அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகப் பேசும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்குமார்மீது
சி.பி.அய். கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவேண்டும்!
புதுடில்லி, ஜன.18 சமூகங்களுக்கி டையே வெறுப்பை விதைக்கும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்குமார்மீது, சி.பி.அய். கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்குரைஞர்கள் 13 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் 8 ஆம் தேதி விசுவ ஹிந்து பரிசத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய நீதிபதி சேகர்குமார் யாதவ், ‘‘பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின் அடிப்படையில்தான் இந்தியா செயல்படவேண்டும் என்றும், இஸ்லாமியர்களை வெறியர்கள் என்றும்’’ குறிப்பிட்டிருந்தார்.
பதவி நீக்கம் செய்ய
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
அரசமைப்புச் சட்டத்திற்கு முர ணாகப் பேசும் அவரை, பதவி நீக்கம் செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள், உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யா ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா நிகழ்ச்சியின் கருத்தரங்கில் சிறப்புப் பேச்சாளராக அவர் கலந்து கொள்வதாக விளம்பரம் வெளியாகி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம்!
இந்நிலையில், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் இந்திரா ஜெய்சிங், திரிசிலோய், ஆனந்த்குரோவர், ஜெய்தீப்குப்தா, வைகை, ஜெயத்பூஷண் உள்ளிட்ட 13 வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நேற்று (17.1.2025) எழுதியுள்ள கடிதத்தில்,
வெறுப்புப் பேச்சுத் தொடர்பாக நீதிபதி சேகர்குமார் யாதவ்மீது, சி.பி.அய். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
பதவிப் பிரமாணத்தின்
உறுதிமொழிக்கு எதிராக…
நீதிபதியின் சேகர்குமார் யாதவ், வெறுப்புப் பேச்சு, நீதித்துறையின் நடுநிலைமை, அரசமைப்புச் சட்டத்தின் மதிப்புகள் தொடர்பாக, பதவிப் பிரமாணத்தின்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக உள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக சேகர்குமார் யாதவை நியமிக்க முன்மொழியப்பட்டபோது, கொலிஜியத்தின் உறுப்பினராக இருந்த உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி சந்திரசூட், எதிர்ப்புத் தெரிவித்து, அப்பொழு தைய தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்ததாக அதி்ல் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அவருக்குப் போதிய அனுபவம் இல்லை என்றும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு உடையவர் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்த தாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பி னருக்கு நெருக்கமானவர் என்றும், உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க தகுதியே இல்லாதவர் சேகர்குமார் யாதவ் என பரிந்துரைக்கப்பட்டு இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட மதச் சாயத்தைப் பூசிக்கொண்டு பேசுகிறார்
தன்மீது ஒரு குறிப்பிட்ட மதச் சாயத்தைப் பூசிக்கொண்டு, பிற மதத்தவர்கள்மீது வெறுப்புப் பேச்சு பேசுவதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை உள்ளிட்டவற்றை பாரம்பரியம் என்று தெரிவித்ததாகவும், பலதாரத் திருமணம், முத்தலாக் உள்ளிட்டவற்றை விமர்சிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தின் நகல்கள், உச்சநீதிமன்ற கொலிஜிய உறுப்பி னர்களான மூத்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காந்த், ரிஷிகேஷ்ராய், அபய் எஸ்.ஓகா ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.