அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய முயன்றார் , ஆனால் தோல்வியடைந்தார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி

viduthalai
2 Min Read

பாட்னா, ஜன.20-‘மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறியும் முயற்சியை கைவிட்டுவிட்டு, அதன் முன் பிரதமர் மோடி தலை வணங்கினார்’ என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் சார் பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினரே 90 சதவீதம் உள்ளனர். ஆனால், அரசு துறைகள் மற்றும் பிற உயர்பதவிகளில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுவதில்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

அவர்களுக்கு சம உரிமையை பெற்றுத் தரவே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு மக்களை முட்டாளாக்கும் செயல். அதைப் போல் அல்லாமல் மக்களின் வளர்ச்சியை உறுதிசெய்யும் வகை யில் தேசிய அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

50 சதவீத உச்சவரம்பு

தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீட்டில் விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும்.

அரசியல் மோதல்

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என ஒவ்வொரு பிரசாரத்திலும் பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்து வந்தனர்.
ஆனால் நமது கூட்டு முயற்சியால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கச் செய்யாமல் தடுத்து விட்டோம். இதனால் அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய முயன்ற பிரதமர் மோடி தனது முயற்சியில் தோல்வியடைந்தார். மாறாக அரசமைப்புச் சட்டத்துக்கு தலை வணங்கினார்.

அரசமைப்பு
சட்டத்திற்கு எதிராக…

அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிறகே நாட்டுக்கு உண்மை யான சுதந்திரம் கிடைத்ததாக
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான கருத்து.
அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் காங்கிரசுக்கும் அதற்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்சுக்கு இடையே அரசியல் ரீதியாக மோதல் நடை பெற்று வருகிறது என்றார் ராகுல்காந்தி.

குறை கேட்பு

பீகாரில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி 70-ஆவது ஒருங்கிணைந்த முதல்நிலை போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டி அதை ரத்து செய்யக்கோரி ஒரு மாத காலமாக தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் சென்ற ராகுல் காந்தியை போராட்டக் குழுவினர் சந்தித்து தங்களது குறைகளை எடுத்துக் கூறி, போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, ராகுல் அங்கு சென்று தேர்வர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *