புதுடில்லி, ஜன. 21 – முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழுவைக் கலைத்து விட்டு, தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அணைப் பாதுகாப்பு – 2021 சட்டத்தின்படி, 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. இதனிடையே, முல்லைப் பெரி யாறு அணையில் பரமாரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு முட்டுக்கட்டை போடுவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று (20.1.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அணையில் பராமரிப்பு பணிகளைச் செய்ய விடாமல், கேரள அரசு முட்டுக்கட்டைகள் போடுவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், அணைப் பாதுகாப்பு தொடர்பாக நிபுணர்கள் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும்; அணையை பாதுகாக்க நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என கேரள அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, “முல்லைப் பெரி யாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்குவதில் எந்த பிரச்சினை யும் இல்லை. எனவே, மீண்டும் மீண்டும் அதைப் பேச வேண்டிய அவசியம் இல்லை.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 2 தீர்ப்பு களையும் ஆய்வு செய்யத் தேவையே இல்லை” என கேரள அரசுத் தரப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், “அணையைப் பலப்படுத்தும் வழக்கை மட்டும் இங்கு விசாரிக்கலாம். அணை விவகாரத்தில் தொடர்ந்து இரு தரப்பும் குற்றம் சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “அணை கண்காணிப்புக் குழு தொடர வேண்டுமா, அல்லது அணைப் பாது காப்பு சட்டப்படி அமைத்த குழு வேண்டுமா? என்பது குறித்து இரு மாநிலங்களும் கருத்தை தெரிவிக்க வேண்டும்” எனக்கூறி, வழக்கை பிப்ரவரி 3 ஆவது வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.