புகள் மருத்துவத்துறையில் சிறப்பான பணிகளுக்கு தொடர்ந்து தூண்டுகோலாக இருக்கும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: மருத்துவத் துறையில் நீண்ட காலம் பணியாற்றி, தமது சேவையின் மூலம் பெரும் புகழை ஈட்டிய மருத்துவர் கே.எம்.செரியனின் மறைவு மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் தருகிறது. செரியனின் மறைவு மருத்துவத் துறைக்கு ஈடுசெய்ய முடியாதது.