புதுடில்லி, ஜன.18 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 இல் தொடங்கவுள்ளது. 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட், பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
இரு கட்டங்களாக…
மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் நேற்று (17.1.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தொடக்க தினத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரவுபதி முர்மு உரையாற்றவுள்ளாா். இதைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
2025-2026 ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட், பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும். ஒன்றிய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8 ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளாா்.
முதல் கட்ட அமர்வு
பிப்ரவரி 13 இல் நிறைவடையும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமா்வு பிப்ரவரி 13 இல் நிறைவடையும். 2 ஆம்கட்ட அமர்வு மாா்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரை நடை பெறவுள்ளது.
முதல்கட்ட அமர்வில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்படும். பின்னா், பிரதமா் மோடியின் பதிலுரையுடன் அந்த அமர்வு நிறைவுபெறும்.
ஒன்றிய பட்ஜெட் பல ஆண்டுகளாக பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட்டுவந்த நிலையில், கடந்த 2017 இல் இருந்து பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.